திங்கள்கிழமையன்று, பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர் மோதிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் முறையாக நடைபெற வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்காவிற்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படக்கூடாது என டிரம்ப் விரும்புகிறார்.
கடந்த திங்கள்கிழமையன்று, பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது.
இந்த உரையாடலுக்குப் பிறகு வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் உரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விரைவில் சந்திக்கலாம்
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உறுதியான உரையாடல் நடந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோதியின் திட்டம் குறித்தும் அந்த உரையாடலில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோதியும், டொனால்ட் டிரம்பும் விரைவில் சந்திக்கலாம் என்று பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி செல்வார் என்றும், அங்கிருந்து வாஷிங்டன் டிசிக்கு செல்லலாம் என்றும் ஆங்கில நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸ் தனது செய்தியில் கூறியுள்ளது .
ப்ளூம்பெர்க்கின் செய்தியின்படி, “நான் அவருடன் நீண்ட நேரம் உரையாடினேன், அவர் அடுத்த மாதம், அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வரப் போகிறார்” என ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது டொனால்ட் டிரம்ப் கூறினார்.
”பரஸ்பர விருப்பத்தோடு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்ட தேதியில் விரைவில் சந்திப்பார்கள்” என்று டிரம்புடனான உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பரஸ்பர நலனுக்காகவும், தங்களின் நம்பகமான கூட்டணியை வலுப்படுத்துவதற்காகவும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் உறுதியளித்துள்ளதாக இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.
மேலும் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்தும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வலியுறுத்தியது என்ன ?
இரு தலைவர்களின் உரையாடலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் வேறுபாடு இல்லை என்றாலும், வெள்ளை மாளிகை வலியுறுத்தும் விஷயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு குறித்து டிரம்புடன் விவாதிக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ள நிலையில், பிரதமர் மோதியுடனான உரையாடலில் டிரம்ப் இரண்டு விஷயங்களை வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒன்று, முடிந்தவரை அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும். இரண்டாவதாக, இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம், ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் சமநிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
ராண்ட் கார்ப்பரேஷன் எனும் சிந்தனை குழுவின் இந்தோ-பசிபிக் ஆய்வாளரான டெரெக் கிராஸ்மேன், ” மோதியை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார், ஆனால் இரு நாடுகளின் கூட்டணிக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார். அதாவது, அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்கவேண்டும் என்பதை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து, இருதரப்பு வர்த்தகத்தை சமநிலைப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்” என்று விவரித்துள்ளார்.
அடிக்கடி டிரம்ப் இந்தியாவை ‘வரி மன்னன்’ என்று அழைப்பார்.
இந்தியாவின் வர்த்தக உபரி சார்பாக உள்ள சிக்கல் குறித்து டிரம்ப் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அதாவது இந்தியா அமெரிக்காவில் அதிக பொருட்களை விற்பனை செய்கிறது, ஆனால் அங்கிருந்து குறைவான பொருட்களையே வாங்குகிறது.
மேலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, தனது முதல் பதவிக் காலத்தில் இந்தியாவின் ஜிஎஸ்பி அந்தஸ்தை டிரம்ப் ரத்து செய்தார். இந்தியா தனது தயாரிப்புகளில் சிலவற்றை மட்டும் அமெரிக்காவிற்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
டிரம்ப் இந்த அந்தஸ்தை மார்ச் 2019 இல் முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது தனது சந்தையை அணுகுவதற்கு பல தடைகளை இந்தியா உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா கூறியிருந்தது.
அதன் விளைவாக, அமெரிக்க வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டது, என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரியின் மதிப்பு 41 பில்லியன் டாலர் ஆகும்.
இந்தியாவின் திட்டம் என்ன?
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கின் தகவல்களின்படி, டிரம்பின் சவால்களை சமாளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.
டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு வரி விதிப்பதைத் தொடர்ந்தால், மோதி அரசு பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை டிரம்ப் விரும்பவில்லை.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கலாம், அதே நேரத்தில் இறக்குமதியை அதிகரிக்கலாம் என்று ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
அது மட்டுமின்றி, “அமெரிக்காவிடமிருந்து அதிக விஸ்கி, எஃகு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை இந்தியாவால் வாங்க முடியும்.” என்கிறது ப்ளூம்பெர்க்.
”டிரம்பின் நிர்வாகத்துடன் மோதும் மன நிலையில் தற்போது இந்தியா இல்லை. ஒருபுறம், அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய 18 ஆயிரம் மக்களை திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மறுபுறம், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் குறித்து, மார்கோ ரூபியோ ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.” எனவும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்களை இந்தியா ஏற்றுக்கொண்டது தொடர்பான கேள்விக்கு, ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மோதி சரியானதைச் செய்வார்’ என்று டிரம்ப் பதிலளித்தார்.
இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரி சார்ந்த அச்சுறுத்தல் குறித்து, “டிரம்ப் இந்தியா மீது வரி விதித்தால், அது அமெரிக்காவின் பொருளாதார மிரட்டலாக இருக்கும். ஏனென்றால், அமெரிக்காவின் பொருளாதாரம் இந்தியாவை விட பெரியது. அமெரிக்காவின் பொருளாதாரம் 29 டிரில்லியன் டாலர்கள், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வெறும் நான்கு டிரில்லியன் டாலர்கள் மட்டுமே.” என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல் எழுதியுள்ளார்.
“அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 66 ஆயிரம் டாலர்கள், அதேசமயம் இந்தியாவில் அது 2400 டாலர்கள் மட்டுமே. உலகப் பொருளாதார அமைப்பை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. சர்வதேச வர்த்தகம் டாலரில் நடைபெறுகிறது. இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கிறது” என்றும் கன்வால் சிபல் விவரிக்கின்றார்.
அது மட்டுமின்றி, “அமெரிக்கக் கொள்கைகள் உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போட்டி சம நிலையில் இருக்க வேண்டும். எனவே அமெரிக்காவை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது” என்றும் சிபல் விளக்குகிறார்.
”அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை சீனாவுடன் அதிகமாக உள்ளது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 30 சதவீதமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் 16 சதவீதமாகவும், கனடாவுடன் 15 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 3.2 சதவீதம் மட்டுமே. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை விஷயத்தில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது” என்கிறார் அவர்
பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் விஷயம்
கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில், இந்தியா அமெரிக்காவுடன் மூன்று பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவை மட்டுமே சார்ந்திருக்காமல், பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் நோக்கத்தில் உள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து இல்லாமல், தன்னிடம் இருந்தே அதிகபட்ச பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவும் விரும்புகிறது. அமெரிக்காவின் இந்த சிந்தனை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், கூட்டணி உத்திகள் சார்ந்த தங்களது நிலைப்பாட்டை இரு நாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன.
அமெரிக்கா தனது அறிக்கையில் இந்தோ-பசிபிக் என்று குறிப்பிட்டுள்ளது மற்றும் குவாட் கூட்டமைப்பு இந்த உத்தியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஆனால், இந்தியாவின் அறிக்கையில் இந்தோ-பசிபிக் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அந்நிகழ்வில், அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு