by smngrx01

வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ் தமிழகத்துக்கு இதுவரை ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதில், உலக அளவில் பொருளாதார நிலை, வணிக மாற்றங்கள், மாறி வரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற பல்வேறு மாநிலங்கள் பெருமளவு முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. பிற மாநிலங்கள் எல்லாம் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த கூட்டத்திலும் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் கூறுவதுபோல், “தமிழகத்துக்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை” என்பதையே இது காட்டுகிறது. உண்மையான முதலீட்டாளர்கள் தமிழகத்தை நாடி வருவதாக தெரியவில்லை. எங்கள் ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என்று கூப்பாடு போட்டு வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் எவ்வளவு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. உண்மையில் இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்