போலி கடவுச்சீட்டுடன் நைஜீரிய பிரஜை கைது !

by wamdiness

போலி கடவுச்சீட்டுடன் நைஜீரிய பிரஜை கைது ! on Thursday, January 30, 2025

போலியாக தயாரிக்கப்பட்ட கானா நாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய நைஜீரிய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான நைஜீரிய பிரஜை 2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், இவருக்கு எதிராக நீர்கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸை நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டு வருவதாகவும் நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய பிரஜை நேற்றைய தினம் இரவு 08.55 மணியளவில் கத்தார் விமான சேவையின் QR – 655 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான நைஜீரிய பிரஜை தனது கானா நாட்டு கடவுச்சீட்டையும் ஏனைய ஆவணங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

நைஜீரிய பிரஜையின் கானா நாட்டு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களைச் சோதனையிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் அந்த கடவுச்சீட்டு போலியானது என உறுதி செய்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மையான கடவுச்சீட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்