மேட்டுப்பாளையம்: தம்பி மற்றும் அவரின் காதலியை ஆணவக் கொலை செய்த அண்ணனுக்கு மரண தண்டனை
மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில், தம்பியையும், அவரின் காதலியையும் வெட்டிக் கொன்ற அண்ணன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு குறித்துப் பேசிய அரசு வழக்கறிஞர் பவானி பா.மோகன், “இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் வினோத் திட்டமிட்டே ஆயுதத்துடன் அத்துமீறி வீட்டிற்குள்ளே நுழைந்து, சாதியைக் குறிப்பிட்டுக் கடுமையாகப் பேசி கொடூரமாகத் தாக்கி கொன்றுள்ளார், தடுக்க வந்த வர்ஷினியையும் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் வினோத்குமாருக்கு இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கியுள்ளார்,” என்று கூறியுள்ளார்.
ஆணவக் கொலை பின்னணி என்ன?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – பூவாத்தாள் தம்பதிக்கு, வினோத்குமார்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டில், கனகராஜ், வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்ய கனகராஜ் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக கனகராஜின் சகோதரர்கள் இதைக் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
வர்ஷினி பிரியா வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறி கனகராஜின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அவரை கனகராஜின் குடும்பத்தினர் கடுமையாக விமர்சித்து, திருப்பி அனுப்பி விட்டனர்.
தனது வீட்டுக்கும் திரும்ப முடியாத நிலையில், மீண்டும் கனகராஜ் வீட்டிற்கு வர்ஷினி பிரியா வந்தபோது மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கனகராஜின் தந்தை கருப்பசாமி, தனது மகன் கனகராஜை தனியாக வீடு பார்த்துச் செல்லுமாறும் குடும்பத்தாரை சமாதானம் செய்த பிறகு, திருமணம் செய்து வைப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் இந்த ஏற்பாட்டை விரும்பாத அண்ணன் வினோத்குமார், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, 2019 ஜூன் 28ஆம் தேதியன்று கனகராஜின் வீட்டிற்குச் சென்று, அந்தப் பெண்ணை திருப்பி அனுப்புமாறு தம்பியுடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டது.
அப்போது வினோத்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜை வெட்டியுள்ளார். அப்போது குறுக்கே வந்த வர்ஷினியையும் அவரின் தாய் அமுதா முன்பாகவே வினோத் குமார் வெட்டித் தாக்கியுள்ளார். இதில் கனகராஜ் அதே இடத்தில் உயிரிழந்தார். வர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்த காரணத்திற்காக, தனது உடன் பிறந்த தம்பியை வெட்டிய இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், வினோத் குமாருடன் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி வினோத்குமார் என்று நீதிபதி விவேகானந்தன் குறிப்பிட்டு, மற்ற மூவர் மீதான குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், தண்டனை விவரங்களை ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
“குற்றவாளி மரண தண்டனை தரும் அளவுக்கான” குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, இந்த ஆணவக் கொலையில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டுமென்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் பா.மோகன் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
அதிகபட்ச தண்டனை வழங்க முகாந்திரம் உள்ளதால், அனைத்துத் தரப்பினருக்கு இறுதி வாதத்துக்கு நேற்று வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது வினோத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார், ”இது அரிதிலும் அரிதான வழக்கு இல்லை. தம்பி மீதான கோபத்தில்தான் கொலை செய்ய வேண்டுமென்று சென்றாரே தவிர, அந்தப் பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் செல்லவில்லை. எனவே அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடாது” என்று வாதிட்டார்.
ஆனால், “சாதி மாறி திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காகத் தனது தம்பியை வினோத் குமார் வெட்டிக் கொலை செய்தார், அதைத் தடுக்க வந்த அவரது காதலியையும் கொலை செய்தார்” என்று வாதிட்ட அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பா.மோகன், வன்கொடுமையோடு சேர்த்து இந்த இரட்டைக் கொலை நடந்திருப்பதால் இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காகக் கருத வேண்டுமென்று வலியுறுத்தினார்.
வர்ஷினியின் தாயார் அமுதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகனும் இதே வாதத்தை முன் வைத்தார்.
இறுதி வாதங்களைக் கேட்ட நீதிபதி விவேகானந்தன், இந்த வழக்கில் குற்றவாளியான வினோத்குமாருக்கு மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அரசு வழக்கறிஞர் பா.மோகன், ”இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 448இன் படி, வீட்டிற்குள் அத்துமீறிச் சென்று தாக்கியதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302இன் கீழ், இரட்டைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக தண்டனை இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், ”இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதுதான், சரித்திரப்பூர்வமான ஒரு நிகழ்வாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் இத்தகைய தீர்ப்பு கிடைத்திருப்பது சிறப்பு வாய்ந்தது.
கோகுல்ராஜ் வழக்கிற்குப் பின்னும், தமிழகத்தில் தீண்டாமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதற்கேற்ப கண்ணகி–முருகேசன், திவ்யா–இளவரசன், சங்கர்–கெளசல்யா எனப் பல்வேறு ஆணவக் கொலைகள் நடந்து வந்தன. இந்தத் தீர்ப்பு, இவற்றைத் தடுப்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்குமென்று நம்புகிறோம்,” என்றும் தெரிவித்தார்.
வர்ஷினியின் தாய் கூறுவது என்ன?
இந்தத் தீர்ப்பு ஆறுதல் தருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா, தன்னுடைய மகள் இறந்த நாளில் இருந்து இப்போது வரையிலும் இந்தத் தீர்ப்புக்காக 300 முறை இந்த நீதிமன்றத்துக்கு நம்பிக்கையுடன் வந்ததாகவும் கூறினார்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் இனி நிகழாதவாறு, சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
”எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இரண்டாவது மகள்தான் வர்ஷினி பிரியா. மற்ற இருவரும் திருமணமாகி, குழந்தைகளுடன் இருக்கின்றனர். ஆனால் என் மகள் வர்ஷினி இப்போது எங்களுடன் இல்லை. என் கண்முன்னே அவளைக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். என் மகளின் கொடூர மரணத்துக்கு இன்றுதான் தகுந்த தண்டனை தரப்பட்டுள்ளது” என்றும் அமுதா தெரிவித்தார்.
அமுதா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் பாலமுருகன், ”சாதி ஆதிக்க உணர்வில் நடந்த கொலை என்றுதான் இந்த வழக்கில் வினோத்குமார் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்குமாறு வாதிட்டோம். ஆனால் அரிதிலும் அரிதான இரட்டைக்கொலை வழக்கு என்பதால் நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு