கே.எம். செரியன்: இருதய அறுவை சிகிச்சையில் ‘துணிச்சலாக’ செயல்பட்டு பல சாதனைகள் படைத்த மருத்துவர்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
-
இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பல சாதனைகளைப் படைத்த கே.எம். செரியன் காலமானார். அவருக்கு வயது 82. இந்தியாவில் இரண்டாவது இருதிய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் இவர்.
பெங்களூரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கே.எம். செரியன் அங்கிருந்து புறப்படவிருந்த நிலையில், மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்தார்.
1942ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி கேரளாவின் செங்கானூரில் பிறந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துப் படிப்பை முடித்தார். அதற்குப் பிறகு, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
இதற்குப் பிறகு 1970ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற அவர், அங்கே இருதய – நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறையில் எஃப்ஆர்ஏசிஎஸ் (FRACS) படிப்பை முடித்தார். சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சிறிதுகாலம் பணியாற்றிய பிறகு நியூசிலாந்திலும் அமெரிக்காவிலும் சில காலம் பணியாற்றினார்.
இதற்குப் பிறகு 1975வாக்கில் இந்தியாவுக்குத் திரும்பினார் செரியன். அந்தத் தருணத்தில்தான் சென்னை பெரம்பூரில் இருந்த தென்னக ரயில்வேயின் தலைமை மருத்துவமனையில் இருதயவியல் துறை துவங்கப்பட்டது.
‘துணிச்சலாக இருதய அறுவை சிகிச்சைகளை செய்தவர்’
“டாக்டர் டி.ஜே. செரியன் அந்தத் துறையை ஆரம்பித்தார். அப்போது நானும் அவருடன் இணைந்தேன். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருதய நோய்களுக்கான சிகிச்சை என்பது ஆரம்ப கட்டத்தில் இருந்தது.” என்று கூறுகிறார் டாக்டர் கே.என். ரெட்டி.
பெரம்பூர் மருத்துவமனையில் கே.எம். செரியனுடன் இணைந்து பணியாற்றி, தற்போது வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இருதயவியல் துறையின் தலைவராக உள்ள டாக்டர் கே.என். ரெட்டி, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியிருந்த டாக்டர் கே.எம். செரியனை, பெரம்பூர் மருத்துவமனையில் வந்து சேரும்படி அழைத்தார் டி.ஜே. செரியன். அதை ஏற்றுக்கொண்ட கே.எம். செரியன் அங்கே இணைந்தார். அதற்குப் பிறகு, 365 நாட்களும் 24/7 ஒரு அணியாக இணைந்து பணியாற்றினோம். இருதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை முறைகளை தரப்படுத்த ஆரம்பித்தோம்” என்கிறார் டாக்டர் கே.என். ரெட்டி.
பெரம்பூர் மருத்துவமனையில் மிகத் துணிச்சலான முறையில் சிகிச்சைகளை அவர் மேற்கொள்ள ஆரம்பித்தார் என நினைவுகூர்கிறார் தற்போது மெட்ராஸ் மெடிக்கல் மிஷின் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவராக உள்ள டாக்டர் எஸ். ராஜன்.
“சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் இணைந்து கே.எம். செரியன் துணிச்சலாக இருதய அறுவை சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தார். குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைகளையும் செய்தார். ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சை என்றால், அதற்கென பரிந்துரைக்கப்படும் முக்கிய மருத்துவமனையாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை மாறியது. அங்கு பத்தாண்டுகள் கே.எம். செரியன் பணியாற்றினார்” என்கிறார் அவர்.
அதற்குப் பிறகு, இருதய நோய் சிகிச்சைக்கென பிரத்யேகமாக ஒரு மருத்துவமனையைத் துவங்கும் எண்ணம் கே.எம். செரியனுக்கு ஏற்பட்டது.
“பலருடன் இணைந்து மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் என ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். அந்த மருத்துவமனைக்கென அப்போது தனியாக இடம் ஏதும் இல்லை. 1987ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து விஜயா மருத்துவமனையின் ஒரு பகுதியிலேயே அந்த மருத்துவமனை இயங்கிவந்தது.” என்று கூறும் டாக்டர் எஸ். ராஜன், தொடர்ந்து அது குறித்து விவரித்தார்.
“கே.எம். செரியன், நான், அசோக் சர்மா என்ற மற்றொரு மருத்துவர் ஆகிய மூன்று பேர்தான் அறுவை சிகிச்சை நிபுணர்கள். மொத்தமே 4 ஐசியு படுக்கைகள்தான். தினமும் 2-3 நோயாளிகளைப் பார்ப்போம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகளின் வருகை அதிகரித்தது.”
“பிறகு கூடுதலாக ஒரு ஆபரேஷன் தியேட்டரைத் தந்தது விஜயா மருத்துவமனை. பிறகு, மெட்ராஸ் மெடிக்கல் மிஷினுக்கு இந்தியா முழுவதுமிருந்து நோயாளிகள் குவிய ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அங்கே இடம் போதவில்லை.” என்று கூறுகிறார்.
அப்போதுதான் வேறொரு மருத்துவமனையைச் சார்ந்திராமல், நாமே ஒரு மருத்துவமனையைக் கட்டலாம் என முடிவெடுத்து சென்னை அண்ணா நகரில் மெட்ராஸ் மெடிக்கல் மிஷினை கட்ட ஆரம்பித்தோம் என்று அவர் நினைவுகூர்கிறார்.
“5 ஆபரேஷன் தியேட்டர்கள், 20 ஐசியு படுக்கைகள், 275 சாதாரண படுக்கைகளுடன் 1996 மார்ச்சிலிருந்து தற்போதைய இடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட ஆரம்பித்தது” என நினைவுகூர்கிறார் எஸ். ராஜன்.
‘ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர்’
இந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அப்போது உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சிறப்பு அனுமதிகளைப் பெற்று அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 1994ல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்கென சட்டம் வந்த பிறகு, முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் டாக்டர் கே.எம். செரியன்தான்.
1995ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் ஹேமா என்ற பெண் சாலை விபத்தால் உயிரிழந்தபோது, அவரது இதயம் மைமூன் பீவி என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.
“இந்த அறுவை சிகிச்சையில் இருதயத்தைப் பெற்றவர் ஒரு இஸ்லாமியப் பெண். அவருக்கு இருதயம் கொடுத்தவர் ஒரு இந்து. இதைப் பற்றி என்னிடம் பேசும்போது, ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை எடுத்து கிறிஸ்தவரான நான் பொருத்தியிருக்கிறேன் என்று சொல்லிச் சிரிப்பார். இருதயத்தைப் பெற்ற அந்தப் பெண் அதற்குப் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருந்தார்” என நினைவுகூர்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் அமலோற்பவநாதன் ஜோசப்.
‘செரியன் மேற்கொண்ட சிகிச்சைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட க்ரீன் காரிடார்’
அதேபோல ரீனா ராஜு என்ற பெண்ணுக்கு இரு முறை இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் கே.எம். செரியன். 2008ஆம் ஆண்டு ஹிதேந்திரன் என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்தபோது, அவரது உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க அவரது பெற்றோர் முடிவுசெய்தனர்.
அப்போது இருதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் டாக்டர் செரியன்தான். தற்போது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை சாலை வழியாக கொண்டுவரும்போது, உறுப்புகளை ஏற்றிக்கொண்டு வாகனம் வரும் சாலை ‘Green Corridor’ எனக் குறிப்பிடப்பட்டு, போக்குவரத்தில் அந்த வாகனத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
அந்த க்ரீன் காரிடார் முறை முதன்முதலில் செரியன் மேற்கொண்ட ஒரு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
“அவருடைய மாணவர் ஒருவர் மதுரையில் இறந்துவிட்டார். அவரது உறுப்பு, விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டுவர முதன்முறையாக பரிசோதனை முறையில் க்ரீன் காரிடார் அறிவிக்கப்பட்டது.”
“அது வெற்றிகரமாக அமைந்ததையடுத்து இப்போது தொடர்ச்சியாக அந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இப்படியாக, பல முன்னோடியான விஷயங்களை செய்தவர் செரியன்” என நினைவுகூர்கிறார் டாக்டர் அமலோற்பநாதன் ஜோசப்.
குடியரசுத் தலைவரின் கௌரவ இருதய அறுவைசிகிச்சை நிபுணர்
5 கிலோவுக்குக் கீழ் எடையுடைய, பிறப்பிலேயே இருதய பாதிப்புடைய குழந்தைகளுக்கு என ‘Hypothermia’ என்ற முறையை அறிமுகப்படுத்தினார் செரியன்.
“அவர் தன் வாழ்நாளில் எல்லா வயதையும் சேர்ந்த, பலவிதமான இருதய பிரச்னைகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இந்தியாவில் தற்போது இருதய அறுவை சிகிச்சை முறை, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் டாக்டர் செரியன்தான்” என்கிறார் கே.என். ரெட்டி.
கே.எம். செரியனை முதன்முதலில் பார்ப்பவர்கள் அவர் கடுகடுவெனவே இருப்பார் என சற்று அஞ்சுவார்கள். ஆனால், அவர் அதற்கு நேர் மாறானவர் என்பது பழகினால் புரியும் என்கிறார் ராஜன்.
“வேலையைப் பொறுத்தவரை மிகக் கடினமாக வேலை பார்ப்பார். மற்றவர்களிடமிருந்தும் அதே போல எதிர்பார்ப்பார். பழகாதவர்களுக்கு அவர் கடுகடுவென இருப்பதைப்போலத் தோன்றும். ஆனால், அவரைப் புரிந்துகொண்டால், எளிதில் பழகலாம்” என்கிறார் அவர்.
மற்ற மருத்துவர்களைப் பயிற்றுவிப்பதிலும் கவனம் செலுத்திய கே.எம். செரியன், ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவது, பதிப்பிப்பது ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டினார்; மற்றவர்களையும் அதற்கு ஊக்குவித்தார் என்கிறார் ராஜன்.
மெட்ராஸ் மெடிகல் மிஷனிலிருந்து பிரிந்துவந்த பிறகு, 2003ல் சென்னையில் ‘ஃப்ராண்டியர் லைஃப் லைன்’ என்ற மருத்துவமனையை உருவாக்கினார் கே.எம். செரியன்.
அவரது சுயசரிதை நூல் ‘Just an Instument’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவரின் கௌரவ இருதய அறுவை சிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்ட கே.எம். செரியன், பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு