டிரம்ப் மிரட்டல்: அமெரிக்காவுடன் மோத துணிந்த சில மணி நேரத்தில் பின்வாங்கிய கொலம்பியா
- எழுதியவர், ஐயோன் வெல்ஸ், மாலு கர்சினோ
- பதவி, பிபிசி நியூஸ்
-
கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுளது. நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் வரிவிதிப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கொலம்பிய குடியேறிகளை கொண்ட இரண்டு விமானங்களை, கொலம்பியாவில் தரையிறக்க அந்நாட்டு அதிபர் அனுமதி அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து கொலம்பியா மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோ நாடு கடத்தப்படும் குடியேறிகளை பொது மக்கள் போக்குவரத்துக்கான விமானங்கள் மூலமே அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்த நிபந்தனைகளை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ள அவர், அமெரிக்க ராணுவ விமானத்தில் அவர்களை அழைத்து வர ஒப்புக் கொண்டுள்ளார் எந்தவித கட்டுப்பாடும் தாமதமும் இல்லாமல் அவர்களை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் குடிமக்களின் கண்ணியம் காக்க”, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும் என்று கொலம்பியா தெரிவித்துள்ளது.
சமூக ஊடக பக்கங்களில் இரு நாட்டு தலைவர்களும் மாறிமாறி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் அதிபர் டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்கா கருதுகிறது.
டிரம்ப் உத்தரவைக் கண்டித்து அதிபர் பெத்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவிட்ட சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில் இருந்த “முட்டுக்கட்டை கடக்கப்பட்டது” என்று கொலம்பிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா இந்த ஒப்பந்தத்தின்படி நடக்காவிட்டால், முழுமையான வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
விசா தடைகளும், கொலம்பியர்கள் மீது எல்லையில் கண்காணிப்பும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவுகள், நாடு கடத்தப்பட்டவர்கள் வெற்றிகரமாக கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொலம்பிய வெளியுறவுத்துறை அமைச்சர் லூயி கில்பெர்டோ முரில்லோ, “நாடு கடத்தப்பட்டு, தாயகம் திரும்புபவர்களை கொலம்பியா தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகளுடன் கண்ணியமான சூழல் ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.
தடுத்து நிறுத்தப்பட்ட அமெரிக்க ராணுவ விமானங்களில் இருந்த கொலம்பியர்களை கூட்டி வர கொலம்பிய அதிபரின் விமானம் தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார். முரில்லோ, உயர் மட்ட கூட்டங்களுக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக கொலம்பிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தான் பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் குடியேற்றம் சம்பந்தமான பல உத்தரவுகளில் கையெழுத்திட்டிருந்தார்.
முன்னதாக, நாடு கடத்தப்பட்டவர்களை அழைத்துச் சென்ற அமெரிக்க விமானங்களை கொலம்பியா தடுத்து நிறுத்தியதை அடுத்து, அமெரிக்காவுக்குள் வரும் கொலம்பியாவின் அனைத்து பொருட்கள் மீது 25% வரி விதிப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அடுத்த ஒரு வாரத்தில் இது 50% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு கொலம்பியா 25% வரி விதிக்கும் என்று கூறினார். .
அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று ஞாயிற்றுகிழமை பெத்ரோ தெரிவித்திருந்தார். “எங்கள் நாட்டு குடிமக்களை, பொது மக்கள் பயன்பாட்டுக்கான போக்குவரத்து விமானங்களில் மூலமே வரவேற்க விரும்புகிறோம். அவர்களை குற்றவாளிகள் போல நடத்த விரும்பவில்லை, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்று கொலம்பிய அதிபர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் “உடனடி மற்றும் பதிலடி நடவடிக்கைகளை” அறிவித்தார். பயண தடை விதிக்கப்படும் என்றும் கொலம்பிய அரசு அதிகாரிகளின் விசா திரும்ப பெறப்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.
கொலம்பிய அரசுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது விசா தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். கொலம்பிய நாட்டவர் மீதும் கொலம்பிய சரக்குகள் மீதும் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.
“இவை ஆரம்பம் மட்டுமே” என்று கூறிய டிரம்ப், “அமெரிக்காவுக்குள் கொலம்பிய அரசு திணித்துள்ள குற்றவாளிகளை திரும்ப பெறுவது குறித்த சட்ட ரீதியான கடமைகளை கொலம்பிய அரசு மீற அமெரிக்கா அனுமதிக்காது” என்றும் எச்சரித்தார்.
தனது எக்ஸ் பக்கத்தில் கொலம்பிய அதிபர் பெத்ரோ, “உங்கள் தடைகள் என்னை அச்சுறுத்தவில்லை. ஏனென்றால் கொலம்பியா அழகானது மட்டுமல்ல, உலகின் மையமாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
கொலம்பியா மீது வரி விதிப்பதால் யாருக்கு பாதிப்பு?
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கண்ணியத்துடன் அழைத்து வர தனது அதிபர் விமானத்தை தருவதாகவும் கொலம்பிய அதிபர் பெத்ரோ தெரிவித்தார்.
கொலம்பியாவில் 15,666 அமெரிக்கர்கள் சட்டவிரோதமாக இருப்பதாக கொலம்பிய அதிபர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அந்த எண்ணிக்கை சரியானதா என்று பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
டிரம்ப் நிர்வாகத்தை போல் அல்லாமல் சட்டவிரோதமாக குடிபெயர்ந்திருக்கும் அமெரிக்கர்கள் மீது தனது அரசு எப்போதும் சோதனை நடத்தாது என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா தனக்கு தேவையான காபியில் 20% (இரண்டு பில்லியன் டாலர் மதிப்பு) கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. வாழைப்பழங்கள், கச்சா எண்ணெய், பூக்கள் ஆகியவற்றையும் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.
இந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டால், இவற்றை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கும். அந்த சுமை அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் மீது ஏற்றப்படலாம்.
இறக்குமதி செலவு அதிகரிப்பதால், கொலம்பியா அல்லாமல் வேறு இடங்களிலிருந்து இந்த பொருட்களை பெற இறக்குமதியாளர்கள் தேடி செல்லலாம். அப்படி செய்தால், தங்களது முக்கியமான சந்தையை கொலம்பிய உற்பத்தியாளர்கள் இழப்பார்கள்.
கொலம்பியா மீதான பொருளாதார தடை, பயணத்தடை, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜ தந்திர உறவுகளில் விரிசல் ஆகியவை முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
இப்போது வர்த்தக போர் மட்டுமல்ல, வார்த்தைப் போரும் கூட.
“நாடு கடத்தல்” கொள்கை அமெரிக்காவுக்கு கை கொடுக்குமா?
டிரம்பின் குடியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளை கொலம்பிய அதிபர் கடந்த காலத்தில் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பேராசை காரணமாக மனித இனத்தையே துடைந்து எறிந்துவிடுவார் டிரம்ப்” என்று பெத்ரோ கூறினார். கொலம்பிய மக்களை “தாழ்வான மக்களாக” டிரம்ப் கருதுவதாக அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். “பொருளாதார வலிமை காரணமாக ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்த டிரம்ப் முயற்சிக்கலாம், ஆனால் தான் எதிர்த்து போராடுவேன்” என்று பெத்ரோ தெரிவித்திருந்தார்.
“இன்று முதல் கொலம்பியா, திறந்த கைகளுடன் உலகம் முழுவதையும் வரவேற்கிறது” என்று கூறினார் பெத்ரோ.
கொலம்பியாவின் அச்சுறுதல்களுக்கு டிரம்ப் பயப்பட மாட்டார் என்றாலும், குடியேற்றத்தை சமாளிக்க விரும்பும் ஒரு அமெரிக்க அதிபருக்கு இது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும்.
டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க உள்துறை துணை செயலர் கிறிஸ்டோஃபர் லண்டாவு, “குடியேறுபவர்களை தடுக்க மற்ற நாடுகளுடன் சேர்ந்து வேலை செய்வது, அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சமாகும்” என்றார்.
தென் அமெரிக்காவை அடைந்த பிறகு, பல ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்தவர்கள் அமெரிக்கா நோக்கி ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கின்றனர். அவர்கள் கொலம்பியா வழியாகவே சட்டவிரோத கும்பல்கள் மூலம் செல்கின்றனர்.
இதனை தடுப்பதற்கு கொலம்பியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவதை, சமீபத்திய நிகழ்வுகள் கடினமாக்கியுள்ளன.
சட்டவிரோத குடியேறிகளை கைது செய்யும் அமெரிக்கா
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்க மண்ணில் கைது செய்து சிறையில் அடைக்கும் உரிமைகளை அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கும் வகையிலான சில உத்தரவுகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
வியாழக்கிழமையன்று மட்டுமே 538 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லியவெட் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் 149,700 பேர் பைடன் அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 409 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை டிரம்ப் அறிவித்திருந்தார். சட்டவிரோதமாக குடியெர்ந்தவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
“மெக்சிகோவிலேயே இருங்கள்” என்ற தனது முந்தைய ஆட்சியின் கொள்கையை அவர் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதை ஆதரிப்பதாக சிபி எஸ் என்ற செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் குடியேறிகளால் உருவானோம் என்பதால், 240 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகின் முட்டாள்தனமான குடியேற்ற கொள்கையை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் கூறினார்.
டிரம்பின் முந்தைய ஆட்சியில் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமல்படுத்துதல் துறையின் தலைவராக இருந்த டாம்ஹோமன் தற்போது, எல்லை விவகாரங்களை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ராணுவம் தற்போது அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் நாடு கடத்தப்படுவர்களுக்கான விமானங்களை ஏற்பாடு செய்வதற்காகவும், எல்லையை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான கட்டுமானங்களை உருவாக்குவதாகவும் ஏபிசி நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
“இது உலகுக்கு ஒரு வலுவான செய்தியை கூறுகிறது. எங்கள் எல்லை மூடப்பட்டுள்ளது” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு