இலங்கை கடற்படையினரை கடத்த முயன்ற இந்திய கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு கடற்தொழிலாளிகள் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை கடற்பரப்பினுள் படகொன்றில் 13 கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர்
அதன் போது , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தொழிலாளிகளை கைது செய்யும் நோக்குடன் அவர்களின் படகில் ஏறிய வேளை , படகில் ஏறிய கடற்படையினருடன் படகில் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.
அதனை அடுத்து கடற்படையினர் படகின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படகினை வழிமறித்து படகில் இருந்த கடற்படையினரை மீட்டதுடன் , படகில் இருந்த 13 கடற்தொழிலாளிகளையும் கைது செய்தனர்.
அவர்களின் இருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில் , அவர்களை பருத்தித்துறை பொலிஸார் ஊடாக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஏனைய 11 பேரையும் கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.