‘நான் கீழே விழுந்ததும் என் மீது நடக்க ஆரம்பித்துவிட்டனர்’ – கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்

படக்குறிப்பு, டெல்லியில் இருந்து வந்த உமேஷ் அகர்வால் என்ற பக்தர் கூட்ட நெரிசல் எப்படி தொடங்கியது என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

திரிவேணி சங்கமத்தில் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மௌனி அமாவாசையின் புனித நீராடலின் போது, போது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதில் பலர் இறந்திருக்கலாம் என்றும், மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கூட்ட நெரிசல் குறித்து பல்வேறு காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது தெளிவாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக நேரில் கண்ட சாட்சிகளும் மருத்துவமனை வட்டாரங்களும் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் அரசும் நிர்வாகமும் நீண்ட நேரமாக மவுனம் காத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம், வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று முகநூலில் பதிவிட்டுள்ளது.

மறுபுறம், பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்

படக்குறிப்பு, நிர்வாகம் இதுவரை எந்த மரணத்தையும் உறுதிப்படுத்தவில்லை

பிபிசியிடம் பேசிய டெல்லியைச் சேர்ந்த உமேஷ் அகர்வால் என்ற பக்தர், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்று விவரித்தார்.

நதிக்குச் செல்லும் படிகளை நோக்கிச் சென்ற போது, ​​ஒரு பெரிய மக்கள் கூட்டம் அதே திசையில் விரைந்து வந்ததாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் நீராடச் செல்லும் போது, ​​தடுப்புகளின் அருகே மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். இதனால், சிலர் கீழே படுத்திருந்தவர்களின் காலில் சிக்கி விழுந்தனர். தொடர்ந்து, கூட்டம் அலை மோதத் தொடங்கியது. அதனால் பின்னால் வந்த மக்கள் ஒருவர் மேல் விழுந்து கொண்டே இருந்தனர்” என்று சம்பவம் குறித்து விவரித்தார்.

கர்நாடகா மாநிலம் பெல்காமில் இருந்து வந்த வித்யா சாஹு என்ற பக்தர், தானும் நீராடச் சென்றதாக செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

தான் 60 பேர் கொண்ட குழுவுடன் கர்நாடகாவில் இருந்து வந்ததாகவும், தன்னுடன் வந்த ஐந்து நண்பர்களை இன்னும் காணவில்லை என்றும் அந்த பக்தர் கூறினார். பிறகு கும்பமேளா நிர்வாகம் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து, நெரிசலை நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான ஜெய் பிரகாஷ் ஸ்வாமி செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸிடம் பேசியபோது, அவரும் அவரது பெற்றோரும் குழந்தைகளும் நெரிசலில் சிக்கிக் கொண்டதாகக் கூறினார்.

திடீரென்று கூட்டம் அதிகரித்ததாகவும், தான் கீழே விழுந்த பிறகு, மக்கள் தன் மீது நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘சடலங்கள் கிடந்தன’

மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்

படக்குறிப்பு, இந்த இக்கட்டான நேரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு பக்தர்களுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சித்ரகூட்டில் இருந்து வந்த இந்திரபால் என்ற நபர் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறுகையில், திரிவேணி சங்கமத்தின் கரையில் தான் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவரது உறவினர் காணாமல் போனதாகவும் கூறினார்.

தனது உறவினரைத் தேடுவதற்காக சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​அங்கு சடலங்கள் கிடந்ததாகவும், தற்போது, தன்னை பிணவறைக்கு செல்லுமாறு நிர்வாகம் கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நெரிசலை நேரில் பார்த்த பெண் பக்தர் ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “திடீரென்று நெரிசல் ஏற்பட்டது. உள்ளே செல்லவோ, வெளியே செல்லவோ வழியில்லை. எங்கள் குழந்தையின் பாதுகாப்புக்காக நாங்கள் கெஞ்சிக் கொண்டிருந்தோம், மேலும் பல குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தனர்” என்று தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் சதர்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர், “நெரிசலில் என் அம்மா காயமடைந்தார். அங்கு காவல்துறை அதிகாரிகள் இல்லை. யாரும் உதவிக்கு வரவில்லை. குறைந்தது 40 பேர் காயமடைந்தனர். என் அம்மா உயிர் பிழைப்பாரா இல்லையா, என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது” என்றார்.

யோகி ஆதித்யநாத், அகிலேஷ் கூறியது என்ன?

சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள பதிவில்,”பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள கங்கை நதிக்கரையில் நீராடலாம் என்றும், திரிவேணி சங்கமத்தை நோக்கிச் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும். எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பலத்த காயமடைந்தவர்களுக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

‘இந்த இக்கட்டான நேரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து, தங்கள் யாத்திரையை அமைதியாக முடிக்க வேண்டும்’ என பக்தர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகா கும்பமேளா கூட்ட நெரிசல், பிரயாக்ராஜ்

பட மூலாதாரம், Getty Images

மௌனி அமாவாசையில் புனித நீராடுவது சிறப்பு வாய்ந்தது ஏன்?

கும்பமேளா சமயத்தில் மௌனி அமாவாசை அன்று நடைபெறும் புனித நீராடல் மத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இந்த நீராடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

கூடுதலாக, தற்போது நடைபெறும் புனித நீராடலை ஒட்டி, திரிவேணி யோகம் உருவாகி இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்துமத நம்பிக்கைகளின்படி, இந்த திரிவேணி யோகம் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பமேளாவில் மிகவும் பிரமாண்டமான மற்றும் புனிதமான சடங்காக புனித நீராடல் (ஷாஹி ஸ்னான் என்று அழைக்கப்படுகிறது) கருதப்படுகிறது.

கும்பமேளாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து சேரும் முக்கிய நாட்கள் இவை.

அதிலும் குறிப்பாக, புனித நீராடல் நிகழ்வுகள் அனைத்திலும் சிறப்பு வாய்ந்ததாகவும் புனிதமாகவும் மௌனி அமாவாசை நாள் கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.