உ.பி.யில் சானிடரி நாப்கின் கேட்டதால் மாணவி வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டாரா? என்ன நடந்தது?

சானிடரி நாப்கின் கேட்டதால் வகுப்பறை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெய்ரேலியில் மாணவி ஒருவர், சானிடரி நாப்கின் கொடுக்காமல் வகுப்பறையை விட்டு வெளியேற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
  • எழுதியவர், கிர்த்தி ராவத்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேசத்தில் உள்ள பெய்ரேலியில், ஆசிரியரிடம் சானிடரி நாப்கின் கேட்டதற்காகத் தான் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்துள்ளார்.

இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்று பள்ளி நிர்வாகம் மறுத்தாலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்டையில் விசாரணை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட பள்ளி ஆய்வாளருக்கு மாணவியின் தந்தை எழுதிய புகார் கடிதத்தில், “ஜனவரி 24ஆம் தேதியன்று, தனது தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும்போது, எனது மகளுக்கு சானிடரி நாப்கின் தேவைப்பட்டுள்ளது. அப்போது அவர் தலைமை ஆசிரியரிடம் நாப்கின் கேட்டுள்ளார். தலைமை ஆசிரியர் எனது மகளை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்து, அவரை உள்ளே அனுமதிக்கவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

பிபிசியிடம் தொலைபேசி மூலம் பேசிய மாணவியின் தந்தை, “எனது மகள் வீட்டுக்கு வந்தபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். எனது மனைவி என்னை அழைத்து நடந்ததைக் கூறினார். எனது மகளின் ஆடைகள் நனைந்து போயிருந்ததாகவும், தலைமை ஆசிரியர் சானிடரி நாப்கின் தர மறுத்ததாகவும் கூறினார். பிறகு நான் தலைமை ஆசிரியரிடம் செல்போனில் பேசினேன்” என்றார்.

பள்ளியில் சானிடரி நாப்கின் வழங்குவதற்கான வசதிகள் இல்லையா என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆசிரியர்களிடம் பேசிய பிறகு தனக்குத் தகவல் தெரிவிப்பதாக அவர் கூறியதாகவும் மாணவியின் தந்தை தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“எனது மகள் வீட்டுக்கு வந்த கோலத்தைப் பார்த்தால் எந்தவொரு தந்தையாக இருந்தாலும் மிகவும் வேதனைப்படுவார். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எனது மகளுக்கு ஏற்பட்ட சூழலை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு சானிடரி நாப்கின் வழங்கியிருக்க வேண்டும்.

தலைமை ஆசிரியரிடம் பேசும்போது, எனது மகள் தனக்குத் தேவையான நாப்கின்களை வைத்திருந்திருக்க வேண்டும் என்று கூறினார். சானிடரி நாப்கின்கள் பள்ளியில் கிடைக்கும்போது, அதை என் மகளுக்கு ஏன் தரவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரும் விசாரணை அதிகாரிகளும் பள்ளிக்கு வருமாறு தன்னை அழைத்ததாக மாணவியின் தந்தை தெரிவித்தார்.

மாணவி என்ன கூறுகிறார்?

தேர்வு எழுதத் தொடங்கி 15 நிமிடங்களில் தனக்கு மாதவிடாய்க்கான ரத்தப்போக்கு தொடங்கியதாகவும் உடனே தனக்கு நாப்கின் தேவைப்பட்டதாகவும் மாணவி கூறுகிறார்.

மாணவியைத் தொடர்புகொண்டு பிபிசி பேசியபோது, “எனக்கு மாதவிடாய்க்கான ரத்தப்போக்கு தொடங்கியபோது, எனது வகுப்பறையில் இருந்த ஆசிரியரை அணுகினேன். அவர் என்னை தலைமை ஆசிரியரிடம் கேட்கச் சொன்னார்,” என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அந்த மாணவி, “நான் தேர்வு எழுதுவதைப் பாதியில் விட்டுவிட்டு தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றேன். அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், எனவே நான் முதலில் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது தேர்வை எழுதி முடிப்பதற்குள் எனது ஆடைகள் முழுவதும் நனைந்துவிட்டன,” என்று கூறினார்.

பிறகு தனது தோழிகள் தங்கள் நாப்கின்களை தருவதாகக் கூறியதாகவும், அதன் பிறகு தனது தோழி துணை தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் வகுப்பாசிரியரிடம் பேசச் சொல்லி அனுப்பிவிட்டதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.

மேலும், தனக்கு இறுதிவரை சானிடரி நாப்கின் வழங்கப்படவில்லை என்றும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டுகிறார்.

“வகுப்பாசிரியர் வரவில்லை என்று எனது தோழிகள் துணை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர், பள்ளி முடியப் போகிறது, வீட்டுக்குச் சென்று ஆடைகளை மாற்றிக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார்” என்று மாணவி கூறினார்.

சானிடரி நாப்கின் கேட்டதால் வகுப்பறை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மேலும் பேசிய மாணவி “எனது ஆடைகள் மிகவும் நனைந்து போயிருந்தன. நான் அப்படியே வீட்டுக்குச் செல்ல முடியாது. எனவே எனது தோழிகள் ஆங்கில ஆசிரியரிடம் சென்றனர். அவரும் எங்களை தலைமை ஆசிரியரைப் பார்க்கும்படி கூறினார்.

அனைத்து ஆசிரியர்களிடமும் பேசிய பிறகு, தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றோம். அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். எங்களை இரண்டு நிமிடங்கள் காத்திருக்குமாறு கூறினார். நான் 15 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்தேன்” என்று விவரித்தார்.

நீண்ட நேரமாகக் காத்திருந்த பிறகு, “அவளுக்கு சானிடரி நாப்கின் தர முடியாதா” என்று தனது தோழி தலைமையாசிரிடம் கடிந்து பேசியதாக மாணவி கூறுகிறார்.

“உடனே தலைமை ஆசிரியர் எங்களைத் திட்டினார். அங்கிருந்தவர்களிடம் எங்களை வெளியேற்றும்படி கூறினார். பள்ளி முடியும் நேரம் ஆகிவிட்டது என்றும் கூறினார்” என்று சம்பந்தப்பட்ட மாணவி நடந்ததை விவரித்தார்.

குற்றச்சாட்டுகளை மறுக்கும் பள்ளி நிர்வாகம்

சானிடரி நாப்கின் கேட்டதால் வகுப்பறை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி

பட மூலாதாரம், ஆஷிஷ்

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை சம்பந்தப்பட்ட மாணவி சந்திக்கவில்லை என்று அவர் பிபிசியிடம் பேசும்போது கூறினார்.

“மாணவி என்னைச் சந்திக்க வரவில்லை. ஆசிரியர்தான் என்னிடம் வந்து பேசினார். நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன், ஆசிரியரை காத்திருக்குமாறு கூறியிருந்தேன். பிறகு, அந்த மாணவி வீட்டுக்குச் சென்றுவிட்டதாக ஆசிரியர் என்னிடம் கூறினார்” என்று தலைமையாசிரியர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். “மாவட்ட பள்ளி ஆய்வாளரும் இரண்டு விசாரணை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்தனர். பள்ளியில் சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரம் இருக்கிறது. நாங்கள் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கி வருகிறோம்” என்று அவர் மேலும் விளக்கினார்.

பெய்ரேலி மாவட்ட பள்ளி ஆய்வாளர் அஜித் குமார் மாணவியின் தந்தை புகார் கடிதம் அளித்ததாகக் கூறினார்.

“எங்களுக்கு 25ஆம் தேதி புகார் கிடைத்தது. இரண்டு பெண் போலீசார் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தோம். நாங்கள் 27ஆம் தேதி பள்ளிக்கு நேரில் சென்றோம். தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களிடமும் பேசினோம். அன்றைய தினம் விடுமுறை என்பதால், மாணவியைச் சந்திக்க இயலவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் பள்ளி ஆய்வாளர் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு