by smngrx01

மதுரையிலிருந்து மேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு 25 கி.மீ. தூரம் மக்கள் திரண்டு வழிநெடுகிலும் வரவேற்பளித்தனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் சென்னைக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து மேலூர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதையேற்று நேற்று முதல்வர் மதுரை வந்தார்.மதுரையிலிருந்து காரில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டிக்கு சென்ற முதல்வருக்கு 25 கி.மீ. தூரம் மக்கள் சாலையோரம் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். கிராமங்களில் செல்லும்போது மக்கள் பட்டாசு வெடித்து முதல்வரை வரவேற்றனர். வழிநெடுகிலும் முதல்வரை வரவேற்று பதாகைகளை ஒட்டியிருந்தனர். முதல்வர் அரிட்டாபட்டிக்கு வந்ததும் பெண்கள் குலவையிட்டு வரவேற்றனர்.

அரிட்டாபட்டி மந்தைக்கருப்பு திடலுக்கு மாலை 5.55 மணிக்கு வந்த முதல்வர் அங்குள்ள மேடையில் சுமார் 10 நிமிடம் பேசிவிட்டு அ.வல்லாளபட்டிக்குச் சென்றார். அரிட்டாபட்டியில் பொதுமக்கள் பலர் முதல்வரிடம் மனு அளித்தனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்த டி.கல்லுபட்டியைச் சேர்ந்த பவித்ரா, வேலுநாச்சியார் போல தலைப்பாகை அணிந்து வந்து ஆசிரியர் பணி வழங்கக் கோரி முதல்வரிடம் மனு கொடுத்தார். இடப்பிரச்சினை தொடர்பாக முதுகுளத்தூர் ஏனாதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் மனு அளித்தார்.

அ.வல்லாளபட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு கள்ளழகர் சிலையை
நினைவுப்பரிசாக வழங்கிய போராட்டக் குழுவினர். அ.வல்லாளபட்டியில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பலகாரர்கள் மகாமுனி, சேதுராகவன் ஆகியோர் மக்கள் சார்பில் முதல்வருக்கு கள்ளழகர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கே.ஆர். பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், எம்.பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாராட்டு விழா குறித்து அ.வல்லாள பட்டியைச் சேர்ந்த விஜிதா கூறுகையில், டங்ஸ்டன் திட்டத்தால் மக்கள் 3 மாதங்களாக நிம்மதியின்றி இருந்தனர். டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு முதல்வர்தான் காரணம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து திட்டம் ரத்தாகும் என்ற நம்பிக்கை இருந்தது. குடியரசு தினத்தன்று முதல்வர் எங்கள் கிராமத்துக்கு வந்தது பெருமையாக உள்ளது என்றார்.

இந்திரா கூறுகையில், முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வர விடமாட்டேன் என்றார். அவர் சொன்னபடி செய்துள்ளார் என்றார். வல்லாளபட்டி விஜய் கூறுகையில், டங்ஸ்டன் திட்டம் ரத்தானதால் அச்சத்தில் இருந்த மக்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்