டீப்சீக்: செயற்கை நுண்ணறிவு உலகில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு ‘செக்’ வைத்த சீன செயலி

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பீட்டர் ஹாஸ்கின்ஸ் & இம்ரான் ரஹ்மான் – ஜோன்ஸ்
  • பதவி, வணிகம் & தொழில்நுட்ப செய்தியாளர்கள்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT உள்ளிட்ட செயலிகளை சீன செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் (DeepSeek) பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச செயற்கை நுண்ணறிவு (AI) செயலியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

சீன செயலிக்கு அதிகரிக்கும் வரவேற்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை தூண்டியிருக்கிறது. இதனால் என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகிய பெருநிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை வீழ்ச்சியடைந்தன. இது ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவை விஞ்ச முடியாது என்ற பரவலான நம்பிக்கைக்கு சவால் விடும் வகையில், அறிமுகமான முதல் நாளில் இருந்தே இச்செயலி பிரபலமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தத் துறையில் செய்ய திட்டமிட்டிருக்கும் முதலீடுகளின் அளவு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மலிவு விலை ஏ.ஐ. சாத்தியமானது எப்படி?

இது ஓபன் சோர்ஸ் டீப்சீக்-வி3 மாடலால் செயல்படுகிறது. இதை உருவாக்க 6 மில்லியன் டாலர்களைவிட குறைவான தொகையே செலவானதாக அதன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகை அதன் போட்டியாளர்கள் செலவிட்ட பல பில்லியன் டாலர்களைவிட கணிசமான அளவு குறைவு.

ஆனால் இந்த கூற்றை இத்துறையில் இருக்கும் மற்றவர்கள் மறுக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துவரும் சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

DeepSeek, அமெரிக்கா - சீனா

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

உயரிய தொழில்நுட்பத்துடனான இறக்குமதி செய்யப்பட்ட சிப்கள் சீராக கிடைக்காத நிலையில், சீன செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் தங்களது பணியை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டதுடன், அந்த தொழில்நுட்பம் தொடர்பான புதிய அணுகுமுறைகளையும் முயற்சித்திருக்கின்றனர்.

இதனால் முன்பைவிட குறைவான அளவே கணினி ஆற்றல் தேவைப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பு நினைத்ததைவிட குறைவாகவே செலவாகும் என்பதால், இந்த துறை மேம்பட வாய்ப்புகள் உள்ளன.

முன்னதாக இம்மாதத்தில் டீப்சீக்-ஆர் 1 அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கணிதம், கோடிங் மற்றும் மொழி பகுத்தறிதல் போன்றவற்றில் இதன் செயல்பாடு சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ உருவாக்கிய மாடல்களுக்கு இணையாக இருப்பதாக அந்த நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்தது.

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சீனாவுக்கு உயர் ரக சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள இந்த சூழலில் டீப்சீக் செயலி வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

முதலீடுகள் பாதிக்கப்படக் கூடும்

சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளரும், டொனால்ட் டிரம்பின் ஆலோசகருமான மார்க் ஆண்டர்சன், டீப்சீக்-ஆர்1 -சோவியத் யூனியன் 1957இல் செயற்கைக்கோள் ஏவியதை போன்றது என்று சுட்டிகாட்டும் வகையில் “ஏ.ஐ. துறையின் ஸ்புட்னிக் தருணம்” என விவரித்தார் .

அந்த காலகட்டத்தில், அமெரிக்கா எதிராளியின் தொழில்நுட்ப சாதனை குறித்து அறியாமல் இருந்ததாக கருதப்பட்டது.

டீப்சீக் செயலிக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு பங்குச் சந்தைகளை திடுக்கிடச் செய்துள்ளது. சிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஏஎஸ்எம்எல் நிறுவனத்தின் பங்குகள் 10%-க்கு மேல் சரிவடைந்தன. ஏ.ஐ தொடர்பான பொருட்களை தயாரிக்கும் சீமென்ஸ் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 21% குறைந்தது.

“ஒரு குறைந்தவிலை சீனத் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பு இல்லாததால், இது சந்தைகளை சற்றே ஆச்சரியமடைய வைத்துள்ளது,” என்றார் சிட்டி இண்டெக்ஸில் மூத்த சந்தை ஆய்வாளரான ஃபியோனா சின்கோட்டா.

“திடீரென இந்த குறைந்த விலை ஏ.ஐ மாடல் கிடைத்ததால், விலை உயர்ந்த ஏ.ஐ கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ள அதன் போட்டி நிறுவனங்களின் லாபம் குறித்த கேள்விகளை எழுப்பப் போகிறது.”

இது “ஏ.ஐ தொழில்நுட்ப விநியோக சங்கிலியில் செய்யப்படும் முதலீடுகளை தடம்புரள செய்யக்கூடும்” என சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்ப பங்குகள் ஆலோசகர் வே-செர்ன் லிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு டீப்சீக் சவாலாக இருந்தாலும், சீன நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் அவற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடும் என பெருவங்கியான சிட்டி பேங்க் எச்சரித்துள்ளது.

“தவிர்க்க முடியாத கூடுதல் கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில், உயரிய தொழில்நுட்பம் கொண்ட சிப்கள் அதிக அளவில் கிடைப்பது அமெரிக்காவிற்கு ஒரு சாதகம், என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டெக்ஸாஸில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்காக 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஸ்டார்கேட் புராஜெக்ட் என்ற நிறுவனத்தை தொடங்குவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்ட கூட்டமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.

DeepSeek, அமெரிக்கா - சீனா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இத்தனை மலிவான விலையில் ஏ.ஐ மாடல் கிடைத்ததால், ஏ.ஐ கட்டமைப்புகளுக்காக பல கோடி முதலீடு செய்யும் போட்டி நிறுவனங்களின் லாபம் கேள்விக்குறியாகிறது.

டீப்சீக்கை உருவாக்கியது யார்?

இந்த நிறுவனம் தென்கிழக்கு சீனாவின் ஹேங்ஜூ நகரில் லியாங் வென்ஃபெங் என்பவரால் 2023-ல் தொடங்கப்பட்டது.

40 வயதான இவர், தகவல் மற்றும் மின்னணு பொறியியல் பட்டதாரி என்பதுடன் டீப்சீக்கை ஆதரித்த ‘ஹெட்ஜ்’ நிதியை உருவாக்கியவரும் இவர்தான்.

இவர் தற்போது சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது தடை விதிக்கப்பட்டுள்ள என்விடா ஏ100 சிப்களை வாங்கிச் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இது சுமார் 50,000 சிப்கள் என கணிக்கப்படுகிறது. இந்த சேகரிக்கப்பட்ட சிப்புகளை, மலிவு விலையில் இறக்குமதி செய்யக்கூடிய சிப்புகளுடன் இணைத்து , டீப்சீக்கை இவர் உருவாக்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அண்மையில் தொழில்துறை நிபுணர்களுடன் சீன பிரதமர் நடத்திய சந்திப்பில் லியாங்கும் காணப்பட்டார்.

2024, ஜூலையில் சீன அகாடமிக்கு அளித்த பேட்டியில் தனது முந்தைய ஏஐ மாடலுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியமடைந்ததாக கூறினார்.

“கட்டணம் இவ்வளவு முக்கியமான விஷயமாக இருக்கும் என்று நாங்கள் கருதவில்லை,” என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் எங்களுடைய வேகத்தில் செயல்பட்டு, செலவுகளை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்தோம்.” என்றார் அவர்.

கூடுதல் தகவல்கள் – ஜோவா டா சில்வா மற்றும் டியர்பெய்ல் ஜோர்டன்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு