யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை. அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனிடைளே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க ஆரம்பித்;துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.