கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?
- எழுதியவர், அட்ரியன் முர்ரே
- பதவி, வணிக செய்தியாளர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என நினைப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, இந்த ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கிரீன்லாந்தின் தெற்கு முனையில் கொந்தளிப்பான கடல் மற்றும் செங்குத்தான பனிப்பாறைகளின் நடுவே மோட்டார் படகு செல்லும்போது, கூர்மையான சாம்பல் சிகரங்கள் திடீரென்று நம் முன் தோன்றுகின்றன.
அங்கு தெரியும் “மிக உயரமான, கூர்மையான மலைகள் தங்கத்தால் ஆன அடுக்குகளைக் கொண்டவை” என்று சுரங்க நிறுவனமான அமரோக் மினரல்ஸின் தலைமை நிர்வாகி எல்டுர் ஓலாஃப்சன் விளக்குகிறார்.
இரண்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு, நலுநாக் மலையின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கை நாங்கள் வந்தடைந்தோம். இங்குதான் அமரோக் நிறுவனம் தங்கம் தோண்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் (3,861 சதுர மைல்) பரப்பளவிற்கு ஆய்வு செய்ய உரிமங்களைப் பெற்றுள்ள இந்த நிறுவனம் மற்ற மதிப்புமிக்க கனிமங்களுக்காக அருகிலுள்ள மலைத்தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகளையும் ஆய்வு செய்து வருகிறது.
“தாமிரம், நிக்கல் மற்றும் பூமியில் அரிதாகக் கிடைக்கும் பிற கனிமங்களை நாங்கள் தேடுகிறோம்” என்கிறார் அமரோக் மினரல்ஸின் ஐஸ்லாந்து தலைமை நிர்வாக அதிகாரி எல்டுர் ஓலாஃப்சன்.
“இந்தப் பகுதி பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், இன்னும் அதிகளவிலான வளங்கள் இங்கு இருப்பதற்கான வாய்ப்புள்ளது” என்று அவர் விளக்குகிறார்.
நலுநாக் மலையின் அடிவாரத்தில், இந்த நிறுவனத்தின் முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தற்காலிக கட்டடங்கள் மற்றும் பிரகாசமான ஆரஞ்சு நிறக் கூடாரங்கள் உள்ளன.
அங்கு, கிரீன்லாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
அந்த முகாமிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி ஒரு சாலை செல்கிறது. மேலும் மலையின் உள்ளே இருண்ட சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, தங்கச் சுரங்கத்திற்குள் எங்களால் காரில் செல்ல முடிந்தது.
அங்கு, வெள்ளை குவார்ட்ஸ் எனும் கனிமத்தையும், மெல்லிய கோட்டையும் சுட்டிக்காட்டுகிறார் ஓலாஃப்ஸன்.
“இங்கே பாருங்கள்! தங்கம், தங்கம், தங்கம். எல்லா இடங்களிலும் தங்கம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?” என வியக்கிறார் ஓலாஃப்ஸன்.
அமரோக் மினரல்ஸ் எனும் நிறுவனம் இந்த சுரங்கத்தை 2015ஆம் ஆண்டில் வாங்கியது. அதற்கு முன்பிருந்தே இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை மற்றும் நிறுவனத்தை இயக்க ஏற்பட்ட அதிக செலவின் காரணமாகப் பின்னர் அது மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது சுரங்கத்திலிருந்து லாபம் கிடைக்கும் என்று அமரோக் நிறுவனம் நம்புகிறது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் தாதுக்களைச் சுத்திகரிப்பு செய்வதற்கும், தங்கத்தைச் சேகரித்து கட்டிகளாக மாற்றுவதற்காகவும் ஒரு புதிய செயலாக்க ஆலையை, அந்த நிறுவனம் உருவாகியுள்ளது.
“ஒவ்வொரு மாதமும் சுத்திகரிக்கப்பட்ட தங்கம் நிறைந்த பெட்டியை எடுத்துக்கொண்டு இங்கிருந்து நாம் வெளியேறலாம் அல்லது கப்பலில் 30,000 டன் அளவில் தங்கத்தின் மூலத்தாதுவைக் கொண்டு செல்லலாம்” என்று ஓலாஃப்ஸன் விளக்குகிறார்.
கிரீன்லாந்து ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது, ஏனென்றால் கிரீன்லாந்தின் கனிம வளங்கள் பெரியளவில் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்கிறார் ஓலாஃப்ஸன்.
“அது மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் மேற்குலக நாடுகளுக்குத் தேவைப்படும் எல்லா கனிம வளங்களையும் கிரீன்லாந்தில் இருந்து பெற முடியும்” என்றும் “அதனால் கிரீன்லாந்துக்கு தனித்துவமான அந்தஸ்து கிடைக்கும்” என்றும் ஓலாஃப்ஸன் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் அந்த ஒட்டுமொத்த தீவிலும் தற்போது இரண்டு சுரங்கங்கள் மட்டுமே செயல்படுகின்றன. கிரீன்லாந்து டென்மார்க்கின் ஒரு சுயாட்சிப் பகுதி. அதோடு, அதன் சொந்த வளங்களை அதுவே நிர்வகிக்கிறது.
பூமியில் இருந்து அரிதாகக் கிடைக்கும் கனிம வள இருப்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் கிரீன்லாந்து எட்டாவது இடத்தில் உள்ளது. தொலைபேசிகள், பேட்டரிகள் மற்றும் மின்னணு மோட்டார்கள் வரை அனைத்துப் பொருட்களையும் தயாரிப்பதற்கு இந்த கனிமங்கள் அவசியம்.
கூடுதலாக, லித்தியம் மற்றும் கோபால்ட் உள்ளிட்ட பிற அத்தியாவசிய உலோகங்களும் கிரீன்லாந்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி, கிரீன்லாந்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளும் உள்ளன. ஆனால், அப்பகுதியில் புதிதாகத் துளையிடும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தற்போது நிலவி வரும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலையால் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது” என்று கிரீன்லாந்து வணிக சங்கத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் கெல்ட்சன் கூறுகிறார்.
பூமியில் இருந்து அரிதாகக் கிடைக்கும் கனிம வள இருப்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனவே அதற்கு மாற்றாக உள்ள பிற இடங்களை மேற்குலக நாடுகள் பாதுகாக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “அத்தியாவசிய மூலப்பொருட்களின் உலகளாவிய விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அதனால் கிரீன்லாந்தின் கனிமங்களைப் பெறுவதில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதில் சீனாவும் ஈடுபாடு காட்டினாலும் அதன் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.
“இப்பகுதியில் கிடைக்கும் கனிமங்கள் மீதான ஆர்வம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக” கிரீன்லாந்தின் வணிகம், வர்த்தகம் மற்றும் மூலப்பொருட்கள் துறையின் அமைச்சர் நாஜா நதானியேல்சன் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசும் அவர், “நாங்கள் காலநிலை நெருக்கடிக்கான மையப் புள்ளியாக வாழப் பழகிவிட்டோம். ஆனால் நாங்கள் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்” என்கிறார்.
கிரீன்லாந்து முழுவதிலும் உள்ள 100 பகுதிகளில் சுரங்கம் அமைக்கத் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களால் அங்குள்ள கனிம இருப்புகளைத் தேட முடியும்.
இதற்காக வழங்கப்பட்டுள்ள உரிமங்களில் பெரும்பாலானவை பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு ஒரே ஒரு பகுதிக்கான உரிமம் மட்டுமே உள்ளது. ஆனால் இப்பகுதிகள் சுரங்கமாக மாறுவதற்கு இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.
கிரீன்லாந்தில் மதிப்புமிக்க கனிமங்கள் அதிகளவில் கிடைத்தாலும், “தங்க வேட்டை” அங்கு மெதுவாகவே நடைபெறுகிறது.
கிரீன்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் டாலருக்கு மேல் (2.4 பில்லியன் யூரோவுக்கு மேல்) உள்ளது. ஆனால் அதன் பொருளாதாரம் இன்னும் பொதுத்துறையாலும், மீன்பிடித் தொழிலாலும் இயக்கப்படுகிறது.
மேலும் இந்தப் பகுதி டென்மார்க்கில் இருந்து கிடைக்கும் வருடாந்திர மானியமான 600 மில்லியன் டாலரை நம்பியுள்ளது.
மறுபுறம், சுரங்கத்தால் அதிக வருவாய் கிடைத்தால், டென்மார்க்கில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் கிடைக்கும் 600 மில்லியன் டாலர் மானியத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்றும் சுதந்திரமாக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அது உதவியாக இருக்கும் என்றும் கிரீன்லாந்தின் அரசியல்வாதிகள் நம்புகின்றனர்.
இருப்பினும் தற்போதைக்கு, சுற்றுலாத் துறையின் மூலமே கிரீன்லாந்துக்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்து, அதிகாரபூர்வமாகத் தனித்து இயங்குவதற்கு சுரங்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று கிரீன்லாந்து பல்கலைக் கழகத்தின் ஆர்க்டிக் சமூக அறிவியல் துறைத் தலைவர் சேவியர் அர்னாட் கூறுகிறார்.
“ஆனால் நடைமுறையில், மிகக் குறைவான சுரங்க உரிமங்கள் மட்டுமே வழங்கப்படுவதை நீங்கள் காணலாம்” என்று விளக்குகிறார்.
ஒருபுறம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை வளர்த்துக் கொண்டாலும், “இந்தத் துறையில் அதிக அளவு பணம் கிடைப்பதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை” என்று நதானியேல்சன் ஒப்புக் கொள்கிறார்.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இன்னும் மூன்று முதல் ஐந்து சுரங்கங்கள் செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மறுபுறம் நிலவியல் மற்றும் கடுமையான வானிலை காரணமாக கிரீன்லாந்தில் சுரங்கங்கள் அமைப்பது உண்மையாகவே சவாலான விஷயமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து 80 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது.
கரடுமுரடான மலைகள் மற்றும் அங்குள்ள குடியிருப்புகளுக்கு இடையில் சாலைகள் இல்லாதது சவால்களை அதிகரிக்கச் செய்கிறது.
“இது ஒரு ஆர்க்டிக் நிலப்பரப்பு” என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜேக்கப் க்ளோவ் கெய்டிங் கிரீன்லாந்தைக் குறிப்பிட்டுக் கூறுகின்றார். இந்த நிலவியல் ஆய்வு மையம் அப்பிரதேசத்தின் கனிம இருப்புகளை வரைபடமாக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
“காலநிலை மாற்றங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் கடுமையான சூழ்நிலைகளால் எங்களுக்கு சிக்கல்கள் உள்ளன. எனவே சுரங்கத்தைத் திறப்பதற்கு அதிக பொருட்செலவு ஆகலாம்” என்றும் ஜேக்கப் க்ளோவ் கெய்டிங் விவரிக்கின்றார்.
ஒருபுறம் சுரங்கங்களைத் திறப்பதற்கு அதிகளவில் செலவாகலாம். மறுபுறம், உலோக விலைகள் உலகளவில் குறைந்துள்ளன. இந்த இரண்டு காரணங்களும் சுரங்களைத் திறப்பதற்கு முதலீட்டாளர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளன.
ஆனால், சுரங்கத் துறையின் மெதுவான வளர்ச்சிக்கு அதிகாரத்துவ தடைகளே காரணம் என்று மற்றவர்கள் கூறுகின்றனர். கிரீன்லாந்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், உள்ளூர் சமூகங்களில் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொள்வதற்கும் கடுமையான விதிகள் உள்ளன. மேலும் அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்கும் நீண்ட காலமாகலாம்.
பெரும்பாலான சமூகங்கள் சுரங்கத்தை ஆதரிப்பதாகவும் அது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் நதானியேல்சன் கூறுகிறார்.
“அவர்கள் [வெளிநாட்டில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள்] உள்ளூர் கடையில் பொருட்களை வாங்குகிறார்கள், உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்துகிறார்கள். மேலும் அவர்கள் உள்ளூர்ப் படகு அல்லது ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கிறார்கள்,” என்று அதற்கான காரணத்தை விளக்குகிறார் நதானியேல்சன்.
ஆனாலும் கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய நகரமான ககோர்டோக் நகரத்தில் வசிக்கும் ஹெய்டி முல்லர், புதிய சுரங்கங்கள் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துமா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளார்.
“புதிதாக வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள்?” என்றும் ஹெய்டி கேள்வி எழுப்புகிறார்.
சிக் எனும் உள்ளூர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜெஸ் பெர்தெல்சன் கூறுகையில், சுரங்க வருமானம் “நாட்டை விட்டு வெளியேறும்” என்றும் அதனால் கிரீன்லாந்திற்கு பயனில்லை என்றும் பலர் நினைப்பதாகக் கூறுகிறார்.
ஆனால் ஜெஸ் பெர்தெல்சன் சுரங்கத் துறையின் வளர்ச்சியை ஆதரிக்கிறார். “கிரீன்லாந்துக்கு அதிக வருமானம் தேவை மற்றும் மீன் பிடிப்பதைத் தவிர வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டும்” என்று பெர்தெல்சன் வலியுறுத்தினார்.
கிரீன்லாந்தில் டிரம்பின் சமீபத்திய நகர்வு எப்படி இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும்,”நாங்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய வேண்டும். அதற்கான வாயிலாக சுரங்கங்கள் உள்ளன” என்று கிரீன்லாந்து பிரதமர் மூட் எகெடே இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.
அதனால் இந்தத் துறைக்கு “தேவையான முதலீடு” கிடைக்கும் என்று வணிக சங்கத்தைச் சேர்ந்த கெல்ட்சென் நம்புகிறார்.
“மறுபுறம், டிரம்பின் சமிக்ஞைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை நீண்ட காலத்திற்கு இழுக்கப்பட்டால், அது முதலீட்டுச் சூழலை எதிர்மறையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.