AI உலகில் புதிய சகாப்தம்: சீன செயலியின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா?
- எழுதியவர், லிலி ஜமாலி
- பதவி, பிபிசி நியூஸ்
-
சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் வரவால் தொழில்நுட்ப துறை ஆட்டம் கண்டுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு துறையில், தாமே தான் நம்பர் ஒன் என்று கருதும் அமெரிக்காவின் இறுமாப்பையும் அசைத்துள்ளது.
“டீப்சீக்-ஆர் என்பது ஏஐ துறையின் ஸ்புட்னிக்” என்று மார்க் ஆன்றீசென் என்ற தொழில் முதலீட்டாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு இடையே போட்டியை தூண்டிவிட்ட, ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை அவர் குறிப்பிடுகிறார். தற்போது நடைபெறுவதை சொல்வதற்கு இதுவே மிக சரியான வார்த்தைகள்.
வார இறுதியில் ஆப்பிளின் அமெரிக்க ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி டீப் சீக். திங்கட்கிழமைக்குள் இந்த செயலி, தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அமெரிக்காவின் முன்னிலை குறித்த பயம் எழுந்ததன் காரணமாக பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
வால் ஸ்ட்ரீட்டின் ( உலக பங்கு சந்தைகளின் தலைமையிடமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமைந்திருக்கும் பகுதி) செல்லப்பிள்ளையாக இருந்த செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிக்கும் நிறுவனமாக நிவிடியாவின் பங்குகள் திங்கட்கிழமை சந்தை மூடிய போது 17% குறைந்திருந்தது. அதாவது 600 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பை சந்தித்துள்ளது என்விடியா. ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் படி, அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றில் இதுவே மிகப் பெரிய சரிவாகும்.
சரி, இவ்வளவு பெரிய சரிவு எதனால் ஏற்பட்டது?
பதில் மிகவும் எளிது. ‘விலை’ . மிக குறைந்த விலையில், அதாவது குறைந்த செலவில் டீப்சீக் செயலி செய்யப்பட்டது என்று அதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். சிலிகான் பள்ளத்தாக்கில் ( உலக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக கருதப்படும் வட கலிஃபோர்னியாவில் உள்ள பகுதி) இது மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மிக குறைந்த செலவில் டீப்சீக் உருவாக்கம் – உண்மையா?
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ நிறுவனம் பணத்தை கொட்டி கொட்டி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ஐந்து பில்லியன் டாலரை அந்நிறுவனம் செலவிட்டுள்ளது. ஆனால் டீப்சீக் செயலியை வெறும் 5.6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியதாக அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது, செயற்கை நுண்ணறிவு உலகின் ஜாம்பவான்களான ஓபன் ஏ ஐ, கூகுள், ஆன்த்ரோபிக் நிறுவனங்கள் செலவிடுவதை ஒப்பிடும் போது மிக சிறிய பங்காகும்.
செயற்கை நுண்ணறிவு துறையின் இந்த வியத்தகு தருணத்தில், சிலிகான் பள்ளத்தாக்கில் ஒரு வித அமைதி நிலவியது. வழக்கமாக பேசுவதற்கு தயாராக இருப்பவர்கள் இந்த முறை மௌனமாக இருந்தனர். பல முதலீட்டாளர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் திகைத்துப் போயிருந்தனர்.
சிலர் இது வாங்குவதற்கான தருணமா என்று யோசித்தனர். மேலும் சிலர் டீப்சீக் வழங்கியுள்ள தகவல்களை கேள்விக்குள்ளாக்கினர்.
“உண்மை இன்னும் வெளியே வரவில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது” என்கிறார் மூத்த ஆய்வாளர் ஜீன் மன்ஸ்டர். டீப்சீக் கூறும் செலவினங்களை அவர் கேள்வி எழுப்புகிறார். இந்த நிறுவனத்துக்கு சலுகைகள் தரப்பட்டுள்ளதா, இந்த நிறுவனம் வழங்கும் தரவுகள் சரியா என்று அவர் கேட்கிறார் .
“டீப்சீக் செயலி மிகவும் நன்றாக வேலை செய்கிறது. அதனால் தான் இந்த தரவுகளை நம்புவது கடினமாக உள்ளது” என்று கூறும் மன்ஸ்டர், எப்படியிருந்தாலும் டீப்சீக்-ன் திடீர் வருகை, சீனாவின் ‘பெருமை’ மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்துறைக்கு ‘பின்னடைவு’ என்கிறார்.
கடந்த வாரம் தான் ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆரக்கிளின் லாரி எலிசன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
ஸ்டார்கேட் என்ற கூட்டு நிறுவன திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ப்படும் என்று அறிவித்தனர். இந்த முதலீடு, செயற்கை நுண்ணறிவு கட்டுமானத்துக்காக, டெக்சாஸ் நகரம் மற்றும் அதையும் தாண்டியிருக்கும் பகுதிகளில் தகவல் மையங்களை அமைத்து, ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரிய வகை உலோகங்களையும் பொறியியல் திறனையும் சீனா கொண்டிருந்த போதிலும், அளவுக்கு அதிகமான தகவல் மையங்கள் மற்றும் அதிநவீன சிப் (கணினி வன்பொருள்) கொண்டுள்ளதால் செயற்கை நுண்ணறிவு உலகில் தானே முன்னோடி என்று அமெரிக்க நினைத்திருக்கக் கூடும்.
சில உயர் மட்ட அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி, அமெரிக்கா தான் செயற்கை நுண்ணறிவு உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற முடிவுக்கு சிலர் வந்திருக்கலாம். அமெரிக்கா இன்னமும் செயற்கை நுண்ணறிவு உலகில் முன்னோடியாக இருக்கலாம். ஆனால் அதன் கர்வத்தை டீப்சீக் சற்று அசைத்துப் பார்த்துள்ளதாகவே கருதப்படுகிறது.
சீன செயலியின் திடீர் வருகையை அடுத்து, டிரம்ப் கூறிய வார்த்தைகள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்திருக்காது. இது ஒரு “எச்சரிக்கை மணி” என்று குறிப்பிட்ட டிரம்ப், குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்குவது “நல்ல விசயம்” என்றார்.
ஆற்றல் சார்ந்த பங்குகளும் வீழ்ச்சி – காரணம் என்ன?
பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்ல, ஆற்றல் சார்ந்த பங்குகளும் வீழ்ச்சியடைந்தன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்குவது குறித்து நீண்ட காலமாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை புரட்டி போட்டுவிட்டது டீப் சீக்.
அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு தேவையான ஆற்றலை தயாரிக்க, ஆலை உருவாக்கப் போவதாக கூறியிருந்தது. அப்படியொரு ‘அணு மறுமலர்ச்சி’ தேவைப்படாது போலிருக்கிறது. அவ்வளவு முதலீடு, அவ்வளவு ஆற்றல் தேவைப்படாது போல.
இப்போதைக்கு, என்விடியா உள்ளிட்ட செமி கண்டக்டர் ஜாம்பவான்களின் எதிர்காலம் தெளிவற்றதாக இருக்கிறது.
சீன ஆப்பின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா?
டீப்சீக் ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, யார் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கும் மென்பொருளை கொண்டு உருவாக்கப்பட்டது என்று அதனை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் WIREDஎன்ற செய்தி இணையத்தில், டீப்சீக் நிறுவனர் லியாங் வென்ஃபங் பல ஆண்டுகளாக GPU (Graphic Processing Unit) எனும் வன்பொருளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
என்விடியா தயாரித்த H800 என்ற சிப்களை பயன்படுத்தியதாக டீப்சீக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக திறன் படைத்த சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்யக் கூடாது என்ற அமெரிக்க கொள்கை புதிய டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மறு ஆய்வு செய்யப்படலாம்.
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் எக்ஸ் தளத்தில் திங்கட்கிழமை பெரிதாக எந்த பதிவையும் இடவில்லை. ஆனால் அன்றிரவு, “டீப்சீக் சிறப்பானது…அதுவும் அந்த விலையில் அவர்கள் தருவது” என்று பதிவிட்டிருந்தார்.
“நாங்கள் நிச்சயமாக மேலும் சிறப்பான விசயங்களை தருவோம், புதிய போட்டியாளர் வந்திருப்பது உண்மையிலேயே புத்துணர்ச்சியாக இருக்கிறது” என்றும் கூறியிருந்தார்.
விண்வெளி ஆய்வில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் ஒரு புதிய யுகத்தை தொடங்கியது. அப்போதும் அமெரிக்கா எதிர்ப்பார்க்காத போது தான் அது நடைபெற்றது. ஒரு சீன நிறுவனத்திடமிருந்து வந்துள்ள இந்த சவாலுக்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்படி பதிலளிக்கப் போகின்றன என்பது சுவாரஸ்யமாக இருக்கும். இது உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவு உலகில் போட்டியை முடுக்கிவிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு