GBS : நோய் அறிகுகள், தடுப்பு வழிகள்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் கியான் பரே சின்ட்ரோம் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சோலாபூரில் ஒருவர் இந்த நோயினால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

மாநிலத்தில் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒர் உயர்நிலை குழுவை அனுப்பியுள்ளது.

இந்த நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் மருத்துவ உலகில் கண்டறியப்படவில்லை. எனினும் சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு காரணமாக ஏற்படும் தொற்று, இந்த நோய் பாதிப்புக்கு இட்டு செல்லலாம் என்று நம்பப்படுவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகள் என்ன?

தசை சார்ந்த பாதிப்புகளே இந்த நோயின் முதல் கட்ட அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • கைகள் அல்லது கால்கள் திடீரென பலவீனமடைதல் அல்லது மரத்து போதல்
  • நடப்பதில் சிரமம் அல்லது திடீரென தசை பலவீனம் ஏற்படுவது
  • தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நோய் தடுப்பு வழிகள் என்ன?

இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்ட பிறகு உருவாகுவதால், சுகாதாரம் பேணுவதே இந்த நோயை தடுக்க முக்கியமான வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது
  • சாப்பிடும் உணவு சுத்தமானதாக இருக்க வேண்டும், சமைத்த உடன் சாப்பிட வேண்டும்.
  • தனிப்பட்ட சுகாதாரம் பேண வேண்டும்
  • சமைத்த மற்றும் சமைக்காத உணவை ஒன்றாக கலக்க வேண்டாம். இதனால் தொற்று ஏற்படலாம்.

கியான் பரே சின்ட்ரோம் என்றால் என்ன?

கியான் பரே சின்ட்ரோம் என்பது அரிய வகை நோயாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தவறுதலாக நரம்பு மண்டலத்தை தாக்கும் போது இந்த நோய் ஏற்படும்.

இந்த நோய் முதலாம் உலகப் போரின் போதே முதலில் கண்டறியப்பட்டது. சோம் போரில் இரண்டு வீரர்களுக்கு கை கால்கள் முடங்கிப் போயின. அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராணுவ நரம்பியல் மருத்துவர்கள் கியான், பரே மற்றும் ஸ்ட்ரால் இந்த நோய் குறித்து ஆராய்ந்தனர். பிறகு இந்த நோய் கியான் பரே சின்ட்ரோம் என்றழைக்கப்பட்டது.

GBS : நோய் அறிகுகள், தடுப்பு வழிகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த நோய் எதன் காரணமாக ஏற்படுகிறது?

இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும் ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு இந்த நோய் பாதிப்பு உடலில் உருவாகிறது என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காம்பிலோபாக்டர் ஜெஜுனி (Campylobacter jejuni ) எனும் தொற்று காரணமாக வயிறு கோளாறு ஏற்படும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படக் கூடும். பல பேருக்கு இந்த தொற்று ஏற்பட்ட பிறகே, கியான் பரே சின்ட்ரோம் பாதிப்பு உருவாகியுள்ளது.

சில நேரங்களில் ஜிகா, சிக்குன்குனியா, தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள், காயங்கள் ஆகியவற்றோடு கியான் பரே சின்ட்ரோம் தொடர்புப்படுத்தப்படுகிறது.

உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?

உடலின் எதிர்ப்பு சக்தி நரம்பு மண்டலத்தை தாக்குவதால் மூளைக்கும் தசைகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது.

இதனால் தசை பலவீனம், மரத்து போதல் ஆகியவை ஏற்படக் கூடும். நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால், முடக்குவாதம் ஏற்படலாம்.

இந்த நோய் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். எனினும் பெரியவர்கள் குறிப்பாக ஆண்களுக்கே பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தீவிர பாதிப்புகள் காரணமாக முடக்குவாதம் மட்டுமல்லாமல் சுவாச கோளாறுகளும் ஏற்படக் கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துவிடுகிறார்கள்.

தசை பாதிப்பு ஏற்படுவதால், பல நோயாளிகள் பிசியோதெரபி, பேச்சு பயிற்சி செய்ய வேண்டியுள்ளது.

நரம்பியல் மருத்துவர் கஸ்துப் மஹஜன், “இந்த நோய் எந்த வயதிலும் ஏற்படலாம், நோய் அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தென்படலாம். அறிகுறிகள் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்படுவதும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்குவதும் நோயாளி முழுமையாக குணமடைய அவசியமாகும்.” என்கிறார்.

பொதுவாக உடலில் ஒரு தொற்று ஏற்படும் போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்ப்பதற்காக புரதங்களை வெளியிடும். அது ஆன்டிபாடி எனப்படும்.

கியான் பார சின்ட்ரோம் நோய் பாதிப்பின் போது, “உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகள் இருக்கின்றனவா என்று நவீன மருத்துவ தொழில்நுட்பம் கொண்டு கண்டறிந்து மருந்துகள் கொடுக்கப்படும். பிளாஸ்மா மாற்று சிகிச்சை இதற்கு உதவக் கூடும். டயாலிசிஸ் போன்ற அந்த சிகிச்சையில் ரத்தத்தில் உள்ள தீங்கு செய்யும் ஆன்டிபாடிகளை வெளியேற்றப்படும்” என்கிறார் கஸ்துப் மஹஜன்

மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தீவிர சிகிச்சை நிபுணர், மருத்துவர் அஜித் தம்போல்கர் கூறுகிறார்.

“பதட்டமடைய வேண்டாம். உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டால், பெரும்பாலான நோயாளிகள் குணமாகிவிடுவர். குடிநீர் மற்றும் சுற்றுச்சூழலை சுகாதாரமாக பேணுவது நோய் வராமல் தடுக்க மிக முக்கியமானதாகும். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்” என்கிறார்.

GBS : நோய் அறிகுகள், தடுப்பு வழிகள்

பட மூலாதாரம், Getty Images

இந்த நோயால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த நிலேஷ் அபங் பிபிசியிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

“2019ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி எனக்கு கியான் பரே சின்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டது. நான் மே மாதம் 30ம் தேதி வரை வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தேன். நான்கு மாதங்களுக்கும் மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளேன். கழுத்துக்கு கீழ் எனது உடல் முடங்கிவிட்டது. எனது நுரையீரல்கள் மிகவும் பலவீனமாகின. ஆனால் மருத்துவ சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மூலம் நான் முழுவதுமாக குணமடைந்தேன்” என்று நினைவு கூர்ந்தார்.

உடல் பாதிப்பு மட்டுமல்லாமல் நோயாளியும் அவருடன் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று கூறும் நிலேஷ், தன்னை போன்று பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு நேர்மறையான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நோயாளிகளை நான் பார்த்துள்ளேன், அவர்களுடன் பேசியுள்ளேன். அவர்களில் பலர், முழுவதும் குணமடைந்து வாழ்கிறார்கள். வென்டிலேட்டரில் இருந்தவர்கள் கூட முழுவதுமாக குணமடைந்துள்ளனர்” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு