டீப்சீக்: அமெரிக்க ஜாம்பவான்களை அச்சுறுத்தும் சீன செயலி – என்ன பயன்? எவ்வாறு செயல்படும்?

டீப்சீக், சீன செயலி, அமெரிக்கா, சாட்ஜிபிடி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பிராண்டன் ட்ரெனான்
  • பதவி, பிபிசி செய்தி

சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடலான டீப்சீக் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்பிள் ஸ்டோரில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.

அது மட்டுமின்றி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிற ஏ.ஐ நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது டீப்சீக் செயலி, குறைந்த செலவில் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மிகவும் அற்புதமான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில் ஒன்று” என்று டீப்சீக் ஏ.ஐ குறித்து சிலிகான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள முதலீட்டாளர் மார்க் ஆண்டர்சன் பாராட்டியுள்ளார்.

டீப்சீக் நிறுவனத்தின் சமீபத்திய ஏஐ மாதிரிகள், அமெரிக்காவில் உள்ள சாட்ஜிபிடி போன்ற பிற தொழில்துறை முன்னணி மாதிரிகளுக்கு இணையாக உள்ளன. அது மட்டுமின்றி, அவை தயாரிப்பதற்கும் மிகவும் மலிவானவையாக உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த செயலியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், இதை உருவாக்க 6 மில்லியன் டாலர் மட்டுமே செலவானதாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பிற ஏ.ஐ நிறுவனங்கள் செலவழித்த பில்லியன்களை விட, இந்தத் தொகை மிகக் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீப்சீக், சீன செயலி, அமெரிக்கா, சாட்ஜிபிடி

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

டீப்சீக் என்றால் என்ன?

டீப்சீக் என்பது தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில் நிறுவப்பட்ட சீன செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது, ஆனால் பிரபலமான அதன் ஏ.ஐ பயன்பாடு ஜனவரி 10 வரை அமெரிக்காவில் வெளியிடப்படவில்லை என்று சென்சார் டவர் தெரிவித்துள்ளது .

டீப்சீக்கின் நிறுவனர் யார்?

லியாங் வென்ஃபெங் என்பவர் டீப்சீக்கை தொடங்கினார். தகவல் மற்றும் மின்னணு பொறியியலில் பட்டம் பெற்ற 40 வயதான லியாங், தற்போது சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள என்விடியா ஏ100 சிப்களை வாங்கிச் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது

லியாங் வென்ஃபெங்கிடம் இருந்த சுமார் 50,000 என்விடியா ஏ 100( Nvidia A100) சிப்கள், டீப்சீக்கைத் தொடங்க அவருக்கு உதவியதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இறக்குமதி செய்யக்கூடிய மலிவான, குறைந்த மதிப்புடைய சிப்களுடன், இந்த உயர்நிலை சிப்களை இணைப்பதன் மூலம், டீப்சீக்கைத் தொடங்க அவருக்கு வழியமைந்தது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

தொழில் வல்லுநர்களுக்கும் சீனப் பிரதமர் லி கியாங்கிற்கும் இடையிலான சமீபத்திய சந்திப்பிலும் லியாங் காணப்பட்டார்.

டீப்சீக்கை யார் பயன்படுத்துகிறார்கள்?

டீப்சீக் நிறுவனத்தின் இலவச ஏஐ செயலியானது, ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் அதன் இணையதளத்தில் கிடைக்கிறது.

இலவச சேவையான டீப்சீக், விரைவாக ஆப்பிள் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது. ஆனாலும் அதில் பதிவு செய்வதில் மக்களுக்கு சிக்கல் இருப்பதாக சில தகவல்கள் உள்ளன.

அதைத் தொடர்ந்து, ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் அமெரிக்காவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற இலவச செயலியாகவும் இது மாறியுள்ளது.

டீப்சீக் செயலியால் என்ன பயன்?

அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவால் பிரபலமடைந்துள்ள டீப்சீக், சாட்ஜிபிடி போலவே செயல்படுகிறது.

ஆப் ஸ்டோரில் கொடுக்கப்பட்டுள்ள அதன் விளக்கத்தின்படி, இது “உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் வாழ்க்கையை திறமையாக மேம்படுத்தவும்” வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த செயலி எழுத்துக்கு அதிக ஆளுமையை அளிக்கிறது” என்று அதன் பயனர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை சாட்போட் தவிர்க்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1989ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி அன்று தியனன்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது என்று பிபிசி அந்த செயலியிடம் கேட்டபோது, “என்னை மன்னிக்கவும், அந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் உதவிகரமான மற்றும் பாதிப்பில்லாத பதில்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ உதவியாளர்” என்று ​​டீப்சீக் பதிலளித்தது.

அமெரிக்க ஜாம்பவான்களை அச்சுறுத்துவது ஏன்?

அமெரிக்கப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட டீப்சீக், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியது.

மேலும், அமெரிக்காவின் ஏஐ ஆதிக்கத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது.

இந்த நிறுவனத்தின் குறைந்த செலவுகள் ஜனவரி 27 அன்று நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, இணைய தொழில்நுட்பங்களுக்கான நாஸ்டாக் பங்குச் சந்தை 3 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இதன் மூலம், அமெரிக்காவை தளமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவை இயக்கும் சக்திவாய்ந்த சிப்களை உருவாக்கி வரும் என்விடியா நிறுவனம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜனவரி 27, 2025 திங்கட்கிழமை, என்விடியா கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பங்கு விலை ஒரே நாளில் 17 சதவீதம் சரிந்தது.

என்விடியா ஒரு காலத்தில் அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில் (அதன் பங்குகளின் மொத்த மதிப்பு) உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.

ஆனால், திங்களன்று, அதன் சந்தை மதிப்பு 3.5 டிரில்லியன் டாலரில் இருந்து 2.9 டிரில்லியன் டாலராகக் குறைந்தது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்க நிறுவனமாக, மூன்றாவது இடத்தை என்விடியா அடைந்தது என அறியப்படுகின்றது.

மேலும் என்விடியாவால் உருவாக்கப்பட்டதை விட குறைவான செமிகண்டக்டர் சிப்களை டீப்சீக் பயன்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவில் முன்னேற்றம் அடைய, அதிகளவிலான பொருட்செலவு மற்றும் அதிநவீன சிப்கள் மட்டுமே அவசியம் என்ற கருத்தை டீப்சீக்கின் வெற்றி சவால் செய்கிறது.

அது மட்டுமின்றி, டீப்சீக் நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உயர் செயல்திறன் கொண்ட சிப்களுக்கான எதிர்காலத் தேவை குறித்த நிச்சயமற்ற தன்மையும் தற்போது உருவாக்கியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு