எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் இருவர்; மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அதில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் மீது தனது படை பலத்தை இலங்கை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்த சம்பவத்தில் மீனவர்களில் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன், மூவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய துணைத்தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய்முரளியும் பார்வையிட்டுள்ளார். இந்திய மீனவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.