ஜெஜு ஏர் விபத்து; விமானத்தின் என்ஜின்களில் பறவை இறகுகள்!

by smngrx01

கடந்த டிசம்பர் மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளாகி 179 நபர்களின் மரணத்துக்கு வழி வகுத்த பயணிகள் விமானம் மீது பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெஜு ஏர் விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் வாத்து வகையைச் சேர்ந்த பறவைகளின் இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் காணப்பட்டிருந்தாக திங்களன்று (27) வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது இப்போது விபத்துக்குள்ளான விமானத்தின் பறவை தாக்குதலின் பங்கு மற்றும் விமானம் ஓடுபதையின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த கொன்கிரீட் சுவர் என்பவற்றின் முக்கிய பங்கினை எடுத்துக் காட்டுகிறது.

ஜெஜு ஏர் விமானம் டிசம்பர் 29 அன்று காலை தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து புறப்பட்டு தென்கொரியாவின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்தது.

தென்கொரிய நேரப்படி காலை சுமார் 08:57 மணிக்கு, விமானிகள் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்ட மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு கோபுரம் “பறவை செயல்பாடு” குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தியது.

08:59 மணிக்கு, விமானம் ஒரு பறவையைத் தாக்கிய சமிக்ஞையை வெளியிட்டதாக விமானி அறிவித்தார்.

இதனால் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம், தரையிறங்கும் கியர் பயன்படுத்தப்படாமல் அவசரமாக தரையிறங்கியதால் ஓடுபாதையைத் தாண்டி லோக்கலைசர் கட்டமைப்பில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானதாக அறிக்கை கூறுகிறது.

இதன்போது விமானத்தில் இருந்த 181 பேரில் பணியாளர்களில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்தனர்.

இது தென் கொரிய மண்ணில் பதிவான மிகவும் மோசமான விமான விபத்தாகவும் பதிவானது.

பேரழிவிற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் இருந்து விமான தரவு மற்றும் காக்பிட் குரல் பதிவுகள் பதிவு செய்வதை நிறுத்தியதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய அதே வகை விமானங்களை செலுத்திய விமானிகள், ஓடுபாதையில் கொன்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததையும் கேள்வி எழுப்பினர் – சிலர் தடுப்புச் சுவர் இல்லாவிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம், நாடு முழுவதும் உள்ள ஏழு விமான நிலையங்களில் வழிசெலுத்தலுக்கு பயன்படுத்தப்படும் கொன்கிரீட் தடைகளை மாற்றுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

மறுஆய்வுக்குப் பின்னர் ஏழு விமான நிலையங்களும் அவற்றின் ஓடுபாதை பாதுகாப்புப் பகுதிகளை மாற்றியமைக்கும் என்று கூறியிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமும், அமெரிக்கா, பிரான்ஸ், தாய்லாந்து அதிகாரிகளிடமும் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையை தென்கொரிய அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

எவ்வாறெனினும் ஒரு பறவை தாக்குதல், தவறான தரையிறங்கும் கியர் மற்றும் ஓடுபாதை தடை ஆகியவை விபத்துக்கான சாத்தியமான காரணமா என்பதை தென் கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்