இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இந்த மீனவர் பிரச்சனையானது நீண்ட காலமாக நீடிக்கும் ஒரு பிரச்சினையாகும். இராஜதந்திர ரீதியாக நாம் பல கட்டமாக இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 2 மாதங்களில்,கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்க்க நாம் அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறோம். ஏனெனில், இதனால் வடக்கு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள்.
ஆனால்,இதனை இராஜதந்திரப் பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. எமது மீனவர்களும், இந்திய மீனவர்களும் எமது கடற்பரப்பில், தங்களின் தொழிலுக்காக முரண்படும் போக்கே இங்கு காணப்படுகிறது. எவ்வாறாயினும், எமது கடலையும் எமது மீனவர்களையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுக்களிலும் நாம் தொடர்ச்சியாக ஈடுபடுவோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.