அமெரிக்க நிதியுதவி நிறுத்திவைப்பு: டிரம்ப் உத்தரவால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அதில் ஒன்று பிற நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவி தொடர்பானது.
வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மறுஆய்வு செய்யப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
டொனால்ட் டிரம்பின் இந்த முடிவு இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் உட்பட பல நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க ஏஜென்ஸி (USAID) வங்கதேசத்திற்கு உதவிகளை வழங்குகிறது.
அந்த ஏஜென்ஸி வங்கதேசத்திற்கான அனைத்து வகையான உதவிகளையும் உடனடியாக நிறுத்தியுள்ளது. தனது திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு கூட்டாளியையும் தங்கள் வேலையை நிறுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை யுஎஸ்ஏஐடி (USAID) தனது கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளது.
டிரம்ப் முடிவால் வங்கதேசம் மீதான தாக்கம் என்ன?
சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், நல்லாட்சி, ஜனநாயகத்தை மேம்படுத்துதல் மற்றும் பிற துறைகளின் வளர்ச்சிக்காக யுஎஸ்ஏஐடி வங்கதேசத்திற்கு நிதியளிக்கிறது.
மொத்த உதவித்தொகை சுமார் 20 கோடி டாலர்கள். இது தவிர 2023ஆம் ஆண்டில், அமெரிக்கா பல்வேறு ஏஜென்சிகள் மூலம் வங்கதேசத்திற்கு முதலில் 49 கோடி டாலர்களும், பின்னர் 55 கோடி டாலர்களும் உதவித்தொகை அளித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் யுஎஸ்ஏஐடி, வளர்ச்சி இலக்கு மானிய ஒப்பந்தத்தின் (டிஓஏஜி) கீழ் வங்கதேசத்திற்கு 20 கோடி டாலர் உதவி வழங்குவதாக உறுதியளித்தது.
இருப்பினும் வங்கதேசத்திற்கு அமெரிக்கா அளிக்கும் பொருளாதார உதவியின் பெரும்பகுதி மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கானது.
2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா பிரச்னை தொடங்கிய பிறகு லட்சக்கணக்கான அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்த நெருக்கடி துவங்கியதில் இருந்து அமெரிக்கா, சுமார் இரண்டரை பில்லியன் டாலர்களை வங்கதேசத்திற்கு அளித்துள்ளது என்று யுஎஸ்ஏஐடி இணையதளம் தெரிவிக்கிறது.
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பிற சமூகங்களுக்கு உதவுவதற்காக இந்த தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா அகதிகளுக்கு என்ன பாதிப்பு?
உலகம் முழுவதுமே வளர்ச்சிப் பணிகள் முதல் ராணுவத் துறை வரை அமெரிக்கா பொருளாதார உதவிகளை வழங்குகிறது.
உதவிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்க அதிபரின் முடிவில் இருந்து சில துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவசரகால உணவு உதவி மற்றும் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் ராணுவ உதவி ஆகியவை இதில் அடங்கும்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட வங்கதேச அரசின் தலைவர் முகமது யூனுஸ், ரோஹிங்கியா அகதிகளுக்கான உயிர் காக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுக்கு விலக்கு அளித்தமைக்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள் உயர் பிரதிநிதி டாக்டர் கலீல் உர் ரஹ்மானை சந்தித்ததாகவும், இந்த விலக்கு குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் முகமது யூனுஸின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று டாக்காவில் உள்ள வெளியுறவு சேவை அகாடமியில், முதன்மை ஆலோசகரின் செய்திச் செயலர் ஷஃபிகுல் ஆலம் மற்றும் துணை செய்திச் செயலர் அபுர்பா ஜஹாங்கிர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இது வங்கதேசத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று ஷஃபிகுல் ஆலமிடம் அப்போது கேட்கப்பட்டது. வங்கதேசத்தில் அமெரிக்காவின் உதவி குறிப்பாக ரோஹிங்கியா சமூகத்தினருக்காகவே வருகிறது என்று அவர் பதில் அளித்தார்.
இந்த முடிவு வங்கதேசத்தை அவ்வளவாக பாதிக்காது என்றார் அவர். இந்த உதவி வரும் நாட்களிலும் தொடரும் என வங்கதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வங்கதேச பொருளாதார நிலை
வங்கதேசம் 1971ஆம் ஆண்டு உருவானது. அதன் பிறகு அந்த நாட்டில் பெரும்பாலும் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் ஆட்சியே இருந்தது.
கடந்த ஆண்டு வெடித்த போராட்டம் காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியா செல்ல நேரிட்டது.
2009ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அதிகாரத்தை கைப்பற்றிய போது, வங்கதேசத்தின் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக இருந்தது. இது 2017-18-ஆம் நிதியாண்டில் 8 சதவிகிதமாக அதிகரித்தது.
2023ஆம் ஆண்டில் உலக வங்கி ‘உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்’ என்று வங்கதேசத்தை வர்ணித்தது.
1971ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஏழை நாடு என்ற பிரிவில் இருந்த வங்கதேசம் 2015ஆம் ஆண்டு ‘குறைந்த நடுத்தர வருமானம்’ கொண்ட நாடு என்ற பிரிவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது என்று உலக வங்கி தெரிவித்தது.
இருப்பினும் கடந்த வியாழனன்று டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய முகமது யூனுஸ், நாட்டின் வளர்ச்சி புள்ளி விவரங்கள் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ‘போலியான புள்ளி விவரங்கள்’ என்று குறிப்பிட்டார்.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு பேட்டி அளித்த அவர்,”ஷேக் ஹசீனா டாவோஸுக்கு வந்து நாட்டை எப்படி வழிநடத்துவது என்று எல்லோரிடமும் சொல்லுவார். அதை யாருமே கேள்வி கேட்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.
“எங்கள் வளர்ச்சி விகிதம் எல்லோரையும் விட அதிகம் என்று அவர் சொல்லுவார். அவை அனைத்தும் முற்றிலும் போலியான புள்ளி விவரம்” என்று முகமது யூனுஸ் மேலும் கூறினார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வங்கதேசத்தின் வளர்ச்சி விகிதத்தில் சரிவு காணப்பட்டது. ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் அதாவது 2009 முதல் 2024 ஜூலை வரை வங்கதேசத்தின் பொருளாதாரம் 6.3 சதவிகிம் என்ற விகித்தில் வளர்ந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 123 பில்லியன் டாலரில் இருந்து 455 பில்லியன் டாலராக அதிகரித்தது.
அமெரிக்காவின் முடிவு இந்தியா மீது தாக்கம் செலுத்துமா?
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் கொள்கை ‘யாரிடமிருந்தும் நிதி உதவி பெறக்கூடாது. அதை பிறருக்கு வழங்க வேண்டும்’ என்பதாக இருந்து வருகிறது. 2004-ஆம் ஆண்டு சுனாமியின் போது இது தொடங்கியது.
சுனாமிக்குப் பிறகு இந்தியாவுக்கு உதவி வழங்க உலகின் பல நாடுகள் முன்வந்தன. ஆனால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவற்றை ஏற்க மறுத்துவிட்டார். இந்த முடிவு, பேரிடர்களின் போது உதவி நாடும் இந்தியாவின் கொள்கையில் பெரும் மாற்றமாக பார்க்கப்பட்டது.
“சூழ்நிலையை எங்களால் சமாளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தேவைப்பட்டால் அவர்களின் உதவியைப் பெறுவோம்” என்று 2004 டிசம்பரில் மன்மோகன் சிங் கூறினார்.
இயற்கை பேரிடர்களின் போது உதவியை நாடக் கூடாது என்பது அப்போது எடுக்கப்பட்ட முடிவு. ஆயினும் இந்தியா மற்ற துறைகளிலும் அதை செயல்படுத்தத் தொடங்கியது. இருந்த போதிலும் யுஎஸ்ஏஐடி மூலம், இந்தியாவின் சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், தூய எரிசக்தி, நீர் மற்றும் தூய்மை போன்ற துறைகளுக்கு உதவி அளிக்கப்படுகிறது.
யுஎஸ்ஏஐடி மற்றும் பிற அமைப்புகளின் மூலம் இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உதவி கடந்த பத்தாண்டுகளில் பெருமளவு குறைந்து சில மில்லியன் டாலர்களாக மட்டுமே இருக்கிறது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கிறது.
அமெரிக்க நிர்வாகத்தின் சமீபத்திய முடிவு இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போது அளவிடுவது அவசரத்தனமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகமும் அதை மதிப்பீடு செய்து வருகிறது.
“நிர்வாக ஆணையின் கீழ் நாங்கள் மானியங்களை வழங்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த இது மதிப்பாய்வு செய்யப்படுகிறது,” என்று தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள் மற்றும் ஏஜென்சிகள் 2023ஆம் ஆண்டில் 20 கோடி டாலர்கள் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளன. இது 2024இல் 15 கோடி டாலர்களாகக் குறைந்துள்ளது என்று அமெரிக்க அரசின் வெளிநாட்டு உதவி இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த முடிவு இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.