இந்தியாவில் நடந்த உலகின் மிகப்பெரிய மத திருவிழாவான கும்பமேளா நிகழ்வில் ஏற்பட்ட மக்கள் நெரிசல் காரணமாக 15 பேர் உயிரிழந்தர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 40 உடல்கள் நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறியது.
காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் குடும்ப உறுப்பினர்கள் தற்காலிக மருத்துவமனைகளுக்கு வெளியே காத்திருப்பதையும், உடைகள், பைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் தரையில் சிதறிக் கிடப்பதையும் காட்டுகின்றன.
கும்பமேளா உலகில் மனிதகுலத்தின் மிகப்பெரிய கூட்டமாகும் – இங்கு குடும்பங்கள், பக்தர்கள் மற்றும் வயதான யாத்ரீகர்கள் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சந்திக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறார்கள்.
இலட்சக்கணக்கான மக்கள் நதி நீரில் குளிக்கிறார்கள். இந்த நதியில் குளிப்பதன் மூலம் அவர்கள் செய்த பாவங்களைக் கழுவி மறுபிறப்பு சுழற்சியில் இருந்து அவர்களை விடுவிக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14 ஆம் திகதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து 100 மில்லியன் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 36 மில்லியன் மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினமான இன்று புதன்கிழமை அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? எத்தனைபேர் உயிரிழந்துள்ளனர்? காயமடைந்தோர் எத்தனைபேர்? உள்பட எந்த விவரத்தையும் உத்தரபிரதேச அரசு இதுவரை வெளியிடவில்லை.