மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு – நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?

மகப்பேறு விடுப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ராஜாஜி மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)
  • எழுதியவர், நித்யா பாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

மதுரையில் அரசு ஊழியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு விடுப்பு அளிக்க அரசு மறுத்த நிலையில், அந்த பெண்ணுக்கு விடுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியருக்கு மூன்றாவது கர்ப்ப காலத்திற்கான மகப்பேறு விடுப்பை வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது. முதல் திருமணத்தின் மூலம் ஏற்கெனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புகளை அப்போது எடுக்கவில்லை.

தற்போது இரண்டாவது திருமண பந்தத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்த அவர், மகப்பேறு விடுப்புக்காக விண்ணப்பித்தபோது அது மறுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடினார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மகப்பேறு விடுப்பு எடுக்க அனைத்து விதமான உரிமைகளும் அவருக்கு உள்ளது என்று கூறி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 365 நாட்கள், சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இரண்டு குழந்தைகளின் பிரசவத்திற்கு மட்டுமே அத்தகைய விடுப்பை எடுக்க இயலும்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு மகப்பேறு விடுப்பு 270 நாட்கள் (9 மாதங்கள்) இருந்தது. செப்டம்பர் 17, 2021 அன்று மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 365 நாட்களாக நீட்டிக்கப்பட்டு அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

இது மத்திய அரசு வழங்கும் மகப்பேறு விடுப்பைக் காட்டிலும் கூடுதல் காலத்தைக் கொண்டுள்ளது.

ராஜாஜி அரசு மருத்துவமனை தரப்பில் எந்தக் காரணங்களை முன்வைத்து அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்தத் தீர்ப்பில் கூறியது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

வழக்கின் பின்னணி என்ன?

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ராதா* (பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மூன்றாம் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

அவர் 2008ஆம் ஆண்டு முதல் ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டில் அவருடைய பணி நிரந்தரம் செய்யப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானார். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்ததால் தமிழக அரசு செயல்முறைப்படுத்திய மகப்பேறு விடுப்பை அவரால் எடுக்க இயலவில்லை.

அவரின் திருமணத்தில் ஏற்பட்ட விரிசலால் 2020ஆம் ஆண்டு அவர் விவகாரத்து பெற்றார். சில காலம் கழித்து அவர் வேறொருவரை மறுமணம் செய்து கொண்டார். அந்தத் திருமண உறவின் மூலம் அவர் மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி முதல் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வரை, 12 மாத கால மகப்பேறு விடுப்பு கேட்டு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் இது அவரின் மூன்றாவது கர்ப்பம் என்று குறிப்பிட்டு அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

மேலும், மகப்பேறு விடுப்பின்றி இதர விடுப்பு அம்சங்களின் கீழ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று மருத்துவ விடுப்பின் கீழ் 90 நாட்களும், மருத்துவ சான்றின் அடிப்படையில் 169 நாட்களும், ஊதிய இழப்புடன் கூடிய விடுப்பு 106 நாட்களும் என 365 நாட்களுக்கு விடுப்பு வழங்குமாறு விண்ணப்பித்தார்.

ஆனால் நிர்வாகம் இதை முடிவெடுக்க இயலாது என்று கூறிய ராஜாஜி மருத்துவமனை, மருத்துவ வாரியத்தை அணுகுமாறு கூறியது. அவருடைய விண்ணப்பத்தைப் பரிசீலித்த மருத்துவ வாரியம், செப்டம்பர் 24 அன்று வெளியிட்ட உத்தரவில், இது அவருடைய மூன்றாவது குழந்தை என்பதால், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் விடுப்பு வழங்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தது.

ராதாவுக்கு பிரசவ நாள் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30 என்று மருத்துவர்களால் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ வாரியம் செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று ”ராதா மீண்டும் பணிக்கு வர முழு தகுதியுடன் உள்ளார். எனவே பணிக்குத் திரும்பி வரவேண்டும்,” என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

மருத்துவ நிர்வாகம் மகப்பேறு விடுப்பை மறுத்தது மற்றும் மருத்துவ வாரியம் மீண்டும் பணிக்கு வர வெளியிட்ட உத்தரவு என இரண்டையும் எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார் ராதா.

சட்டப்படி இது செல்லுமா? நீதிமன்ற தீர்ப்புகள் கூறுவது என்ன?

மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது மகப்பேறுக்கு விடுப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு - பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

ராதா சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் மலைக்கனி பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டினார்.

ராதா மூன்றாவது முறையாக கர்ப்பம் அடைந்தாலும், இப்போதுதான் முதல் முறையாக மகப்பேறு விடுப்புக்காக விண்ணப்பித்துள்ளார். மூன்றாவது முறை கர்ப்பம் என்பதைக் காரணமாக வைத்து அந்த விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது என்று வாதிட்டார் வழக்கறிஞர் மலைக்கனி.

கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் vs தொழிற்துறை சார்புச் செயலர் வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், அரசுத்துறையில் பணியாற்றும் பெண் அவரின் பணிக் காலத்தில் 2 முறை மகப்பேறு விடுப்பைப் பெறலாம் என்று குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டினார்.

‘முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்காக மகப்பேறு விடுப்பு எடுக்கவில்லை என்றால், இரண்டாவது திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்க உரிமையுண்டு’ என்று 2023ஆம் ஆண்டு வந்த கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள் – விதி 101 (a)-வின் படி, இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். ஆனால் ராதாவுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருப்பதால், விதிகளின்படியே மகப்பேறு விடுப்பு வழங்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

“அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கான உடல் தகுதியைக் கொண்டுள்ளார் என்பதால்தான் மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என்று மருத்துவ வாரியம் கூறியது . ஆனாலும் அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை,” என்றும் வாதாடினார் அவர்.

நீதிபதியின் தீர்ப்பு

மகப்பேறு விடுப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ராஜாஜி மருத்துவமனை

பட மூலாதாரம், https://ecommitteesci.gov.in/

படக்குறிப்பு, இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஆர் விஜயக்குமார், மருத்துவ நிர்வாகம் மற்றும் வாரியத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்டார்

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஆர் விஜயக்குமார், மருத்துவ நிர்வாகம் மற்றும் வாரியத்தின் செயல்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானது என்று குறிப்பிட்டார்.

மேலும் ராதா தன்னுடைய விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையிலான மகப்பேறு விடுப்பை உடனே வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தன்னுடைய தீர்ப்பில் இரண்டு மகப்பேறு விடுப்புகளுக்கான அடிப்படை விதிகள் ஏன் உருவாக்கப்பட்டது என்றும், இந்த விதிகளைத் தாண்டியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்புகளை வழங்க உள்ள சாத்தியமான கூறுகளையும் குறிப்பிட்டிருந்தார்.

“பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்படும் பொருளாதார தட்டுப்பாடு போன்றவற்றைக் கவனத்தில் கொண்டே, பல குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்க இத்தகைய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஒரு பெண் பல குழந்தைகளைப் பெறும்போது அவர்களுக்காக நீட்டிக்கப்படும் மகப்பேறு விடுப்பு காரணமாக ஏற்படும் நிதி சார் அழுத்தத்தைக் குறைக்கவே இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன,” என்பதை மேற்கோள்காட்டினார் நீதிபதி.

“இந்த வழக்கில் இதற்கு முன்பு அவர் மகப்பேறு விடுப்பை எடுக்கவில்லை. இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பெறும் உரிமையை மகப்பேறு விடுப்பு விதிகளை வைத்து மறுக்கக்கூடாது.

இந்த மகப்பேறு விடுப்பின் மூலம் அவர் கருவூலத்திற்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து மூன்றாவது கர்ப்பம் என்ற காரணத்தைக் காட்டி அவருக்கான உரிமையை மறுக்க இந்த விதிகளைப் பயன்படுத்தக் கூடாது,” என தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஒரு பிரசவத்தில் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கிறது என்றாலும்கூட அடுத்த முறை அவர் கர்ப்பம் தரிக்கும்போது அவர் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

ஏற்கெனவே இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான ஒருவரை திருமணம் செய்துகொண்ட பெண், தன்னுடைய பேறுகால விடுப்பை அந்த இரண்டு குழந்தைகளின் பராமரிப்புக்காக எடுத்துக் கொண்டார். சில காலங்கள் கழித்து அவர் முதன்முறையாக கர்ப்பம் தரிக்கும்போது அவருக்கு மகப்பேறு விடுப்பைக் கோருவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது என்று உச்சநீதிமன்றம், தீபிகா சிங் vs மத்திய நிர்வாக தீர்ப்பாயம் வழக்கில் வெளியிட்ட தீர்ப்பையும் சுட்டிக் காட்டினார் நீதிபதி.

சம்பளம் வழங்கவில்லை

மகப்பேறு விடுப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ராஜாஜி மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டு முறைக்கும் மேல் கர்ப்பம் அடையும் பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டாலும்கூட, மருத்துவ விடுப்பு வழங்கப்படும் (சித்தரிப்புப்படம்)

இந்த விவகாரம் குறித்து ராதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மலைக்கனி பிபிசி தமிழிடம் பேசியபோது, தற்போது ராதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், தற்போது இந்த உத்தரவு ராதாவுக்கு பல வகைகளில் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

“விடுப்பில் வந்த நாளில் இருந்து ராதாவுக்கு சம்பளம் வழங்கவில்லை. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு அவருக்கு சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று கூறினார் மலைக்கனி.

“பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பிறகு என்று பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டுதான் இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு பணியாளர்கள் பணி நிரந்தரம் அடைந்து ஓராண்டு ஆன பின்னரே இந்த விடுப்பைப் பெற இயலும். இதனால்தான் ராதாவுக்கு இரண்டு முறை இந்த விடுப்பு மறுக்கப்பட்டது. இதையே அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தில் வாதாடினோம்,” என்றும் தெரிவிக்கிறார் மலைக்கனி.

தமிழ்நாட்டில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்று மூன்றாவது மகப்பேறு காலத்தில் விடுப்பு மறுக்கப்படுவது முதல் முறையல்ல. ஈரோட்டைச் சேர்ந்த ஆசிரியர் கதீஜா உமாமா, தன்னுடைய மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவர் அரசு சேவையில் சேர்வதற்கு முன்பே இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆனார். சேவையில் சேர்ந்த பிறகு அவர் மூன்றாம் முறையாக கர்ப்பம் தரித்தார். அவரின் விடுப்பு விண்ணப்பத்தின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். வழக்கின் முடிவில் அவருக்கு விடுப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தெளிவற்று இருக்கும் முக்கிய சவால்கள்!

மகப்பேறு விடுப்பு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ராஜாஜி மருத்துவமனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாடகைத் தாயாக கர்ப்ப காலத்தைச் சந்திக்கும் பெண்களுக்கு இத்தகைய சலுகைகள் உள்ளதா என்பதில் தெளிவில்லை (சித்தரிப்புப்படம்)

சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண்களின் மகப்பேறு விடுப்பு தொடர்பாக பல வழக்குகளில் பெண்களுக்காக ஆஜராகி வரும் வர்கீஸ் அமல் ராஜா, பிபிசி தமிழிடம் பேசியபோது சட்டத்தில் எந்தெந்த அம்சங்கள் தெளிவற்று உள்ளன என்பதை விளக்கினார்.

ஒடிசாவில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த ஒரு வழக்கை மேற்கோள் காட்டிய அவர், “வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை. எனவே மகப்பேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு 180 நாட்களுக்கான மகப்பேறு விடுப்பை வழங்கி உத்தரவு அளித்தது நீதிமன்றம்,” என்று குறிப்பிட்டார்.

நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், “அனைத்து தாய்மார்களுக்கும் சமமான பலன்கள் மற்றும் ஆதரவை உறுதி செய்யும் வகையில், வாடகைத் தாய் மூலம் தாய்மை அடையும் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தது.

“வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆனால் வாடகைத் தாயாக கர்ப்ப காலத்தைச் சந்திக்கும் பெண்களுக்கு இத்தகைய சலுகைகள் உள்ளதா என்பதில் தெளிவில்லை,” என்று குறிப்பிட்டார்.

மேற்கொண்டு பேசிய அவர், “திருமணம் ஆகாத பெண்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இத்தகைய மகப்பேறு விடுப்பு இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை,” என்று கூறுகிறார் வர்கீஸ் அமல் ராஜா.

“எங்கேனும், யாராவது ஒரு பெண் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது மட்டும்தான் இத்தகைய விவாதங்கள் எழுகின்றன. இந்த அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்கள் உருவாக்க நீண்ட காலம் ஆகலாம். மாநிலங்கள் அரசாணை பிறப்பித்து இத்தகைய பெண்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.