by smngrx01

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற கிராமத்தில் மர்ம நோயால் 17 பேர் உயிரிழந்ததை அடுத்து ரஜவுரி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஜவுரி அரசு மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அமர்ஜீத் சிங் பாட்டியா  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “கடந்த ஒன்றரை மாதங்களில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து மருத்துவ எச்சரிக்கை நிலைமையைச் சமாளிக்க மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர்கால விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

17 இறப்புகளிலும் பொதுவான காரணி மூளை பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளது.தற்போதைய சுகாதார நிலைமையை எதிர்கொள்ள ஜம்மு-காஷ்மீர் அரசு மருத்துவ வசதிக்கு உதவுவதற்காக ஜிஎம்சி ரஜோரிக்கு 10 கூடுதல் மருத்துவ மாணவர்களை அனுப்பியுள்ளது.” என தெரிவித்தார்.

மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய அதிகாரிகள் “ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையிலும் சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. மூன்று சகோதரிகள் உட்பட நான்கு பேர் விமானம் மூலம் ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு ஜன.22 அன்று கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட மேலும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகயாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 24 2025) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ரஜவுரியில் உள்ள நர்சிங் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. ரஜோரி நர்சிங் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் முதல் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தவர்கள் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்புடைய பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொலைதூரப் பகுதியான பதால் கிராமம் புதன்கிழமை (ஜனவரி 22 2025) ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மர்ம மரணங்களைத் தொடர்ந்து அனைத்து பொது மற்றும் தனியார் கூட்டங்களுக்கும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்