அடர்த்தியாக வளர்ந்து நிழல் தரும் இந்த அழகான மரங்களை வளர்க்க தமிழ்நாட்டில் தடை ஏன்?

கோனோ கார்பஸ், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்

மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கட்டமைப்பு வசதிகளுக்கும் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக கூறி, கோனோ கார்பஸ் எனப்படும் அந்நிய அலங்கார மரங்களை வளர்க்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது.

தற்போதுள்ள கோனோ கார்பஸ் மரங்களை அகற்றி, வேறு மரங்களை வளர்க்க அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவை சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றிருப்பதுடன், தற்போதுள்ள மரங்களை விரைவாக அகற்றி, மாற்று மரங்களை நட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

கோனோ கார்பஸ் மரங்களை வளர்க்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது ஏன்? அதனால் சுற்றுச்சூழலுக்கு என்ன ஆபத்து?

அரசு உத்தரவு என்ன?

தமிழ்நாட்டில் கோனோ கார்பஸ் மரங்களை இனி வளர்க்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.

பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக, அந்த உத்தரவில் துறையின் செயலாளர் செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அந்நியத் தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு கொள்கையின்படியும், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பரிந்துரையின்படியும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரம் குறித்து பலருக்கும் தெரியாததால் இந்த உத்தரவின் நோக்கம் பற்றி, பொதுமக்களிடம் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

இதுபற்றி மரப்பெருக்கு (மரங்களை வளர்த்தல், பாதுகாப்பது தொடர்பானது) விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடமும் பிபிசி தமிழ் பெற்ற தகவல்களின் அடிப்படையில், தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை?

கோனோ கார்பஸ் என்பது அமெரிக்காவில் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக சதுப்பு நிலப்பகுதிகளில் வளரும் ஒரு வித அலங்கார மரமாகும்.

மிக வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் இந்த மரம், இந்த காரணங்களுக்காகவே பல்வேறு நாடுகளிலும் வளர்க்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகங்களால் வளர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நகரை அழகுபடுத்தும் முயற்சியாக, பூங்காக்கள் மற்றும் சாலைகளில் இவை வளர்க்கப்பட்டன.

கோனோ கார்பஸ் மரங்களை வளர்க்க பலரும் விரும்புவது ஏன்?

எந்த வகை மண்ணாக இருந்தாலும் இந்த மரங்கள் வேகமாக வளரும். சீருடை அணி வகுப்பைப் போன்று, ஒரே மாதிரியாக கூம்பு வடிவில் நன்கு அடர்த்தியாக வளரும் இந்த மரங்கள், பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.

நன்கு நிழல் தருவதால் சாலையோரங்கள், பூங்காக்களில் மட்டுமின்றி, தொழில் நிறுவன வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் இவற்றை வளர்ப்பதை பலரும் பெரிதும் விரும்புகிறார்கள்.

இந்தியாவைப் போலவே, பாகிஸ்தான், இரான், சீனா, மத்திய கிழக்கு நாடுகளில் இவை அதிகம் வளர்க்கப்பட்டன.

கோனோ கார்பஸ்

படக்குறிப்பு, இந்த மரங்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக்கூடியவை

இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய பாரதியார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் மணிமேகலன், ”அரசின் முடிவு பெரிதும் வரவேற்கத்தக்கது. இந்த மரங்கள் மனிதர்களுக்கு ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை, ஜலதோஷம், ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களை உருவாக்குகின்றன என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மரங்கள் பூக்கள் பூக்கும் காலங்களில் அவற்றிலிருந்து வெளியாகும் மகரந்தத் துாள்தான், மனிதர்களுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

கராச்சி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் சுற்றுச்சூழலில் 32 வகையான தாவரங்களுடன் கோனோ கார்பஸின் தாக்கம், குறிப்பாக ‘காற்றின் தரம்’ குறித்து ஏரோபயாலஜிஸ்டுகள் ஆராய்ச்சி நடத்தினர். கராச்சியில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கு இந்த மரங்கள்தான் காரணம் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

கேரள மாநிலம் திருச்சூர் கேரள வன ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் கண்ணன் வாரியர் பிபிசி தமிழிடம், ”இந்த மரங்களின் வேர்கள் பெருமளவில் நீரை உறிஞ்சக்கூடியவை. அருகில் நம் மண்ணின் மரங்களையும், வேறு எந்தத் தாவரங்களையும் வளர விடாது. இவற்றின் வேர்கள் ஆழமாகவும், வலுவாகவும் பரவுவதால், நகர்ப்புறங்களில் நிலத்துக்குள் புதைக்கப்பட்டுள்ள மின் வடம், தொலைத்தொடர்பு புதை வடங்கள், குடிநீர் குழாய்கள், வடிகால்கள் போன்ற கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தி விடுகின்றன” என்றார்.

கோனோ கார்பஸ், தமிழ்நாடு அரசு, கண்ணன் வாரியர்

படக்குறிப்பு, இந்த மரங்களின் வேர்கள் பெருமளவில் நீரை உறிஞ்சக்கூடியவை என்கிறார், கண்ணன் வாரியர்

மேலும், கட்டடங்களின் அடித்தளத்துக்கும் இம்மரங்கள் ஆபத்தை விளைவிப்பதாகவும் சாலையோரங்களில் உள்ள இந்த மரங்களின் வேர்கள், குழாய்களைச் சுற்றிக்கொள்வதால் அகற்றுவதும் மிகவும் கடினமான காரியம் என்றும் அவர் கூறினார்.

இந்த மரங்களிலிருந்து பரவும் மாவுப்பூச்சிகள் (Mealybug) பிற தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் முனைவர் பார்த்திபன் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறினார்.

வேறு எங்கெல்லாம் தடை?

கோனோ கார்பஸ், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மரங்களால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன

பாகிஸ்தான், இரான் ஆகிய நாடுகள் இந்த மரங்களைத் தடை செய்துள்ளன. அரபு நாடுகளும் இவற்றை இனி வளர்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளன. இந்தியாவில் குஜராத், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவை தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

“பலவிதமான மண் வகைகள் மற்றும் வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளில் செழித்து வளரும் கோனோகார்பஸ், நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற அலங்கார மரமாக உள்ளது. வேகமான வளர்ச்சி மற்றும் பசுமையான இலைகளுக்கு பெயர் பெற்ற கோனோகார்பஸ், சாலையோரங்கள், சாலை நடுப்பகுதிகள் மற்றும் பொதுப் பூங்காக்களை பசுமையாக்க எளிதான தேர்வாக இருந்தது” என தமிழ்நாடு அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரம் பூக்கும் பருவத்தில், அதிகளவு மகரந்தத்தை வெளியிடுகிறது, இது சுற்றியுள்ள பகுதிகளில் பரவி, அருகில் வசிக்கும் மக்களை பாதித்து பல விதமான நோய்களை உருவாக்குகிறது என்றும் இதற்குத் தீர்வு காணும் விதமாக, வனப்பகுதி, அரசு நிலங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் கோனோ கார்பஸ் மரங்களை நடுவதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.

கோனோ கார்பஸ், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோனோ கார்பஸ் வளர்க்கப்பட்ட இடங்களில் வேறு மரங்களை நடுவதற்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

பொது இடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலையோரங்களில் ஏற்கெனவே உள்ள கோனோ கார்பஸ் மரங்களை அகற்ற வேண்டும்; அந்த இடங்களில் நம் மண்ணின் மரங்களை மாற்றி நடுவதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் அரசுத்துறைகளுக்கு அறிவுறுத்தும் வகையில் விரிவான மாற்றுத் திட்டத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

“மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் முயற்சிகளைக் கண்காணித்து வரும் மாவட்ட பசுமைக் குழுக்களுக்கு, இந்த மரங்களை அகற்றவும். மாற்று மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்கவும் தேவையான அனுமதி வழங்க அதிகாரமளிக்கப்படுகிறது. இந்த மரங்களை அகற்றி மாற்று மரங்களை நட விரும்பும் தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு அமைப்புகளுக்கு இலவசமாக நம் மண்ணின் மரக்கன்றுகள் அரசின் சார்பில் வழங்கப்படும்.

இதற்காக வனத்துறை அல்லது பசுமை தமிழ்நாடு இயக்கத்தை 1800-599-7634 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவோ அல்லது “GTM Plant a Tree” மொபைல் செயலி மூலமாகவோ மக்கள் தொடர்புகொள்ளலாம்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சில மாதங்களிலேயே பெரியளவில் வளர்ந்து விட்டது’

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 87 வது வார்டில், புட்டுவிக்கி–குனியமுத்துார் சாலையோரத்தில் 20க்கும் மேற்பட்ட கோனோ கார்பஸ் மரங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டு, பெரிய அளவில் வளர்ந்துள்ளன. நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியாகவுள்ள குறிச்சி அணைக்கட்டிலிருந்து குறிச்சி குளத்துக்குச் செல்லும் வாய்க்கால் பகுதிக்கும், சாலைக்கும் நடுவே வரிசையாக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

மூன்றே ஆண்டுகளில் பெரியளவில் வளர்ந்துவிட்ட இந்த மரங்களின் பாதிப்பை சுட்டிக்காட்டி, இவற்றை அகற்ற வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இது குறித்து விரிவான காணொளியையும் சமூக ஊடகங்களில் அவர் பதிவு செய்திருந்தார். ஆனால் இந்த மரங்கள் அகற்றப்படவில்லை.

கோனோ கார்பஸ் மரங்கள் வளர்ந்துள்ள பகுதிக்கு எதிரிலுள்ள குடியிருப்பில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சங்கிலி ராஜ் (வயது 67) பிபிசி தமிழிடம், ”நான் இங்கேயேதான் குடியிருக்கிறேன். இந்த மரங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வைத்தனர். வைத்த சில மாதங்களிலேயே பெரியளவில் வளர்ந்து விட்டது.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு