உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் எப்படி உதவ முடியும்?
- எழுதியவர், பாப் ஹோம்ஸ்
- பதவி,
கம்பளிப் புழுக்களில் சில இனங்கள் விஷமுள்ளவையாக இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது புதிய மருந்துகளை உருவாக்க பயன்படக் கூடும்.
விஷமுள்ள விலங்குகள் குறித்து நீங்கள் சிந்தித்தால் முதலில் மனதில் தோன்றுவதில் கம்பளிப் புழுக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. பாம்புகள் நிச்சயமாக தோன்றும். தேள்களும், சிலந்திகளும் கூட. ஆனால் கம்பளிப் புழுக்களா?
உண்மைதான். இவ்வுலகில் பல நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றின் விஷம் ஒரு மனிதனை கொல்லக்கூடிய அளவு அல்லது நிரந்தரமாக காயப்படுத்தும் அளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது. விஞ்ஞானிகள் கம்பளிப் புழுக்களை ஆய்வதற்கு இது மட்டுமே காரணமாகிறது.
ஆனால் கம்பளிப் புழுக்களிடம் சுரக்கும் விஷத்தில் மருத்துவ ரீதியாக பயன்படக்கூடிய பொருட்கள் இருக்கின்றன.
“அவற்றின் விஷத்திலிருந்து பயனுள்ள எதையாவது எடுக்கும் நிலைக்கு நாம் செல்வோமா? நிச்சயமாக”, என்கிறார் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் பரிணாம உயிரியலாளரும் உயிர்வேதியலாளருமாக இருப்பவரான ஆண்ரு வால்கர்.
“ஆனால், முதலில் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகள் பல இருக்கின்றன”
பல யுகங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் விஷம்
பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் உள்ளடக்கிய லெபிடோப்டெராவின் முட்டைப்புழு நிலைதான் கம்பளிப்புழுக்கள்.
அதிகம் அறியப்படாத விஷம் நிறைந்த உறுப்பினர்கள் கொண்ட விலங்கு இனங்களில் இதுவும் ஒன்று. (ஆங்கிலத்தில் வெனம் எனப்படும் விஷம் மற்றொரு விலங்கின்மீது செலுத்தப்படுவது, அதே நேரம் பாய்சன் என சொல்லப்படும் விஷம் ஒரு விலங்கின் உள்ளேயே உறைந்திருந்து தாக்கும் விலங்குகளை பாதிக்கும்.)
உயிரியலாளர்களின் கணிப்பின்படி பார்த்தால் விலங்குகள் உலகில் வெனம் எனப்படும் விஷம் 100 முறை பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது.
பல விஷங்கள் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான மூலக்கூறுகளை கொண்டிருக்கின்றன. அவை பன்முகத்தன்மையாகவும் இருக்கின்றன.
“எந்த இரண்டு இனமும் ஒரே மாதிரியான விஷத்தை கொண்டிருப்பதில்லை,” என்கிறார் , நியுயார்க்க நகரின் ஹண்டர் கல்லூரி மற்றும் அமெரிக்க இயற்கை வரலாற்றிற்கான அருங்காட்சியத்தில் பணியாற்றும் வெனம் விஞ்ஞானி மாண்டே ஹோல்ஃபோர்டு.
“அதனால்தான் நம்மால் முடிந்தவரை கண்டுபிடிக்கும் அனைத்து இனங்களையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது.”
முற்றிலும் புதிதாக தொடங்குவதைவிட புதிய மருந்துகளை கண்டுபிடிக்க விஷங்களை ஆய்வு செய்வது சிறந்த முறையாக இருக்கும்.
இரையின் குறிப்பிட்ட உயிரி செயல்பாட்டை குறிவைக்க பல யுகங்களாக மென்மேலும் துல்லியமாகியிருக்கும் மூலக்கூறுகள் பலவற்றை கொண்டிருக்கிறது விலங்கின் விஷம்.
“அவை பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியடைந்து, இயற்கையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக செயல்படுகின்றன என்பதும் நமக்குத் தெரியும்,” என்கிறார் ஹோல்ஃபோர்டு.
“அதை நமது சோதனைக் கூடத்தில் உருவாக்க நாம் முயற்சிக்கும்போது அதன் வெற்றி சதவீதம் மிகவும் குறைவு.”
ஆனால் பெரும்பாலான விஷ ஜந்துகள் விஞ்ஞானிகளின் ஆய்வு வரம்பிற்குள் இல்லை.
“பாம்பு விஷம், தேள் விஷம் மற்றும் சிலந்தி விஷம் குறித்து மிகப்பெரிய அளவில் நமக்கு புரிதல் இருக்கிறது,” என்கிறார் இங்கிலாந்தில் லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசனில் விஷ உயிரியலாளராக இருக்கும் நிகோலஸ் கேஸ்வெல்.
“ஆனால் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத விஷம் நிறைந்த விலங்குகள் நிறையவே இருக்கின்றன.”
கம்பளிப் புழுக்கள் – பொது சுகாதாரப் பிரச்னையா?
ஆனவுவல் ரெவ்யூ ஆஃப் எண்டமாலஜியின் 2025-ஆம் ஆண்டுக்கான இதழில் விஷமிக்க லெபிடோப்டெரா குறித்து எழுதிய வாக்கர், கம்பளிப் புழுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்கிறார்.
வாக்கரின் கணிப்பின்படி கம்பளிப்புழு வகைகளில் 2% மட்டுமே விஷத்தன்மை உடையவையாக இருந்தாலும் அவை லெபிடோப்டெராவின் பரிணாம வளர்ச்சி பாதையில் பரவலாக விரிந்து கிடக்கின்றன.
இந்த குழுவிற்குள்ளேயே விஷம் பலமுறை தனியாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் என்பதுதான் இதன் பொருள். இதனால் பலதரப்பட்ட ரசாயனங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள லோனோமியா என்ற கம்பளிப்புழுவின் விஷத்தில் ரத்தத்தை உறையவைக்கும் ஆற்றல் இருக்கிறது. பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இதில் இருக்கிறது.
மற்றவையின் விஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஒன்றிரண்டு வகைகள் குதிரைகளின் கர்ப்பத்தை கலைய வைக்கக் கூடியவையாகவும் உள்ளன.
மனித உடல் வலியை புரிந்து கொள்ள உதவக் கூடும் கம்பளிப் புழு விஷம்
இந்த விஷ கம்பளிப்புழுக்கள் உலகின் சில பகுதிகளிலாவது ஒரு முக்கிய பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியிருக்கின்றன என்கிறார் வாக்கர்.
“அவை தேள்களைப் போலவோ, பாம்புகளைப் போலவோ சீராக மனிதர்களை கொல்வதில்லைதான். ஆனால் சிலந்திகளுடன் ஒப்பிடுகையில் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயத்தில் அதிக வித்தியாசம் இல்லை.”
இந்தக் கவலை, லோனோமியா விஷத்தின் உயிரியல் விளைவுகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷமுறிவை உருவாக்க சில ஆய்வாளர்களை தூண்டியிருக்கிறது.
வேறு சில கம்பளிப் புழுக்களின் விஷங்கள் மேலும் சிறிது ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலனவை ஆய்வு செய்யப்படாமலேயே இருக்கின்றன என்கிறார் வாக்கர்.
இதனால் மருத்துவத்துறை இழப்பை எதிர்கொள்ளலாம். உதாரணமாக பெரும்பாலான லெபிடோப்டெரா விஷங்கள் வலியை உருவாக்குகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சில நேரங்களில் இந்த வலிகள் ஓபியாட் வலி நிவாரணிகள் தேவைப்படுமளவு தீவிரமாக இருப்பதுண்டு.
விஷ விலங்குகளை தடுப்பதில் வலி ஒரு சிறந்த வழி என்பதில் ஆச்சரியமானதல்ல. ஆனால் அதே நேரம் உடலில் வலி எந்த பாதையில் பயணிக்கிறது, எப்படி உணரப்படுகிறது என்பதை இந்த விஷத்தை விலங்குகள் உடலில் செலுத்தியும், பின்னர் மனிதர்களிடமும் செலுத்தியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யமுடியும். இதன் மூலம் புதிய மருந்துகளை உருவாக்க வாய்ப்புள்ளது.
கம்பளிப் புழு விஷம் குறித்த ஆய்வுகள் இன்னமும் சொற்பமாகவே இருப்பதால் எந்த புதிய மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் மற்ற உயிரினங்களின் விஷங்கள் பல முக்கிய மருந்துகளை அளித்துள்ளன.
உதாரணத்திற்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலை தடுக்கும் மருந்துகளை உருவாக்க பாம்பு விஷம் உதவியுள்ளது.
ஓசெம்பிக் மற்றும் விகோவி போன்ற பெயர்களால் அறியப்படும் செமகுளூடைட் மருந்தின் முன்னோடி கிலா மான்ஸ்டர் என அழைக்கப்படும் விஷம் நிறைந்த பல்லியின் மூலக்கூறிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டதுதான்.
மூலக்கூறு அறிவியல் மற்றும் உயிரி தகவல்நுட்பவியல் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் அனைத்து உயிரினங்களின் விஷத்தையும் ஆய்வு செய்வது நாளுக்கு நாள் சுலபமாகி வருகிறது.
இதனால் விரைவில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்கிறார் கேஸ்வெல். “அது நாம் புரிந்துகொள்வதற்காக காத்திருக்கும் பொக்கிஷம் போன்றது.”
இந்த கட்டுரை நோயபல் இதழில் வெளியாகியது. கிரியேடிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு