அமெரிக்க அதிபராக முதல் வாரத்தில் டிரம்ப் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? ஓர் அலசல்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
  • எழுதியவர், அந்தோணி ஜர்சர், பெர்ண்ட் டெபுஸ்மன் ஜூனியர், கோர்ட்னி சுப்பிரமணியன்
  • பதவி, பிபிசி நியூஸ்

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சனிக்கிழமை மாலை, லாஸ் வேகாஸில் இருந்து மியாமிக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த விமானத்தில் உள்ள தொலைக்காட்சி திரைகளில், சிஎன்என்-க்குப் பதிலாக மீண்டும் ஃபாக்ஸ் நியூஸ் திரையிடப்பட்டது.

அமெரிக்காவின் அரசாங்கம் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நம்பிக்கையுடன் காணப்பட்டார் அதிபர் டிரம்ப்.

பிபிசியின் கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், “செய்யப்பட்ட வேலைகள் மற்றும் வேலையின் அளவுகளுக்காக முதல் தர மதிப்பீடுகளைப் பெறுகிறோம்” என்று கூறினார்.

“ஒரு அதிபரை எல்லாரும் நினைவில் வைத்திருக்கக் கூடிய அளவில், மிகவும் வெற்றிகரமான முதல் வாரம் இது என மக்கள் கூறுகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அது மட்டுமின்றி, ​​அரசு நிறுவனங்களில் உள்ள பல சுயாதீன கண்காணிப்புக் குழுக்களை நள்ளிரவில் திடீரென நீக்கியதாக, பத்திரிகையாளர்களுடனான 20 நிமிட உரையாடலின் போது ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

அவர் வேறு சில தகவல்களையும் பகிர்ந்தார். அவற்றுள் ஒன்றாக, “கிரீன்லாந்தை அமெரிக்கா பெறும்” என்று தான் நினைப்பதாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அதிக பாலத்தீனர்களுக்கு தஞ்சம் அளிக்க எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு அழைப்பு விடுத்தார் டிரம்ப்.

மறுபுறம், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் “தாராளவாதி” என்றாலும் கூட அவருடன் “மிகவும் நல்ல உறவை” கொண்டிருந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார் .

ஜோ பைடன் ஆட்சியில், இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பு அரிதாகவே நடக்கும். அதிபராக பதவியேற்ற ஆறே நாட்களில் வாஷிங்டன் மற்றும் அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதற்கான சமிக்ஞை இது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

‘ஓவலில்’ ஏற்பட்டுள்ள மாற்றம்

அதிபரின் அதிகாரப்பூர்வ ஓவல் அலுவலகத்தில், ஒரு அலங்கார மரப்பெட்டிக்குள் ஒரு சிறப்பு பொத்தான் உள்ளது. அதன் மூலம் அதிபர் எப்போது வேண்டுமானாலும் குளிர்பானங்களை ஆர்டர் செய்யலாம். அகற்றப்பட்ட இந்த பொத்தான் தற்போது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் மார்பளவு சிலை, முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் பயன்படுத்திய விரிப்பு மற்றும் ஏழாவது அதிபரான ஆண்ட்ரூ ஜாக்சனின் உருவப்படம் ஆகியவையும் ஓவல் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இவற்றுக்கு அப்பாற்பட்டு, வாஷிங்டனில் அதிபரின் அதிகாரத்திற்குட்பட்ட சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தனது கருப்பு நிற ஷார்பி பேனாவினால் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவது முதல், ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுடன் தன்னிச்சையான சந்திப்புகளை நடத்துவது வரையிலான, அவருக்கு முந்தைய அதிபரின் சாதனைகள் டிரம்ப் மீண்டும் பதவிக்குத் திரும்பிய சில நாட்களில் இல்லாமல் போய்விட்டன.

2021-ஆம் ஆண்டு நடந்த கேபிடல் கலவரம் காரணமாக அரசியல் ரீதியாக டிரம்ப் சற்று தனிமைப்படுத்தப்பட்டடார். அந்த வரலாறு, தற்போது மாற்றி எழுதப்பட்டுள்ளது.

அப்போது நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அவரது ஆதரவாளர்களில் 1,500 க்கும் மேற்பட்டோருக்கு அதிபர் டிரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்த துணிச்சலான நடவடிக்கையை ஜனநாயகக் கட்சியினர் உடனடியாக கண்டித்தனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மூத்த உறுப்பினர்களுக்கும் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் கூறுகையில், “காவல்துறை அதிகாரிகளையும் பெண்களையும் கொடூரமாக தாக்கிய வன்முறைக் குற்றவாளிகளை” விடுவிப்பது, அமெரிக்கா முழுவதும் உள்ள சமூகங்களில் பொதுப் பாதுகாப்பைக் அவமதிப்பிற்கு உட்படுத்துகிறது.” என்றார்.

அவர் மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை காலை, குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாமும் அதிபர் டிரம்ப் வழங்கிய மன்னிப்பு தவறு என்று விமர்சித்தார்.

பதவியேற்ற குறுகிய காலத்தில், மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று டிரம்ப் பெயர் மாற்றம் செய்தார். அமெரிக்கா இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கிறது என்று அறிவித்தார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார், அமெரிக்காவின் மாபெரும் வெளிநாட்டு உதவித் திட்டத்தை முடக்கினார்.

அது மட்டுமின்றி, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உலகளாவிய பெருநிறுவனங்களை டிரம்ப் எச்சரித்தார். தங்கள் பொருட்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யாவிட்டால் பல பில்லியன் டாலர் அளவுக்கு வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாக அவரது எச்சரிக்கை அமைந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வித்தியாசமான அரசியல் சூழலில் டிரம்ப் 2.0 ஆட்சி நடக்கிறது என்பதை மேசையில் குவித்து வைக்கப்பட்டுள்ள அதிகளவிலான நிர்வாக உத்தரவு கோப்புகள் வெளிக்காட்டுகின்றன. தற்போதைய அரசியல் சூழல், தனது செயல்களில் அதிக உறுதியுடன் இருக்கும் ஒரு அதிபரை உருவாக்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட 1,500 க்கும் மேற்பட்டோருக்கு அதிபர் டிரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார்

வரலாற்றை மாற்றி அமைக்கும் ஓர் வாய்ப்பு

2016 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாரக் ஒபாமாவை முதன்முதலில் சந்தித்த போது, ​​தான் பொறுப்பேற்கவிருந்த அலுவலகம் குறித்து வியப்படைந்தார் டிரம்ப் .

வாஷிங்டனில் ஒரு வெளி ஆளாக இனி டிரம்ப் பார்க்கப்படப் போவதில்லை.

ஏனென்றால், இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களிடையே ஒரே மாதிரியான ஆதரவைக் கொண்டுள்ள அனைத்து மாநிலத்திலும் வெற்றி பெற்று, 20 ஆண்டுகளில் அதிக மக்கள் வாக்குகளைப் பெற்ற முதல் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஆனார் டிரம்ப்.

தற்போது மீண்டும் அதிபராகப் பதவியேற்று, வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ள டிரம்ப், ஆரம்ப நாட்களில் தனது நிர்வாக அதிகாரத்தை எவ்வாறு வடிவமைக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை மற்றும் அரசியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல் பதவிக்காலத்தில் வலியுறுத்திய ஆலோசகர்கள், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் தற்போது இல்லை. மாறாக, அவருடைய நிர்வாகம் இப்போது அவருக்கு ஆதரவாக நிற்கும் விசுவாசிகளால் நிரம்பியுள்ளது.

குடியரசுக் கட்சியை வேறொருவர் வழிநடத்திய காலம் குறித்து தெரியாமல், அதன் தலைவராக டிரம்பை மட்டுமே அறிந்த இளைய உதவியாளர்களால் பல கீழ்நிலை பதவிகள் தற்போது நிரப்பப்படுகின்றன.

அடுத்தபடியாக, டிரம்பின் கட்சி தற்போது அமெரிக்க அரசில் வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அவர்களின் ஆதிக்கம், குறைந்தது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பதவிக்கு வந்த முதல் நாளில், வாஷிங்டனில் உள்ள நிலையை மாற்ற விரும்புவதாகவும், பல நிர்வாக உத்தரவுகளில் கையொப்பமிடுவதன் மூலம் தனக்கு முன்பு அதிபராக இருந்தவர்களின் செயல்களை ஒன்றுமில்லாமல் ஆக்கவும் டிரம்ப் விரும்புகிறார்.

பதவியேற்ற முதல் நாளில், டிரம்ப் 26 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 2021-இல் பைடன் ஒன்பது உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அந்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளார் டிரம்ப்.

இதுகுறித்து ரைஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் டக்ளஸ் பிரிங்க்லி கூறுகையில், “டிரம்பின் முதல் நாள் “அவரது எதிரிகளின் முகத்தில் மிகப்பெரிய அடியாக விழுந்தது”, என்று குறிப்பிட்டார்.

மறுபுறம், அதிபரின் மனநிலையைப் பற்றிய ஒரு பார்வையையும் இந்த உத்தரவுகள் வழங்குகின்றன.

மெக்சிகோ வளைகுடாவை மறுபெயரிடுவதற்கான டிரம்பின் விருப்பத்தை, கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் நடவடிக்கையுடன் ஒப்பிட்டார், பிரிங்க்லி.

ஹெர்பர்ட் ஹூவரை தோற்கடித்த பிறகு, கொலராடோ ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட அணைக்கு ஹூவர் என்பதற்கு பதிலாக போல்டர் அணை என்று ரூஸ்வெல்ட் பெயரிட்டார். அவரது போட்டியாளரின் மரியாதையை மறுக்கும் விதமாக ரூஸ்வெல்ட் அப்படி செய்தார் என்றும் அறியப்படுகின்றது.

“அதற்கு ஒரு வலிமையான எண்ணம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் இழக்காத மனப்பான்மை தேவை,” என்று பிரிங்க்லி இரு அதிபர்களைக் குறித்தும் விளக்கினார்.

அது மட்டுமின்றி , தனது அரசியல் எதிரிகளை விஞ்சுவது, பல சட்டப் போராட்டங்களில் தண்டனையைத் தவிர்ப்பது மற்றும் ஒரு கொலை முயற்சியிலிருந்து தப்பிப்பது போன்றவற்றின் மூலம் டிரம்பின் நம்பிக்கை வருகிறது என்று பிரிங்க்லி குறிப்பிட்டார்.

மறுபுறம், அதீத ஆர்வமுள்ள நீதித்துறை மற்றும் தனது அரசியல் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர் என அதிபர் டிரம்ப் தன்னை வர்ணித்துள்ளார்.

பதவிக்கு வந்த முதல் நாளில், முந்தைய நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கூட்டாட்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளை விசாரிக்குமாறு, தனது நீதிதுறைத் தலைவருக்கு அறிவுறுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

கேபிடல் கலவரத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் மீது நடத்தப்பட்ட நீதித்துறையின் வழக்கு விசாரணையும் இதில் அடங்கும்.

டிரம்ப் தனது பெயர் “எல்லா காலத்திலும் ஒளிர வேண்டும்” என்று விரும்புகிறார். “அவர் அதை அடைந்துவிட்டார்,” என்று கூறிய வரலாற்றாசிரியர் பிரிங்க்லி, மேலும் தொடர்ந்தார்.

“அரசியலில் சக்தி வாய்ந்த மற்றும் தடுக்க முடியாத தாக்கத்தை டிரம்ப் ஏற்படுத்தியுள்ளார், பெரும்பாலான மக்கள் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்களைச் செய்துள்ளார் டிரம்ப்” என்று விளக்கினார்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரும்பாலான மக்கள் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்களைச் செய்துள்ளார் டிரம்ப்

தயார் நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும் நடவடிக்கைகள்

டிரம்பின் முதல் வார நிர்வாக உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “ஜனவரி 2017 இல் அவர் முதன்முதலில் பதவிக்கு வந்ததை விட, தற்போது டிரம்பின் குழு ஓரளவு தயார் நிலையில் உள்ளதை காட்டுகிறது,” என்றனர்.

மேலும், “ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, நேரடியான மற்றும் பிரச்னைகளை தீர்க்கமாக எதிர்கொள்வதை அடிப்படையாகக் கொண்டதாக டிரம்ப் குழு உள்ளது” என்று தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் முன்னாள் அதிகாரியான லாரன்ஸ் முயர் கூறினார்.

2016 ஆம் ஆண்டு டிரம்ப் நிர்வாகத்திற்கு பணியாளர்களை பணியமர்த்துவதற்கு முயர் பொறுப்பேற்றிருந்தார்.

“டிரம்ப் என்ன வெளியிட வேண்டும், அதை எவ்வளவு திறமையாக வெளியிட வேண்டும் அரசுத்துறைகள் மூலம் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொண்டு சிறப்பாகச் செயல்படுகிறார்.”என்றும் தெளிவுபடுத்தினார்.

2017 ஆம் ஆண்டில் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில், வெள்ளை மாளிகையின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் ஷான் ஸ்பைசரின் செய்தியாளர் சந்திப்பே பெரிதும் பேசப்படும் ஒன்றாக மாறியது. பதவியேற்பு விழாவில் திரண்ட கூட்டத்தைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக, ​​ஸ்பைசர் ஊடகங்களை விமர்சித்தார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, இரான், இராக், சிரியா, ஏமன், சோமாலியா, சூடான் மற்றும் லிபியா ஆகிய ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இது விமான நிலையங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், பல சட்ட ரீதியான சவால்களுக்கும் வழிவகுத்தது. இந்த உத்தரவு ஆரம்பத்தில் பெடரல் நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆனால் மேலும் இரண்டு முறையீடுகளுக்குப் பிறகு, அது இறுதியில் உச்ச நீதிமன்றத்தால் 2018ஆம் ஆண்டில் அது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள புதிய நிர்வாகம், 2017 ஆம் ஆண்டு நிகழ்வுகளில் இருந்தும், நிர்வாகம் எதிர்கொண்ட பிற சட்டப் போராட்டங்களிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொண்டது போலத் தோன்றுவதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

“இப்போது அவர்கள் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்கள்.” என்று நம்பர்ஸ்யுஎஸ்ஏ என்ற அமைப்பின் ஆய்வு இயக்குநர் எரிக் ருயார்க் கூறுகிறார். அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்க வேண்டும் என்று வாதிடும் அமைப்புகளில் இதுவும் ஒன்று.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தற்போதுள்ள புதிய நிர்வாகம், 2017 ஆம் ஆண்டின் பொதுத் தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளது

குறிப்பாக குடியேற்றம் சார்ந்த விஷயங்களில், டிரம்பின் குழு “விரைவாகவும் திறமையாகவும் தங்கள் வேலையைத் தொடங்கியுள்ளது” என்று முயர் குறிப்பிட்டார்.

டிரம்பின் பதவியேற்பு நாளில், தெற்கு எல்லையில் ஒரு தேசிய அவசர நிலையை அறிவித்தார், படைகளை நிறுத்தினார். அது மட்டுமின்றி, குற்றப் பின்னணி கொண்ட நூற்றுக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“புதிய எல்லை நிர்வாகியான டாம் ஹோமன் முதல் பதவிக்காலத்தில் அங்கு இருந்ததால், என்ன தவறு நடந்தது, எது சரியாக நடந்தது, இப்போது உண்மையில் எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரியும்,” என்று அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டினார் முயர் .

ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில், அவர் மேற்கொண்ட பல சீர்திருத்தங்கள், சட்ட ரீதியான சவால்களை எதிர்கொண்டன மற்றும் நீதிமன்றங்களால் அடிக்கடி தடுக்கப்பட்டன.

அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழுவின் மோசமான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டின் காரணமாகவே இவ்வாறு நடந்ததாகக் கருதப்படுகின்றது.

இந்த இரண்டாவது பதவிக்காலத்தில், நீடித்த மாற்றங்களை உருவாக்குவதில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது டிரம்பின் குழு.

அது மட்டுமின்றி, டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட பல நீதிபதிகளுடன், தங்களுக்கு ஆதரவான நீதித்துறை இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

டிரம்பின் சில நிர்வாக உத்தரவுகள் இறுதியில் தடுக்கப்பட்டாலும், அவர் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட விரும்புகிறார் என்பதை அவர் தனது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.