‘உயிரற்ற உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதை பார்த்தோம்’- மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு பிறகு பிபிசி நிருபர்கள் கண்டது என்ன?

மகா கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலுக்கு பிறகு, மருத்துவமனைக்கு வெளியே அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்

மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசையையொட்டி நடைபெற்ற புனித நீராடலின்போது நேர்ந்த கூட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் பல உயிரற்ற உடல்களைப் பார்த்ததாக, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு சுகாதாரப் பணியாளர் தெரிவித்தார்.

ஆனால் உயிரிழப்புகள் குறித்து மாநில அரசு நிர்வாகம் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

மகா கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

‘அவசர ஊர்திகள் தொடந்து சென்று கொண்டிருக்கின்றன’

பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்ற இடத்தில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் விகாஸ் பாண்டே, சம்பவம் நடந்து பல மணிநேரம் கடந்த பின்னரும், இந்தச் சம்பவத்தின் தீவிரத்தன்மை குறித்து நிர்வாகம் எந்தத் தகவலும் அளிக்கவில்லை எனக் கூறினார்

“இதற்கிடையில் கும்பமேளா நடைபெற்ற பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து நிர்வாகம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் கும்பமேளாவுக்கு சென்றுகொண்டிருக்கும் முக்கிய நுழைவாயிலில் நான் இருக்கிறேன்,” என்று அவர் இன்று காலையில் தெரிவித்தார்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது மக்கள் சிறிய குழுக்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் விகாஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மக்களிடம் பேசும்போதெல்லாம், அவர்களே என்ன நடந்தது என்றுதான் கேட்கிறார்கள். எவ்வளவு பேர் இறந்தார்கள், காவல்துறையும், நிர்வாகமும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பவைதான் அவர்களின் கேள்விகளாக இருந்தன. ஆனால், நிர்வாகம் இதுவரை இதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை”, என்று அவர் கூறினார்.

மகா கும்பமேளா

பட மூலாதாரம், Getty Images

கும்பமேளாவில் இருந்த பிபிசி செய்தியாளர் சுமேதா பால், திரிவேணி சங்கமப் படித்துறையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறினார்.

கும்பமேளா 40 முதல் 45 கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெறுகிறது. அங்கு 25 செக்டார்கள் இருக்கின்றன. பக்தர்கள் திரிவேணி படித்துறையில் மட்டுமே நீராட விரும்புவதாக சுமேதா பால் தெரிவித்தார்.

பிபிசி செய்தியாளர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை கும்பமேளா பகுதியில் செக்டார் 2-ல் உள்ள மருத்துவமனையில் சந்தித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்த குட்டு என்பவரிடம் அவர் பேசினார். கூட்ட நெரிசலுக்குப் பிறகு தனது மனைவி மற்றும் சகோதரியைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் குட்டு தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு 1 முதல் 2 மணிக்கு இடையே அதிக கூட்டம் இருந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். அந்த நேரத்தில் மக்கள் முட்டிமோதிக் கொண்டிருந்ததால் பலரும் தங்கள் உறவினர்களை, குடும்பத்தினரைப் பிரிய நேரிட்டதாகவும் தெரிவித்தனர்.

சுமேதா பாலிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நெரிசலில் சிக்கித் தாம் கீழே விழுந்துவிட்டதாகவும் தமக்குக் கீழே மூன்று பேர் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் கூறினார்.

‘உயிரற்ற உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதை பார்த்தேன்’

மகா கும்பமேளா

படக்குறிப்பு, பிபிசி செய்தியாளர் சமீரா ஹுசைன் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருக்கும் சூழலைப் பார்த்தார்

கும்பமேளவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சமீரா ஹுசைன், கும்பமேளாவின் தொடக்க விழா குறித்து இரண்டு வாரங்களுக்கு முன் செய்தி சேகரித்தபோது, இம்முறை இந்தச் சமய விழாவுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததாகக் கூறினார்.

மக்கள் , சங்கமக் கரையை அடைய பல்வேறு திசைகளில் இருந்தும் முயற்சி செய்வதாக அவர் கூறினார்.

“அதிக அளவிலான காவல்துறையினர் அங்கு இருக்கின்றனர், ஆனால் சில நேரங்களில் அவர்களாலும் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. மக்கள் தடுப்புகளை ஏறிக் கடப்பதையும், அவற்றை முழுமையாக உடைப்பதையும் நான் பார்த்தேன்.”

நெரிசல் நடைபெற்ற இடத்தைப் பார்த்த சமீரா, காலணிகள், போர்வைகள், பைகள், உடைகள் உள்பட மக்களின் உடைமைகள் சிதறிக் கிடந்ததாகக் கூறினார்.

“ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு படுத்திருந்ததாகவும் மறுகரையில் இருந்த கங்கை படித்துறைக்குச் செல்ல பலர் விரும்பியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். இங்கிருந்து உயிரற்ற உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதை நாங்கள் பார்த்தோம், ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.”

“ஒரு ஸ்ட்ரெச்சரின் முன்பாக பெண் ஒருவர் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். ஸ்ட்ரெச்சரை கடந்த மற்றொரு நபர் அதிலிருந்த உடலை துணியால் மூடினார். இவையெல்லாம் நீராடும் முக்கியப் படித்துறையில் நடந்தது.

சம்பவம் நடந்து முடிந்த பின்னர், இங்கு சூழ்நிலையே மாறி, மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இது மிகவும் அசாதரணமானது. மக்களை இங்கே கொண்டு வந்தது அவர்களின் நம்பிக்கைதான். அவர்கள் புனித நதியில் நீராடத் தயாராக உள்ளனர்” என்கிறார் சமீரா ஹுசைன்

மகா கும்பமேளா

படக்குறிப்பு, சுமார் 12 இறப்புகள் ஏற்பட்டதாக சுகாதரப் பணியாளர் ஒருவர் கூறியதாக பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே தெரிவித்துள்ளார்

பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே புதன்கிழமை காலையில் பக்தர்களிடம் பேசியபோது, அங்கே குழப்பம் நிலவியதைப் பார்த்தார்.

மேளாவுக்கு வரும் பக்தர்கள் பலர் படித்துறையை அடைய முடியுமா என்ற கவலையில் இருந்தனர். அவர்களை நிர்வாகம் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

விகாஸ் பாண்டேவிடம் பேசிய ஒரு பக்தர், தாம் காலை 8 மணிக்கு வந்ததாகவும், காவல் துறையினர் தமக்கு சரியான வழியைக் காட்டவில்லை என்றும், ரயில் நிலையத்தில் தொடங்கி இப்போது வரை தவறான வழியையே காட்டுவதாகவும் கூறினார்.

ஆயிஷா மிஸ்ரா என்ற பக்தை, கங்கை படித்துறை புதன்கிழமை இருந்த நிலை குறித்து பிபிசியிடம் விவரித்தார்.

”மக்கள் ஒரே வழியில் வந்து செல்கின்றனர். இதனால் முட்டி மோதிக் கொண்டு மக்கள் கீழே விழுகின்றனர். காவல் துறையினர் ஒன்று படித்துறையில் இருக்கின்றனர், அல்லது வாசலில் இருக்கின்றனர். இடையில் எங்குமே போலீசார் இல்லை” என்கிறார் அவர்.

பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே கும்பமேளாவில் காணாமல் போனவர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களைத் தரும் மையத்தை அடைந்தார். அங்கு குழப்பமான சூழல் நிலவியது.

“நெரிசலில் சிக்கி மக்கள் நசுக்கப்பட்டதைப் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். வழக்கமாக அமைதியாக இருக்கும் காணாமல் போனவர்கள் பற்றிய புகாரளிக்கும் மையத்தில் இன்று குழப்பம் நிலவுகிறது” என்கிறார் விகாஸ் பாண்டே.

அரசுத் தரவுகளின்படி திங்கள்கிழமை காலை 8 மணி வரை சுமார் 2.8 கோடி மக்கள் மௌனி அமாவாசையையொட்டி சங்கமத்தில் நீராடியுள்ளனர். அரசின் புள்ளிவிவரப்படி, ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய கும்பமேளாவில் இதுவரை சுமார் 20 கோடி பேர் நீராடியுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு