மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: நள்ளிரவில் என்ன நடந்தது? நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி பலரும் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கும்பமேளாவின் முக்கியமான புனித நாளான இன்று அதிக பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள கூட்ட நெரிசல், தவறு எங்கே நடந்தது? என்ற பூதாகரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இம்மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். அதிலும், ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான இன்றைய கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் மட்டும் அங்கே சுமார் 10 கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படியே, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துவிட்டதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை கூறியுள்ளது.
சில இடங்களில் தடுப்புகளை மீறி மக்கள் சென்றதே நெரிசலுக்கு காரணம் எஎன கும்பமேளா ஏற்பாடுகளை கவனிக்கும் அதிகாரி ஆகாங்ஷா ராணா தெரிவித்தார். எனினும், அங்கே நிலைமை கைமீறிப் போய்விடவில்லை என்றும் அவர் கூறினார்.
காயமடைந்த மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் வீடியோக்களை சமூக ஊடகமாமான எக்ஸ் தளத்தில் பார்க்க முடிகிறது.
இதையடுத்து, மௌனி அமாவாசை நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் பல ஊடக தகவல்கள் கூறுகின்றன.
நேரில் கண்டவர்கள் என்ன சொன்னார்கள்?
கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரு பெண், ஐ.ஏ.என்.எஸ். செய்தி முகமையிடம் பேசுகையில், தன்னைக் காப்பாற்றுமாறு பாதுகாப்புப் படையினரிடம் முறையிட்டதாகவும், ஆனால் நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் தன்னைக் காப்பாற்ற வரவில்லை என்றும் கூறினார்.
கூட்ட நெரிசல் திடீரென ஏற்பட்டதாகவும், மக்கள் வெளியேற வழி கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பி.டி.ஐ. செய்தி முகமையிடம் மற்றொரு பெண் தெரிவித்தார்.
சம்பவம் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் போது, மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரைச் சேர்ந்த மற்றொரு நபர், ‘அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை, யாரும் உதவ வரவில்லை, பலர் காயமடைந்தனர்’ என்று கூறினார்.
தனது தாய் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும் அந்த நபர் கூறினார்.
எங்கே, என்ன தவறு நடந்தது? பூதாகரமாக எழும் கேள்விகள்
பிரயாக்ராஜ் நகரில் இருந்து நேரடியாக தகவல்களை அளிக்கும் பிபிசி செய்தியாளர் சமிரா ஹூசைன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஆற்றங்கரையில் பெரும் குழப்பம் நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்களின் உடைமைகள், உடைகள், காலணிகள், போர்வைகள் மற்றும் பைகள் சிதறிக்கிடந்தன. அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு மத்தியில் சில உடல்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அங்கே, தகவல் பரிமாற்றத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது. என்ன நடந்தது அல்லது என்ன நடந்து கொண்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஒரு ஸ்ட்ரெச்சருக்கு முன்னே ஒரு பெண் கண்ணீருடன் நடந்து சென்றதை கண்டேன். மற்றொரு ஆண் ஸ்ட்ரெச்சரின் அருகே நடந்து சென்று உடலை சால்வையால் மூட முயன்றார்.
இவை அனைத்தும் பக்தர்கள் புனித நீராட கூடும் முக்கிய இடத்தில் நடந்தது. குறிப்பாக, இந்த முக்கியமான புனித நாளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவார்கள் என்று அதிகாரிகள் அறிந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
எங்கே, என்ன தவறு நடந்தது? என்பது குறித்து கடுமையான கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு, இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
கும்பமேளாவில் இன்றைய தினத்தின் முக்கியத்துவம் என்ன?
குறிப்பிட்ட கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் அடிப்படையில், கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன.
அதன்படி, நடப்பு கும்பமேளாவில் புனித நீராட 6 நாட்கள் மிகவும் புனிதமானவையாக கருதப்பட்டன.
- 13 ஜனவரி: பௌஷ் பூர்ணிமா
- ஜனவரி 14: மகர சங்கராந்தி
- ஜனவரி 29: மௌனி அமாவாசை
- 3 பிப்ரவரி: பசந்த பஞ்சமி
- பிப்ரவரி 12: மாக் பூர்ணிமா
- பிப்ரவரி 26: மகா சிவராத்திரி
ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன.
அந்த 3 நாட்களிலும் கூட ஜனவரி 29-ம் தேதியான இன்றைய தினம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. கும்பமேளாவில் மிகப்பெரிய அளவில் மக்கள் இன்றைய தினம் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய விழா இது?
- பரப்பளவு: 4,000 ஹெக்டேர்
- 160,000 கூடாரங்கள்
- 40,000 காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்
- 15,000 துப்புரவு பணியாளர்கள்
- அரை மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு 99 வாகன நிறுத்துமிடங்கள்.
- ஆற்றின் மீது 30 மிதக்கும் பாலங்கள்
- 67,000 தெரு விளக்குகள்
- 150,000 கழிப்பறைகள்; 25,000 கழிவுத் தொட்டிகள்
- 200 தானியங்கி தண்ணீர் குழாய்கள் மற்றும் 85 குழாய் கிணறுகள், போன்ற பல்வேறு வசதிகள் இத்திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- கும்பமேளாவை நடத்துவதற்கு 70 பில்லியன் ரூபாய் (812 மில்லியன் டாலர், 665 மில்லியன் யூரோ) செலவழிப்பதாக இந்திய அரசாங்கம் கூறியது.
- உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வின் மூலம் மாநில அரசு 250 பில்லியன் ரூபாய் (2.9 பில்லியன் டாலர் ; 2.3 பில்லியன் யூரோ ) வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு