டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு இந்த முறை எப்படி இருக்கும்? வட கொரிய அதிபர் என்ன செய்வார்?

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

  • எழுதியவர், லாரா பிக்கர்
  • பதவி, பிபிசி நியூஸ்

கிம் ஜாங் உன்னுடான வரலாற்று சந்திப்பிற்காக எதிரி மண்ணில் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாகக் காலடி வைத்தபோது, அதைத் தெளிவாக படம் பிடிக்க கேமராக்கள் சிரமப்பட்டன.

அது 2019ஆம் ஆண்டு. அமெரிக்காவின் அப்போதைய 45ஆவது அதிபர், வடகொரிய தலைவரின் கையை தட்டிக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக கிம், டிரம்பை தென் கொரியாவில் இருந்து தனது நாட்டைப் பிரிக்கும் எல்லையைத் தாண்டி அழைத்துச் சென்றார்.

அவர்களுக்குப் பின்னால், ராணுவம் நீக்கப்பட்ட பகுதியில், வடகொரிய பாதுகாவலர்களைத் தாண்டி ஒரு தெளிவான காட்சி கிடைக்க தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டனர்.

ஒரு கட்டத்தில், செய்தியாளர் ஒருவர் உதவி கோர, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் அவர்களை பாதுகாவலர்களுக்குப் பின்னால் இருந்து மீட்டு, டிரம்ப்- கிம் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

அந்தச் சந்திப்பு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. “உங்களை நான் இந்த இடத்தில் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை,” என டிரம்பிடம் கூறினார் கிம்.

அப்போது டிவிட்டர் என அறியப்பட்ட சமூக ஊடகத்தின் மூலம்தான் அந்தச் சந்திப்பையே டிரம்ப் ஏற்பாடு செய்தார். சேர்மன் கிம்மை ராணுவ கட்டுப்பாடு அற்ற பகுதியில் சந்தித்து கைகளைக் குலுக்கி ஹலோ சொல்ல விரும்புவதாக, சந்திப்பு நடப்பதற்கு வெறும் 30 மணிநேரத்திற்கு முன்பு, டிவிட்டரில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

அந்த திடீர் அழைப்புதான், விளம்பரப் பிரியரான ஒரு அதிபரும், தனிமை விரும்பியான ஒரு சர்வாதிகாரியும் சந்தித்துக்கொண்ட நம்ப முடியாத தருணத்தை உருவாக்கியது.

இப்போது அதேபோல மேலும் நிறைய நடக்கலாம் எனத் தெரிகிறது. பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் சான் ஹேனிட்டிக்கு கடந்த வியாழக்கிழமை அளித்த ஒரு நேர்காணலில், தாம் மீண்டும் கிம்மை தொடர்புகொள்ள இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

“அவருடன் என்னால் பழக முடிந்தது,” என்று சொன்ன டிரம்ப், “அவர் மதவெறி பிடித்தவர் அல்ல. அவர் ஒரு புத்திசாலி” என்றும் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே வெகு குறைவான தொடர்பே இருந்ததாகத் தெரிகிறது. அமெரிக்கா அழைப்புகளை அனுப்பியுள்ளது, ஆனால் பியாங்யாங்கில் இருந்து பதிலேதும் வரவில்லை.

முன்பு டிரம்ப் பதவியில் இருந்தபோது, இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்த கடைசி பேச்சுவார்த்தையில், வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதன் பின்னர், பல கடுமையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டாலும், கிம் தனது ஏவுகணை தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதுடன், ஒலியைவிட வேகமாகப் பாய்ந்து தாக்கும் ஏவுகணையைத் தயாரித்திருப்பதாகவும் கூறுகிறார்.

தாங்கள் இருவரும் “அன்புவயப்பட்டுவிட்டதாக” டிரம்ப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திற்கும், இதற்கும் வெகு தொலைவு உள்ளது.

‘அந்த உறவை மீட்டெடுக்க முடியுமா அல்லது இம்முறை கதையே வேறுவிதமாக இருக்குமா?’ என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி.

அமெரிக்கா இப்போது முற்றிலும் வேறு மாதிரியான ஒரு கிம்மை எதிர்கொள்ளும். கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது கூட்டணிகளும், அவரது அதிர்ஷ்டமும் மாறிவிட்டன. மற்றொரு உலகத் தலைவருடனான அவரது நட்பும் வலுவடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகையால், இவையெல்லாம் டிரம்புடனான கிம்மின் உறவை நிரந்தரமாக மாற்றிவிட்டன எனப் பொருள் கொள்ளலாமா?

டிரம்ப் – கிம் இடையிலான உறவு மீண்டும் உயிர்பெறுமா?

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விளம்பரப் பிரியரான அதிபர் டொனால்ட் டிரம்பும், தனிமை விரும்பியான சர்வாதிகாரி கிம் ஜாங் உன்னும் 2019இல் ராணுவம் அற்ற பகுதியில் சந்தித்தனர்.

அவர்களுக்கு இடையிலான உறவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?

“அது நிச்சயம் சாத்தியமானதுதான்,” என்கிறார் ஸ்டிம்சன் மையத்தைச் சேர்ந்தவரும், ஸ்டிம்சன் கொரியா திட்டத்தின் இயக்குநருமான ஜென்னி டவுன்.

“வடகொரியா உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு ஒரு சிறப்புத் தூதரை நியமிக்கும் டொனால்ட் டிரம்பின் முடிவில் இருந்து, இது தொடர்பாக அவரது சிந்தனை எவ்விதம் இருக்கிறது என நாம் ஓரளவு தெரிந்துகொள்ள முடிகிறது.”

கிம்முடனான சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களில், ஜெர்மனிக்கான முன்னாள் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் உள்ளிட்ட சிலரை டிரம்ப் திரும்பக் கொண்டு வந்திருக்கிறார். ரிச்சர்ட் கிரெனெல், வட கொரியா உள்ளிட்ட பகுதிகளுக்கான சிறப்பு செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அதிபரின் தூதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

“கடந்த 2017இல் இருந்த கிம் ஜாங் உன் இப்போது இல்லை என்று டிரம்பிடம் நிரூபிக்க வட கொரியா முதல் ஆண்டில் முயற்சி செய்யும். அவர் இப்போது ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்பைவிட வலுவடைந்து இருப்பதாகவும், மீண்டும் அந்தக் கட்டத்தை அடைந்தால், பேச்சுவார்த்தை முற்றிலும் வேறாக இருக்கும் என்றும் நிரூபிக்க முயற்சி செய்யும்” என வாதிடுகிறார் டவுன்.

கிம் ஒரு புதிய நண்பர் மீது அதிக அக்கறை காட்டுகிறார், அந்த நண்பர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

யுக்ரேனில் புதின் மேற்கொண்டிருக்கும் யுத்தத்திற்கு ஆயுதங்களையும், வீரர்களையும் அளித்ததற்குப் பதிலாக வடகொரியாவுக்கு உணவு மற்றும் எரிபொருள் கொடுத்து புதின் உதவியிருக்கிறார். ஆகையால், அமெரிக்கா விதித்த தடைகளில் இருந்து விலக்கு தேவைப்படும் நிலையில் பியாங்யாங் இல்லை.

வட கொரியா மக்களை டிரம்புக்கு தயார்படுத்தியது

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் ஒரு புதிய நண்பரை, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை, அரவணைக்கிறார்

டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவது குறித்து அரசு ஊடகங்கள் மூலம் தெரிவித்து மக்களை பியாங்யாங் “தயார்படுத்தியதாக” அமெரிக்க அரசுக்கான வட கொரிய ஊடக ஆய்வாளராக இருந்த ரேச்சல் மின்யங் லீ பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பைவிட அதிக முயற்சி தேவைப்படும் என அவர் நம்புகிறார்.

“பேச்சுவார்த்தைகள் நடக்க இரண்டு நிகழ்வுகள் நடந்தால்தான் சாத்தியம்” என்கிறார் அவர்.

“ரஷ்யாவுடனான வடகொரியாவின் உறவு கணிசமாக மோசடைந்து, வடகொரியாவின் பொருளாதாரம் நலிவடைந்து அந்நாடு பேச்சுவார்த்தைக்குத் திரும்பும் சூழல் ஏற்பட வேண்டும் அல்லது கடந்த காலத்தில் முன்வைத்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திட்டத்தை அமெரிக்கா வட கொரியாவுக்கு அளிக்க வேண்டும்.”

அண்மையில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வின்போது, “நான் அவருடன் மிகவும் நட்புடன் இருந்தேன். அவருக்கு என்னை பிடித்திருந்தது. இருவருக்கும் புரிதல் இருந்தது” என்று சொன்னதன் மூலம் டிரம்ப், கிம்முடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாக ஊகங்கள் வெளியாகின.

ஆனால் இம்முறை டிரம்ப் நிர்வாகம் எதார்த்தத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார், கடந்த ஆண்டு வரை அமெரிக்க தேசிய உளவு கவுன்சிலில் வட கொரியாவுக்கான தேசிய உளவு அதிகாரியாக இருந்த சிட்னி செய்லெர்.

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

“ஆயுதக் கட்டுப்பாடு என்பது திசை திருப்பும் ஒரு செயல். வட கொரியாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு என்பது சாத்தியமில்லை. நாங்கள் ஆயுதக் கட்டுப்பாட்டை முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,” என்கிறார் அவர்.

“ஒருவேளை வட கொரியா பேச்சுவார்த்தை நடத்தலாம், அதேபோல் அவர்கள் தொலைதூர ஏவுகணைகளை ஏவாமல் இருக்கலாம், ஏழாவது முறை அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருக்கலாம். அப்படி இருந்துவிட்டால் அதைப் பெரும்பாலும் சமாளிக்க முடியும். அனைத்தும் சிறப்பாகச் சென்றால் மட்டுமே இந்தச் சூழல் ஏற்படும்.”

ஒருவேளை, இருப்பதிலேயே மோசமான சூழல் என்றால், நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அவர்கள் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவிக் கொண்டிருப்பார்கள் என்கிறார் சிட்னி செய்லெர்.

“அவர்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்வார்கள். எனவே வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் என்ன பயன் என்பதை டொனால்ட் டிரம்ப் கருத்தில் கொள்ள வேண்டும்.”

அதிலும் குறிப்பாக, இருவருமே கடந்த சந்திப்பின் தழும்புகளை தாங்கிக் கொண்டிருப்பார்கள் என்பதும் ஒரு காரணம்.

செல்ஃபிகள், புகைப்பட வாய்ப்புகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஒரு மதிய விருந்து

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “நான் அவருடன் மிகவும் நட்பாக இருந்தேன். எங்கள் இருவருக்கும் பொருந்திப் போனது” – வட கொரிய தலைவர் பற்றி டிரம்ப் முன்னர் கூறியது

கடந்த 2018இல் தென் கொரியாவின் பியாங்யாங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஒரு எதிர்பாராத விருந்தினருடன் பார்த்து ரசித்தேன். எனது பால்கனி இருக்கைக்குக் கீழே கிம்மின் சகோதரி அமர்ந்திருந்தார்.

கொரிய யுத்தம் முடிந்த பிறகு கிம்மின் குடும்பத்தில் ஒருவர் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டது அதுவே முதல்முறை. கிம்மின் சகோதரிக்கு அருகில் அமர்ந்திருந்தது அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ். நான் கவனித்த வரை அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகம் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் இது சில மாதங்களுக்கு முன்புவரை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத ஓர் அசாதாரண நடவடிக்கை.

கடந்த 2017இல் டிரம்ப பதவியேற்றுக்கொண்டபோது அவருக்கு வட கொரியா குறித்த எச்சரிக்கை அளிக்கப்பட்டது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தடைகளுக்குப் பிறகும் அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரியாவுக்கு அழுத்தம் தர அதற்கு முந்தைய மூன்று அதிபர்களால் முடியவில்லை.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் கிம் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை மேற்கொண்டார்.

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாங்கள் இருவரும் ‘அன்பு வயப்பட்டதாக’ டிரம்ப் பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு. “அவரை மீண்டும் தொடர்பு கொள்வேன்’ என்று அவர் கடந்த வாரம் தெரிவித்தார்

தனது கோபத்தை டிவிட்டரில் வெளிப்படுத்திய டிரம்ப், வடகொரியா மீது நெருப்பையும் கோபத்தையும் பொழியச் செய்யப் போவதாகப் பதிவிட்டார். அவர் கிம்மை “தி லிட்டில் ராக்கெட் மேன்” என அழைக்க, அவருக்குப் பதிலடி அளிக்கும் வகையில் பியாங்யாங் டிரம்புக்கு “டோடார்ட்” எனப் பெயரிட்டது.

அதன்பிறகு அணு ஆயுத பொத்தானை அழுத்தப் போவதாக முதலில் பியாங்யாங்கில் இருந்தும் பின்னர் வாஷிங்டனில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன.

தன்னிடமும் ஒரு அணு ஆயுத பொத்தான் இருப்பதாக டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். “அவரிடம் இருப்பதைவிட என்னிடம் இருப்பது மிகப்பெரியது மட்டுமல்ல அதைவிட ஆற்றல் மிக்கதும்தான், என்னுடைய அணு ஆயுத பொத்தான் செயல்படக் கூடியது” என்றும் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

சியோலில் இருப்பவர்கள் போருக்குத் தயாராக வேண்டுமோ எனச் சிந்திக்கும் அளவுக்கு ஒரு வருடம் இரு தரப்பினரிடையே காரசார விவாதங்கள் நடந்தேறின. அதன் பின்னர் அனைத்தும் முற்றாக மாறின.

தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே-இன், பியாங்யாங்குடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சுலபமான ஒரு வழியைத் தேடிக் கொண்டிந்தார். அவரது பெற்றோர் வடக்கில் நடந்த யுத்தத்தில் இருந்து தப்பிய பின்னர் அவர் அகதிகள் முகாம் ஒன்றில் பிறந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற குடும்பங்கள் சந்திப்பின்போது, அவர் தனது உறவுக்கார பெண்மணி ஒருவரை அங்கு சென்று சந்தித்திருக்கிறார்.

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மைக் பென்ஸ், கிம் ஜாங் உன்னின் சகோதரிக்கு அருகே அமர்ந்திருந்தார்

வட கொரியாவும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியுமா என்று பியாங்யாங் கேட்டபோது, மூன் தலைமையிலான சியோல் அதைப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.

புதிய வரலாறு படைக்கப் போவதாகக் கூறிவிட்டு கிம்மை சந்திப்பதற்காக சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்.

வடகொரிய தலைவரோ, இரவு நேரத்தில் பளபளத்த நகர வீதிகளில் நடை பயின்று, செல்ஃபிகளை எடுத்தார். அவர் தனது நாட்டு எல்லையைத் தாண்டி பயணம் செய்தது அபூர்வம். ஆனாலும் தன்னால் கவனத்தைக் கவர முடியும் என நிரூபிக்கவே அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

ஆனால் கிம், டிரம்பை சந்தித்த பின்னரும், அவரது தனிப்பட்ட ராஜதந்திரம், வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கு உரிய உறுதிகளைப் பெறுவதற்கு எந்த வகையிலும் உதவவில்லை.

அணு ஆயுத குறைப்பிற்காக உழைப்பது என நீர்த்துப் போன ஓர் அறிக்கையில் இரண்டு தலைவர்களும் கையெழுத்திட்டதுடன், விரைவில் மீண்டும் சந்திப்பது என முடிவு செய்துகொண்டனர்.

இரண்டாவது முறை டிரம்பும், கிம்மும் வியட்நாமில் சந்தித்துக் கொண்டபோது எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாக இருந்தது. ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பதில் தனக்கு இருக்கும் திறமை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் ஓர் அமெரிக்க அதிபருக்கு, புகைப்படங்களை எடுத்துக்கொள்வது மட்டும் போதுமானதாக இருக்காது.

ஹனாய் நகரின் தெருக்களில், பிரெஞ்சு காலனி காலத்து மெட்ரோபோல் ஹோட்டல் கதவுகளுக்கு வெளியே, நாங்கள் மணிக்கணக்கில் காத்திருந்தோம். அங்கு அவர்கள் இருவரும் மதிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் மதிய விருந்து ரத்து செய்யப்பட்டது என்பதுதான் உண்மை.

பயனளிக்காத நடவடிக்கைகள்

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சொற்ப தொடர்பே இருந்ததாக பிபிசிக்கு தெரிய வந்தது

அந்தச் சந்திப்பில் என்ன தவறு நேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள பிபிசி மூன்று பேரிடம் பேசியது. இரண்டு தலைவர்களுமே தங்களுக்க்கான சாதகமான அம்சங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

அனைத்து அணு ஆயுதங்கள், அணுப் பொருட்கள் மற்றும் அணு உலைகளைக் கைவிட்டால், வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை விலக்கிக்கொள்ள டிரம்ப் முன்வந்தார்.

இந்தத் திட்டத்தை வடகொரியா கடந்த காலங்களில் பலமுறை நிராகரித்துவிட்டதாக அமெரிக்க அதிபரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வடகொரிய தலைவருடன் தமக்கு இருக்கும் நட்பு வெற்றியைத் தேடித் தரும் என்று அவர் நம்பினார்.

ஆனால் அது வெற்றியைத் தரவில்லை.

கிம்மோ, அதைவிடக் குறைவான ஓர் ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக் கொள்வார் என்று நம்பினார். தங்களுக்கு இடையில் இருக்கும் நட்பு தான் வெற்றி பெற உதவும் என கிம்மும் நம்பினார். 2016 முதல் அமெரிக்கா விதித்துள்ள அனைத்துத் தடைகளையும் நீக்கிக்கொண்டால் பழைய யாங்பையான் அணு மையத்தைக் கலைக்க அவர் முன்வந்தார்.

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் முன்வைத்த ஒப்பந்தம் டிரம்புக்கு போதுமானதாக இருக்கவில்லை. கிம் சற்றும் வளைந்துகொடுக்காமல் இருந்தார், என்று நிபுணர் ஒருவர் கூறுகிறார்

“சிங்கப்பூர், கிம் ஜாங் உன்னுக்கு கொஞ்சம் கௌரவத்தையும், அமெரிக்காவுக்கு புத்தி வந்து, தான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது என்ற நம்பிக்கையையும் கொடுத்தது,” என்கிறார் செய்லெர்.

“அவர் பேச்சுவார்த்தைக்கு ஒரு எதிர்பார்ப்புடன் வந்தார். டொனால்ட் டிரம்ப் அரசியல் ரீதியாக நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறார், அவர் ஜான் போல்டன் சொல்வதைக் கேட்பதில்லை, உங்களுடைய அணு ஆயுத திட்டத்தின் ஒரு சிறு பகுதியைக் கைவிடுவதற்கு பிரதிபலனாக தடைகளை விலக்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார் என்று தென் கொரியாவை சேர்ந்தவர்கள் அவருக்கு ரகசியமாக பலவிதமாக போதனை செய்து அனுப்பியிருந்தனர்.”

ஆனால் அமெரிக்க அதிபரிடமும் அதிகாரிகள் விளக்கியிருந்தனர். வடகொரியாவால் இன்னமும் பியாங்யாங் அருகே உள்ள மையத்தில் யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அவரிடம் சொல்லப்பட்டது. வட கொரியா தாங்கள் ரகசியமாக வைத்திருப்பதாக நம்பிக்கொண்டிருந்த பிற அணு ஆயுத மையங்களைக் கண்காணித்து வந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

“எங்களுக்குத் தெரியும் என்பது அவர்களை ஆச்சரியப்படுத்தியதாக நினைக்கிறேன்,” என்று டிரம்ப் பின்னர் சொன்னார்.

கிம் முன்வைத்த ஒப்பந்தம் ஒன்றுமில்லாதது அல்ல, ஆனால் அது அமெரிக்க அதிபருக்குப் போதுமானதாக இருக்கவில்லை. “கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைக்கு வருகிறார். ஆனால் அவரிடம் மாற்றுத் திட்டம் இருக்கவில்லை,” என்கிறார் செய்லெர்.

எனவே “நாம் இதைவிடக் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் சொல்லும்போது, கிம் ஜாங் உன் சற்றும் வளைந்து கொடுக்கத் தயாராக இல்லை.”

ஒப்பந்தத்தை காக்க கிம் முயன்றாரா?

வடகொரியா: டிரம்ப், கிம் ஜாங் உன் நட்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயுதங்கள் மற்றும் வீரர்களை அளித்ததற்கு பிரதிபலனாக வட கொரியாவுக்கு புதின் உணவு மற்றும் எரிபொருளைக் கொடுத்து உதவியுள்ளார்

கிம் ஒப்பந்தத்தைக் காப்பாற்ற முயன்றதாக பிபிசி தனது வட்டாரங்கள் மூலம் தெரிந்துகொண்டது. ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் யாங்பையான் அணு மையம் முழுமையாக அகற்றப்படும் என அமரிக்காவுக்கு நினைவுபடுத்த ஒரு உதவியாளரை கிம் அனுப்பி வைத்தார்.

ஆனால் டிரம்ப் அதற்கு முன்பே விமான நிலையத்திற்குப் புறப்பட்டுவிட்டார்.

“ஹனாயில் நடந்த கதை சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்,” என்கிறார் செய்லெர்.

“டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை அறையிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்பதுதான் பொதுவான புரிதல். அனைத்தும் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்பதுதான் அவரது ஒப்பந்தம். ஆனால் அனைத்தையும் கைவிட கிம் ஜாங் உன் தயாராக இல்லாததால் டொனால்ட் டிரம்ப் வெளியேறினார். அதுதான் ஹனாயில் நடந்தது பற்றிய சாமானியர்களின் சராசரி புரிதல்.”

டிரம்ப் வாஷிங்டனுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, இதுவரை இல்லாத வகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்த வடகொரியர்கள் நடவடிக்கை எடுத்தனர். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமலே போய்விடலாம் என்று வெளியுறவு அமைச்சர் ரி யாங் ஹோ செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் சொன்னதைப் போலவே இதுவரை அது நடைபெறவில்லை. மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன் கிம் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வாய்ப்புள்ளது. “அங்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு இருந்தது” என்கிறார் ஜென்னி டவுன்.

“ஒரு திருப்புமுனையின் விளிம்பில் நிற்பதாகவும், அது பலன்களைக் கொண்டு வரும் என்றும் வடகொரியாவில் மக்கள் மத்தியில் கிம் ஜாங் உன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.”

“அந்தத் தருணத்தை நாம் பயன்படுத்திக்கொண்டிருந்தால், நாம் முற்றிலும் வேறொரு பாதையில் சென்றிருக்கக் கூடும். அணு ஆயுதங்களை சுலபமாக நீக்கிவிட்டிருப்போமா? நிச்சயம் இல்லை.

ஆனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைத் தணிப்பதிலும், அணு ஆயுத வளர்ச்சியில் வடகொரியா அடைந்திருக்கும் இடமும் வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும். நமக்கு எப்போதும் தெரியப் போவதில்லை, ஆனால் தற்போது இல்லாத ஒரு முனைப்பு அப்போது இருந்தது.”

டொனால்ட் டிரம்பின் வழக்கத்திற்கு மாறான ராஜாங்க நடவடிக்கை பதற்றத்தைச் சிறிது காலம் குறைத்தது, ஆனால் அது பியாங்யாங்கின் ஆயுத விரிவாக்கத்தைத் தடுக்கவில்லை.

வடகொரியாவுக்குள் டிரம்ப் எடுத்து வைத்த 20 அடிகள், இந்த பூமியில் மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட ஓர் ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்க காரணமாகிவிட்டிருக்கலாம்.

ஆனால் மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு டொனால்ட் டிரம்புக்கும் கிம் ஜாங் உன்னுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றியது. அது, கொரிய தீபகற்பத்தில் ஏதோ ஒரு நாள் அமைதி திரும்பும் என்ற சிறிய நம்பிக்கையை அளித்தது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு