மத நிகழ்வுகளில் நடக்கும் மரணங்கள்: தமிழ்நாட்டில் நடந்தது எப்போது தெரியுமா?

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 30 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் மதரீதியான விழாக்களில் பெரிய அளவில் பக்தர்கள் குவியும்போது இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோல நிகழ்ந்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் மௌனி அமாவாசை தினத்தன்று (ஜனவரி 28) ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் மரணமடைந்தனர். சுமார் 60 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவுக்கு இந்த முறை மொத்தமாக 45 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, குறிப்பிட்ட தினங்களில் ஒரே நேரத்தில் பலர் கூடும் மதக் கூடல்களின்போது நெரிசல் ஏற்படுகிறது.

இதுபோன்ற திருவிழாக்களின்போது, அதைக் கட்டுப்படுத்துவது விழா ஏற்பாட்டாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகவும் சவாலான காரியமாகிவிடுகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதுமே நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகள் இதுபோல நடந்துள்ளன. 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் நடந்த மகாமகத்தில் இதுபோல நெரிசல் ஏற்பட்டு சுமார் 50 பேர் மரணமடைந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

1992 மகாமக நெரிசல் ஏற்பட்டது எப்படி?

கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம், 1992ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புனித நீராடுவதற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி வி.கே. சசிகலாவும் பங்கேற்றனர். அந்தத் தருணத்தில்தான் நெரிசல் ஏற்பட்டு, சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர்.

கடந்த 1992ஆம் ஆண்டில் நடந்த மகாமகத்திற்கு 40 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் மகாமகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, தான் அந்த விழாவில் பங்கேற்கப் போவதாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.

மகாமக தினத்தன்றுதான், நட்சத்திரப்படி அவரது பிறந்த நாள் வருவதால், அன்று மகாமக குளத்தில் நீராட அவர் முடிவு செய்திருந்தார். இதையடுத்து அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் சிக்கலானதாக மாறின. மேற்குக் கரைப் பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

முந்தைய மகாமகங்களில் பக்தர்கள் கிழக்கு மற்றும் வடக்குக் கரை வழியாக குளத்தின் உள்ளே இறங்கி நீராடிவிட்டு, மேற்கு மற்றும் தெற்கு கரை வழியாக வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்த முறை மேற்குக் கரையின் ஒரு பகுதி முதல்வருக்காக ஒதுக்கப்பட்டது. தெற்குக் கரையின் ஒரு பகுதி அவரது வாகனங்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி லட்சக்கணக்கானவர்கள் குளத்தைச் சுற்றிக் குவிந்தனர். காலையிலேயே சுமார் 60,000 பேர் குளத்திற்குள் இருந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் குளத்திற்குள் இறங்கத் துவங்கினர். அந்த நேரத்தில் முதலமைச்சர் வந்த ஹெலிகாப்டர் வானத்திலேயே ஐந்து முறை வட்டமிட்டது. பிறகு, 11.30 மணியளவில் முதலமைச்சரும் அவரது தோழி சசிகலாவும் குளத்திற்குள் இறங்கினர். 21 வெள்ளிக் குடங்களில் இருந்த புனித நீரை முதலமைச்சரின் மீது ஊற்றினார் சசிகலா.

கும்பகோணம் மகாமகம் குளம்

பட மூலாதாரம், Getty Images

இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, 11.50 மணியளவில் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வடக்குக் கரை பகுதியில் நெருக்க ஆரம்பித்தது. காவல்துறையினர் தடியடி நடத்த ஆரம்பித்தனர்.

குளக்கரையின் இரு பக்கங்களிலும் தடுப்புகள் போடப்பட்டு இருந்ததால், தடியடியிலிருந்து தப்பிக்க கூட்டத்தினர் முயன்றாலும் எங்கும் ஓட முடியவில்லை. அதே நேரம் குளத்திற்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டு, பலரும் வடக்குக் கரையை நோக்கி ஏற ஆரம்பித்தனர். ஏற்கெனவே வடக்குக் கரையை ஒட்டிய சாலையில் கூட்டம் போக வழியில்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

நெரிசலில் இருந்து தப்பிக்க அங்கிருந்த பாங்கூர் தர்மசாலாவின் கிரில் மீது சிலர் ஏறினர். இதில் அந்த கிரில்லும் இடிந்து கூட்டத்தின் மீதே விழுந்தது. இதிலும் பலர் உயிரிழந்தனர்.

ஜெயலலிதா இருந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இது நடந்தாலும் அவருக்கு இது தெரியாது எனச் சொல்லப்படுகிறது. கூட்டத்திலிருந்து வெளியேறிய ஜெயலலிதா அங்கிருந்த மகளிர் கல்லூரியில் இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்தார். உள்ளூர் மக்கள் சிலரையும் சந்தித்தார். அதற்குப் பிறகு அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய பிறகே முதலமைச்சருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்கான முதல் ஆம்புலன்ஸ் 30 நிமிடங்கள் கழித்தே வந்தது. ஆனால், முதலமைச்சரின் வருகையால்தான் இது நடந்தது என்பதை அரசு மறுத்தது.

“முதலமைச்சர் 11.30 மணிக்கு வந்துவிட்டு, 12.15க்கு வெளியேறிவிட்டார். பாங்கூர் தர்மசாலாவில் வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டிருந்தது. அங்கு ஏற்பட்ட நெரிசலால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததாலும் கிரில் விழுந்ததாலும் நெரிசல் ஏற்பட்டது. உயிரிழப்புகளுக்கு இதுவே காரணம்” என்றது அரசு. முதலமைச்சரை கூட்டம் நெருங்கிவிடாமல் இருப்பதற்காக தடியடி நடத்தப்பட்டது என்பதையும் அரசு மறுத்தது.

ஒட்டுமொத்தமாக ஐம்பது பேர் வரை இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. பிறகு, அந்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஜெயலலிதா பதவியேற்று ஓராண்டுக்குள் நடந்த இந்த நிகழ்வு, அவர் ஆட்சியின் மீதான முதல் கறையாக அமைந்தது.

2011 சபரிமலை துயரம்

சபரிமலையில் கூட்ட நெரிசலுக்கு பிறகு கலைந்து கிடந்த கடைகள்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2011ஆம் ஆண்டில் சபரிமலையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் குறைந்தது 102 பேர் பலியாயினர். அந்த ஆண்டு மகர விளக்கை தரிசிக்க ஜனவரி 14ஆம் தேதியன்று புல்மேடு பகுதியில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர்.

பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தென்பட்டவுடன், அதைத் தரிசித்துவிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் காட்டுப் பகுதியில் வண்டிப் பெரியாறை நோக்கித் திரும்ப ஆரம்பித்திருந்தனர். அந்தத் தருணத்தில் பக்தர்களை ஏற்றி வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

அந்தத் தருணத்தில் மிகக் கரடுமுரடான அந்தப் பாதையில் இருட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தட்டுத்தடுமாறிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடந்த ஜீப் சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தவே, நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கிப் பலர் உயிரிழந்தனர். ஜீப் மோதியதாலும் கவிழ்ந்ததாலும் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட இந்த நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகமாக இருந்தன.

விபத்து நடந்து இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே காவல்துறையினரும் மீட்புப் படையினரும் அந்த இடத்தை வந்தடைந்தனர். அந்தத் தருணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வாகனங்களும் வெளியேறிக் கொண்டிருந்ததால் விபத்து நடந்த இடத்தை அடைவதே பெரும் சிக்கலாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக 102 பேர் இந்த விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டது. சில ஊடக செய்திகள் 104 பேர் பலியானதாகத் தெரிவித்தன.

2019 அத்திவரதரைத் தரிசிக்க வந்த நிகழ்வில் ஏற்பட்ட உயிர் பலிகள்

காஞ்சிபுரம் அத்திரவரதர் கோயில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலியாயினர். மொத்த பலி எண்ணிக்கை ஏழாக இருந்தது.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை கோவில் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பக்தர்களின் தரிசனத்திற்காக அத்திவரதரின் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது.

தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்துச் சென்றனர். ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் ஜூலை 18ஆம் தேதி கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் சிக்கி காவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அன்றைய தினத்தில் மட்டும் நான்கு பேர் பலியாயினர். இந்த நிகழ்வுக்கு முன்பு இருவர், இதற்குப் பின் ஒருவர் என மொத்தமாக 7 பேர் பலியாயினர்.

2015 திருப்பதி கோவில் நெரிசலில் பக்தர்கள் பலி

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி ஆந்திராவின் திருப்பதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது ஆறு பேர் பலியானார்கள். 48 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பதியில் வருடாந்திரமாக நடக்கும் வைகுண்ட ஏகாதசி தரிசனம் இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்வைப் பார்க்க விரும்பும் பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 94 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனவரி 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை ஐந்து மணியில் இருந்து டோக்கன்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், புதன்கிழமை காலையிலிருந்தே இந்த டோக்கனை பெற ஆயிரக்கணக்கானவர்கள் குவிய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள ராமச்சந்திர புஷ்கரணி மற்றும் பைராகிபெட்டாவில் அமைந்துள்ள விஷ்ணு நிவாசம் கேந்திராஸ் ஆகிய இடங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 48 பேர் காயமடைந்தனர்.

மத நிகழ்வுகளில் நடக்கும் மரணங்கள்: தமிழ்நாட்டில் நடந்தது எப்போது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

1954 அலகாபாத் கும்பமேளா விபத்து

கும்பமேளாவை பொறுத்தவரை, தற்போது ஏற்பட்ட நெரிசல் மரணங்களைப் போலவே, இதற்கு முன்பும் நிகழ்ந்திருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பிந்தைய முதல் கும்பமேளா அலகாபாதில் (பிரயாக்ராஜ்) 1954இல் நடைபெற்றது. அப்போதும் இதேபோல மௌனி அமாவாசை தினத்தன்று பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமம் பகுதியில் குவிந்தனர்.

அந்தத் தருணத்தில் யானை ஒன்று ஓடியதால், பக்தர்கள் அங்குமிங்கும் சிதறினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்தமாக 800 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, முக்கிய விருந்தினர்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செல்லக்கூடாது என அப்போதைய பிரதமர் நேரு அறிவுறுத்தினார்.

1986 ஹரித்வார் கும்பமேளா விபத்து

மத நிகழ்வுகளில் நடக்கும் மரணங்கள்: தமிழ்நாட்டில் நடந்தது எப்போது தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1986ஆம் ஆண்டு ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்றது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அப்போதைய உத்தர பிரதேச முதலமைச்சர், வேறு சில மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஹரித்வாருக்கு சென்றார். இதனால், பக்தர்கள் சில ஆற்றங்கரைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டது.

இதனால், பிற இடங்களில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். இதேபோல 1992இல் உஜ்ஜயினி நகரில் நடந்த சிம்ஹஸ்தா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு நாசிக்கில் நடந்த கும்பமேளாவிலும் நெரிசல் ஏற்பட்டுப் பலர் உயிரிழந்தனர். தைனிக் ஜாகரன் வெளியிட்ட செய்திகளின்படி, அந்தத் தருணத்தில் துறவிகள் சிலர் வெள்ளிக் காசுகளைப் பரிசளித்துள்ளனர். அதைப் பெற எல்லோரும் முண்டியடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2010இல் ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நான்’ தினத்தன்று அங்கிருந்த சாதுக்கள் சிலருக்கும் பக்தர்கள் சிலருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நெரிசல் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அலகாபாதில் (பிரயாக்ராஜ்) 2013ஆம் ஆண்டு கும்பமேளா நடந்த தருணத்தில் ரயில் நிலையத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர். அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதில் 29 பேர் பெண்கள்.

இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது நெரிசல் ஏற்பட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். தண்டவாளங்களைக் கடப்பதற்கான நடைமேடையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு