ரஞ்சி கோப்பை : 42 முறை வென்ற மும்பை அணி ஜம்மு காஷ்மீரிடம் தோல்வி, போட்டியில் நடந்தது என்ன?
- எழுதியவர், குர்ரம் ஹபீப்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
தனது இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற ஜம்மு காஷ்மீர் இப்போது ஒரு புதிய அடையாளத்தை பெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாட்டால், அதன் பெயர் இப்போது கிரிக்கெட்டிலும் புகழ்பெற்று வருகிறது.
ரஞ்சி கோப்பையில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி. அந்த அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்திறன் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
ரஞ்சி கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட இடம்பிடித்துவிட்டது.
அவர்கள் மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். மும்பை அணியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஐந்து டெஸ்ட் வீரர்களும், முதல் தர கிரிக்கெட் அனுபவம் மிக்க வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜின்கியா ரகானே, சர்துல் தாக்கூர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற அனுபவிக்க வீரர்கள் இருந்தாலும், அது ஜம்மு காஷ்மீர் அணியின் பந்துவீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஜம்மு காஷ்மீர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மும்பை அணியை இரண்டு இன்னிங்ஸ்களில் 120 மற்றும் 290 ரன்களுக்கு வெளியேற்றினர்.
சிறப்பான ஆட்டம் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகளை ‘டிரா’ செய்து 29 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. வலுவான பரோடா மற்றும் மும்பை அணிகளை அவர்கள் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
இந்த வெற்றி ஏன் முக்கியமானது?
ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பை அதிக வெற்றிகளை பெற்ற அணி என்பதால் ஜம்மு காஷ்மீரின் வெற்றி உண்மையிலேயே ஒரு பெரிய வெற்றிதான். மும்பை அணி ரஞ்சி கோப்பையை 42 முறை வென்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியை 6 முறை அடைந்துள்ளது.
மறுபக்கமோ, ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப் போட்டியை விடுங்கள், அரையிறுதியைக் கூட எட்டியது கிடையாது.
அதோடு, வசதிகளை பொறுத்தவரை மும்பையோடு ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீர் ஒன்றுமேயில்லை.
ரஞ்சி கோப்பையின் தொடங்கும்போது இருந்த அணிகளில் மும்பையும் ஒன்று. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைமையகம் மும்பைதான். ரஞ்சி கோப்பையின் முதல் சீஸனை மும்பை அணி வெற்றி பெற்றது.
வான்கடே மைதானம், இந்திய கிரிக்கெட் கிளப்பின் பிராபர்ன் மைதானம் மற்றும் சரத் பவார் விளையாட்டு வளாகம் போன்ற பெரிய, நவீன கிரிக்கெட் மைதானங்கள் மும்பையில் உள்ளன.
வான்கடே மைதானமும், சரத் பவார் மைதானமும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சொந்த மைதானங்களாகும்.
மறுபுறம், ஜம்மு காஷ்மீரிடம் இரண்டு அல்லது மூன்று மைதானங்கள் தான் உண்டு. அவையும் கல்லூரிகளுக்கோ அரசுத் துறைகளுக்கோ சொந்தமானவை.
ஶ்ரீநகரில் பனிபொழிவு இருந்ததால், ஜம்மு காஷ்மீர் அணி 4-5 நாள் பயிற்சி முகாமை ஜம்முவில் உள்ள கல்லூரி மைதானம் ஒன்றில் நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் கிரிக்கெட் கட்டமைப்பு
அரசியல் நிலைத்தன்மை இல்லாததால், ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை.
மும்பை அணிக்கு எதிரான ஜம்மு காஷ்மீர் அணியின் வெற்றி அதிர்ச்சி அளித்தாலும், இதுபோன்ற ஏதோ ஒன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான்.
தனது அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெறுவோம் என உறுதியான நம்பிக்கை இருந்ததாக ஜம்மு காஷ்மீர் அணியின் அனுபவமிக்க கேப்டன் பரஸ் டோக்ரா கூறினார்.
நாட்டிலேயே அதிக ஆற்றல் மிக்க வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டது ஜம்மு காஷ்மீர் என்பதால் வெற்றி பெறுவோம் என உறுதியாக இருந்ததாக டோக்ரா தெரிவித்தார்.
“நாங்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம் என்பதோடு ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. எனவே மும்பை அணியை வீழ்த்த முடியும் என எங்களுக்கு தெரியும். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.” என்றார் பரஸ் டோக்ரா.
“உள்நாட்டு கிரிக்கெட்டை பொறுத்தவரை எங்களது வேகப்பந்து வீச்சுதான் சிறந்தது. அகிப் நபி, உமர் நசீர், மற்றும் யுத்வீர் சிங் ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் எதிர் அணியை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர்,” என பரஸ் டோக்ரா தெரிவித்தார்.
“ரசிக் சலாம் (ஐபிஎல் நட்சத்திர வீரர்) காயமடைந்தார், இருப்பினும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.”
ரசிக் சலாம் தவிர வேகப்பந்து வீச்சாளர் உமர் மாலிக்கும் காயமடைந்தார். அதனால் அணியிலிருந்து இந்த சீசன் முழுவதும் விலகி இருந்தார்.
“செந்நிற பந்துடன் விளையாடும்போது, நீங்கள் சரியான திசையில் பந்துவீசினால் அது பலனளிக்கும். எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்தை விக்கெட்டிற்கு உட்புறமும் வெளிப்புறமும் திரும்பச் செய்கின்றனர். அதே போல் சரியான நேரத்தில் அவர்கள் பந்தை வீசுகின்றனர். ஒரு பந்து வீச்சாளர் இவ்வளவு தூரம் ஊடுருவும் வகையில் பந்தை வீசும்போது அது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலாக உருவாகிறது.” என டோக்ரா கூறுகிறார்.
ஜம்மு காஷ்மீர் அணியில் மிகவும் அனுபவம் மிக்க பந்துவீச்சாளரகளில் 31 வயதான உமர் நசீர் மிர்ரும் ஒருவர்.
உமர் 58 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் முதல் தர கிரிக்கெட்டை 2013-ல் விளையாடத் தொடங்கினார்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவை வெளியேற்றியதன் மூலம் உமர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது உயரம், பந்து வீசுவதற்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் அடித்தளம்
ஜம்மு காஷ்மீர் அணியை இந்த இடத்திற்கு கொண்டு வருவதில் இரண்டு பேர் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். ஒருவர் அணி தலைவர் பரஸ் டோக்ரா, மற்றொருவர் பயிற்சியாளர் அஜய் சர்மா.
உள்நாட்டு கிரிக்கெட்டில் அஜய் சர்மா பெயர் பெற்ற வீரர். முதல் தர கிரிக்கெட்டில் அவர் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவும் அஜய் சர்மாவுக்கு உண்டு.
தனது நீண்ட அனுபவம் காரணமாக கிரிக்கெட்டில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவற்றை அஜய் சர்மா நன்கறிவார்.
இந்த சீசனில் ஷுபம் கஜூரியாவும் ஜம்மு காஷ்மீர் அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அணியின் வெற்றியில் அஜய் சர்மாவின் அனுபவம் மிகப்பெரிய பங்காற்றியிருப்பதாக ஷுபம் கஜூரியா சொல்கிறார்.
ஆறு போட்டிகளில் 57.56 என்ற சராசரியுடன் ஷுபம் கஜூரியா 518 ரன்களை எடுத்துள்ளார். ரன்கள் அடிப்படையில் அவர் நாட்டில் 11ஆவது தரவரிசையில் உள்ளார்.
இந்த சீசனில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் ஷுபம் கஜூரியா 255 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் அணியில் இந்த சாதனையைச் செய்த மூன்றாவது வீரர் கஜூரியா.
இதுமட்டுமல்ல, ஒரு இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீருக்கு அதிக ரன் எடுத்தவரும் கஜூரியா தான்.
தனது வெற்றிக்கு அஜய் சர்மாவை காரணமாக கூறுகிறார் கஜூரியா.
“ஒரு நல்ல தொடக்கத்தை ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்றுவது எப்படி என அஜய் சார் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார். 30 ரன்களில் பேட் செய்துகொண்டிருந்தால் அதை 70-ஆக மாற்றுவது எப்படி என சொல்லித் தந்திருக்கிறார். பின்னர் நீங்கள் 70 அல்லது 100 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தால், அதிலிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை கட்டியெழுப்புவது எப்படி என கற்றுத் தந்திருக்கிறார்” என்கிறார் அவர்.
29 வயதான கஜூரியா, 2011-ல் 15 வயதில் முதன்முதலில் களம் கண்டார். அப்போது முதலே பரஸ் டோக்ராவின் தாக்கம் தம்மீது இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மும்பைக்கு எதிரான இரண்டாவது வெற்றி
ரஞ்சி கோப்பையில் ஜம்மு காஷ்மீருக்கு, மும்பைக்கு எதிரான இரண்டாவது வெற்றி இது என்பது முக்கியமானது.
2014-15 சீசனில் வான்கடே மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் வெற்றி பெற்றது. கஜூரியா அந்த அணியிலும் இருந்தார்.
“நாங்கள் எப்போதும் இமாச்சல பிரரேசத்திற்கு எதிராக விளையாடுவோம் என்பதால் நான் அவருடைய (டோக்ரா) பாணியை பின்பற்ற முயற்சி செய்ததுண்டு,” என்றார் கஜூரியா.
“அவர் ஜம்மு காஷ்மீர் அணியின் பேட்டிங்கிற்கு ஸ்திரத்தன்மையையும் அனுபவத்தையும் சேர்த்துள்ளார். அவர் ஒரு ஆசிரியர் போன்றவர். உள்நாட்டு கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் இரண்டு பேர்தான் உண்டு,” எனச் சொல்கிறார் கஜூரியா.
“எங்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன. சரியான நேரத்தில் முடிவெடுப்பது, பீல்டிங் அமைப்பு போன்றவை பெரிய மாற்றாத்தை கொடுத்துள்ளன,” என்கிறார்.
“நாங்கள் கோப்பையை வென்றதே இல்லை,” என்கிறார் கஜூரியா. “ஆனால் இம்முறை இறுதிப் போட்டியை எட்டுவதுடன் கோப்பையையும் வெல்வதில் உறுதியாக இருக்கிறோம். நாக் அவுட் சுற்றை 2-3 முறைதான் சென்றிருக்கிறோம்.”
பேட்மேன்கள் மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் அஜய்-பரஸ் இரட்டையரின் விசிறிகள்தான்
வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபில் இந்த ரஞ்சி கோப்பை சீசனில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். விக்கெட்டுகள் எண்ணிக்கையில் நாட்டில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை அவர் முதலிடத்தில் உள்ளார்.
28 வயதான அவர் 2019-ல் ரஞ்சி கோப்பையில் முதன்முறையாக விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சி முகாமில் டேல் ஸ்டைனிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
“சிவப்புபந்து குறித்த சில நுட்பமான விஷயங்களை ஸ்டைனை கேட்டேன். அவர் சொன்ன சில ஆலோசனைகளை நான் எனது பந்துவீச்சில் சேர்த்துக்கொண்டேன்.” என்கிறார் நபி.
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் சிறந்த செயல்பாட்டுக்கு கேப்டன் டோக்ரா மற்றும் பயிற்சியாளர் சர்மாவும் தான் காரணம் என நபியும் கூறுகிறார்.
“டோக்ராவிற்கு அதிக அனுபவம் உள்ளது. அவர் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவந்துள்ளார். எங்களுக்கு அழுத்தமாக இருக்கும்போது நாங்கள் அவரிடம் பேசுவோம். அது எங்களுக்கு பெருமளவு பயனளிக்கிறது.” என நபி சொல்கிறார்.
“அஜய் சர்மா சாரை பொறுத்தவரையும் இதுவேதான் உண்மை. அவர் எங்களை அதிகம் உற்சாகப்படுத்துகிறார். பேட்டிங்கிலோ, மனோபாவத்திலோ எந்த வீரருக்கு பிரச்னை ஏற்பட்டால், அஜய் சார் அவரிடம் பேசி அவரது செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவுவார்.”
“அணியிலுள்ள ஒவ்வொரு வீரரும் அவரது சிறந்ததை தரவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்,” என்கிறார் நபில்.
“அதிகபட்ச உழைப்பை தரவேண்டும் என விரும்புவதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வீரர்களை கடினமாக உழைக்க வைக்கிறார்கள்.”
காலிறுதிக்கு ஒரு படியே இருந்தாலும், அடுத்த சுற்றில் ஜம்மு காஷ்மீர் அணிக்கான இடம் உறுதி செய்யப்படவில்லை. அதற்கு, பரோடாவுடனான கடைசி போட்டியை அவர்கள் குறைந்தபட்சம் ‘டிரா’ செய்யவேண்டும்.
ஆனால் அவர்கள் தோல்வியடைந்து, மும்பை மேகாலயாவை ஒரு இன்னிங்ஸ் அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தினால், ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்தை பிடிக்கும் சாத்தியம் உள்ளது. அதாவது அவர்களால் 8 அணிகளுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்க முடியாது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு