- எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் & எர்வன் ரிவால்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
கிட்டத்தட்ட சென்னையைப் போல் நான்கு மடங்கு பெரிதாக இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை, பிரிட்டனுக்குச் சொந்தமான தொலைதூரத்தில் இருக்கும் தீவு ஒன்றின் மீது மோதும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அங்கு வாழும் பென்குயின்கள் மற்றும் சீல்களை ஆபத்தில் தள்ளக்கூடும்.
இந்தப் பெரும் பனிப்பாறை அன்டார்டிகாவில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாதையில் அது தெற்கு ஜார்ஜியாவை நோக்கிச் சுழன்று நகர்கிறது.
அதுவொரு கரடுமுரடான நில அமைப்பைக் கொண்ட, பென்குயின் போன்ற பல விலங்குகள் வாழும் பிரிட்டிஷ் தீவு. அதன்மீது மோதுவதால், இந்தப் பனிப்பாறை பல துண்டுகளாக நொறுங்கக் கூடும். தெற்கு ஜார்ஜியா தீவில் இருந்து, பனிப்பாறை தற்போது 280 கி.மீ தொலைவில் இருக்கிறது. சென்னை போல 4 மடங்கு பெரிதான இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா தீவின் மீது மோதினால் என்ன நடக்கும்?
கடந்த காலங்களில் இத்தகைய பெரும் பனிப்பாறைகள் இந்தத் தீவு மீது மோதிய போது, தெற்கு ஜார்ஜியாவில் இருந்த எண்ணற்ற பென்குயின்களும் சீல்களும் நீர்நாய்களும் உணவு கிடைக்காமல் உயிரிழந்துள்ளன.
“இயல்பாகவே பனிப்பாறைகள் ஆபத்தானவை. தீவின் மீது மோதாமல் அந்த பனிப்பாறை பாதை மாறிச் சென்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று தெற்கு ஜார்ஜியாவின் அரசாங்க கப்பலான ஃபரோஸில் இருந்து பேசுகையில், அதன் கேப்டன் சைமன் வாலேஸ் பிபிசியிடம் கூறினார்.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மாலுமிகள், மீனவர்கள் அடங்கிய குழு இந்தப் பனிப்பாறையின் அன்றாட நகர்வைக் கண்காணிக்க செயற்கைக்கோள் படங்களை ஆர்வத்துடன் அவதானித்து வருகிறது.
பனிப்பாறைகளின் ராணியாகக் கருதப்படும், உலகின் பழமையான பனிப்பாறைகளில் ஒன்றான இது, A23a என்று அழைக்கப்படுகிறது.
இது 1986இல் அன்டார்டிகாவில் உள்ள ஃபில்ஷ்னர் பனி அடுக்கில் (Ice Shelf) இருந்து உடைந்து பிரிந்தது. நீண்ட காலத்திற்கு கடலடியில் சிக்கியிருந்த அந்த பனிப்பாறை பின்னர் கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நீரோட்டச் சுழலில் சிக்கிக்கொண்டது.
இறுதியாக கடந்த டிசம்பரில் அதிலிருந்து விடுபட்டு, தற்போது அதன் இறுதிப் பயணத்தில் வேகமெடுத்து நகர்ந்து கொண்டிருக்கிறது.
அன்டார்டிகாவின் வடக்கே இருக்கும் வெப்பம் மிகுந்த நீரோட்டம், 1,312 அடி வரை உயரமாக பனிப்பாறையின் பரந்த பக்கங்களை உருக்கி பலவீனப்படுத்துகிறது.
இது ஒரு காலத்தில் 3,900 சதுர கி.மீ பரப்பளவுக்கு இருந்தது. ஆனால், சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் அது மெதுவாகச் சிதைந்து வருவதைக் காட்டுகின்றன. இப்போது இந்தப் பெரும் பனிப்பாறை சுமார் 3,500 சதுர கி.மீ அளவுக்கு இருக்கிறது. அதிலிருந்து பெரிய அளவில் பனிக்கட்டிகள் உடைந்து கடலில் மூழ்கி வருகின்றன.
A23a பனிப்பாறை எப்போது வேண்டுமானாலும் பல்வேறு பகுதிகளாக உடைந்து போகக் கூடும். பின்னர் அது தெற்கு ஜார்ஜியா தீவை சுற்றிக் கட்டுப்பாடின்றிச் சுழன்று, மிதக்கும் பனி நகரங்களைப் போல பல ஆண்டுகளுக்குச் சுற்றிக் கொண்டிருக்கக் கூடும். இது அந்தத் தீவு மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது, தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகளை அச்சுறுத்தும் முதல் பிரமாண்ட பனிப்பாறை இல்லை.
கடந்த 2004ஆம் ஆண்டில், A38 என்ற ஒரு பனிப்பாறை கடலடியில் தரைதட்டியது. அதன் அளவு மிகப் பிரமாண்டமாக இருந்ததால், அதைக் கடந்து உணவு கிடைக்கும் இடத்தை அடைய முடியாமல் போனதால், பல பென்குயின் குஞ்சுகள், சீல் குட்டிகள் உயிரிழந்தன.
இந்தப் பிரதேசம், கிங் பென்குயின்களின் காலனிகள், லட்சக்கணக்கான சீல்கள், நீர்நாய்கள் வாழும் பகுதி.
“தெற்கு ஜார்ஜியாவின் மீன் வளம், இதர உயிரினங்கள் என இரண்டின் மீதும் இந்தப் பனிப்பாறையின் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்” என்று தெற்கு ஜார்ஜியா அரசுக்கு ஆலோசனை வழங்கும் கடல் சூழலியல் நிபுணர் மார்க் பெல்ச்சியர் கூறுகிறார்.
பனிப்பாறைகள், அதிகரித்து வரும் ஒரு பிரச்னையாக இருப்பதாக மாலுமிகளும் மீனவர்களும் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டில், A76 எனப்படும் ஒரு பனிப்பாறை, தரை தட்டும் நேரத்தில் அவர்களை மிகவும் அச்சுறுத்தியதாகக் கூறுகின்றனர்.
“அந்த பனிப்பாறையின் துண்டுகள் சாய்ந்து கொண்டிருந்தன. அது பார்ப்பதற்கு நுனியில் ஒரு பெரிய பனி கோபுரம் போலவும், அடிப்பகுதியில் ஒரு பனி நகரத்தைப் போலவும் காட்சியளித்தது,” என்று பனிப்பாறை கடலில் இருந்த போது பார்த்த பெல்ச்சியர் கூறுகிறார்.
அந்தப் பனிப்பாறையின் சிதைந்த பகுதிகள், இன்றும் தீவுகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.
“அளவில் பல விளையாட்டு மைதானங்களை ஒன்று சேர்த்தது போல் இருந்த அந்த பனிப்பாறை, மேசை அளவிலான துண்டுகளாக உடைந்து சுழன்று கொண்டிருக்கிறது” என்று தெற்கு ஜார்ஜியாவில் பணியாற்றும் ஆர்கோஸ் ஃப்ரோயன்ஸ் மீன்பிடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ நியூமன் கூறுகிறார்.
“அந்தத் துண்டுகள் அடிப்படையில் ஒரு தீவு அளவுக்கு விரவிக் கிடக்கின்றன. அவற்றுக்கு இடையே நாங்கள் போராடிக் கப்பலைச் செலுத்த வேண்டும்,” என்று கேப்டன் வாலெஸ் கூறுகிறார்.
நியூமனின் கூற்றுப்படி, A76 ஒரு “கேம்சேஞ்சர்”. “அது எங்கள் ஆபரேஷன்களில், எங்களுடைய கப்பலையும் பணியாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.”
ஆண்டுதோறும் உருகிக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள், கடலிலுள்ள பனிப்பாறைகளின் நிலையற்ற தன்மை என இவர்கள் மூன்றும் பேருமே, வேகமாக மாறி வரும் சூழலை விவரிக்கிறார்கள்.
பனி உறைந்த அன்டார்டிகாவில் இருந்து உடைந்து, தனியே A23a பனிப்பாறை உருவாக, காலநிலை மாற்றம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அது மிக நீண்ட காலத்திற்கு முன்பே உடைந்து, பிரிந்துவிட்டது. இப்போது நாம் எதிர்கொள்ளும் வெப்பநிலை உயர்வின் தாக்கங்களுக்கு முன்பே அது உருவாகிவிட்டது.
ஆனால், இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் நமது எதிர்காலத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. கடல் மற்றும் காற்றின் வெப்ப நிலை அதிகரித்து, அன்டார்டிகா மேலும் நிலையற்றதாக மாறும் போது, பிரமாண்ட பனிப் படலங்கள் இப்படியான பனிப்பாறைகளாக உடைந்துவிடும்.
A23a பனிப்பாறை, அதன் காலம் முடிவதற்குள்ளாக, விஞ்ஞானிகளுக்கு ஒரு பரிசை விட்டுச் சென்றுள்ளது.
சர் டேவிட் அட்டன்பரோ ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவுக்கு, 2023இல் இந்த பிரமாண்ட பனிப்பாறைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த அரிய வாய்ப்பை, இத்தகைய ராட்சத பனிப்பாறைகள் சுற்றுச்சூழல் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகின்றன என்பதை ஆராய்வதற்காகப் பயன்படுத்த விஞ்ஞானிகள் விரும்பினர்.
அந்தக் கப்பல், A23a பனிப்பாறையில் இருந்த ஒரு விரிசலுக்குள் நுழைந்தது. உள்ளே 400 மீட்டர் தொலைவில், ஆராய்ச்சியாளர் லாரா டெய்லர் பனிப்பாறைகளில் இருந்த நீர் மாதிரிகளைச் சேகரித்தார்.
“என் கண்களுக்கு எட்டிய வரை உயர்ந்திருந்த மிகப்பெரிய பனிச் சுவரைக் கண்டேன். அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பனித் துண்டுகளாக உதிர்ந்து கொண்டிருந்தன. அது பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது,” என்று அவர் கேம்பிரிட்ஜில் உள்ள தனது ஆய்வகத்தில் இருந்து விளக்கினார். அங்கு அவர் சேகரித்து வந்த மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறார்.
பனிப்பாறையில் இருந்து உருகும் நீர், தெற்கு கடலில் கரிம சுழற்சியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஆய்வு செய்கிறார்.
“இது நாம் குடிப்பதைப் போன்ற தண்ணீர் மட்டுமில்லை. இது ஊட்டச்சத்துகளும் ரசாயனங்களும் நிறைந்தது. இதனுள்ளே மிதவை நுண்ணுயிரிகளும் உறைந்திருக்கும்,” என்று டெய்லர் கூறுகிறார்.
பனிப்பாறைகள் உருகும் போது நுண்துகள்களையும் கடலில் கலக்க விடுகின்றன. இந்தத் துகள்கள் கடலின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது.
அந்தத் துகள்கள் கடலில் மூழ்கினால், காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தக் கூடிய கரிம வாயுவை காற்றில் இருந்து அவற்றால் கிரகிக்க உதவ முடியும். இந்தச் செயல்முறை, வளிமண்டலத்தில் இருக்கும் கரிமத்தை ஓரளவு கிரகித்து, ஆழ்கடலில் சேமிக்க உதவுகிறது.
பனிப் பாறைகளை யாராலும் கணிக்க முடியாது. ஆகவே, அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் விரைவில், இந்த பிரமாண்ட பனிப்பாறை தெற்கு ஜார்ஜியா போன்ற தீவுகளில் இருந்தே பார்க்கும் அளவுக்கு நெருங்கி வரும். அப்போது, ஒரு பெருந்தீவு நெருங்கி வருவதைப் போல அது தோற்றமளிக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு