இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர், கடைசி வரை நின்று சாதித்த திலக் வர்மா
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை சேப்பாக்கத்தில் ஏற்கெனவே நடந்த 2 டி20 சர்வதேச போட்டிகளும் கடைசிப் பந்து வரை வந்துதான் இந்திய அணி வென்றிருந்தது. அதேபோலவே நேற்று நடந்த 3-வது டி20 ஆட்டத்திலும் முடிவைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் கடைசி ஓவர் வரை காத்திருக்கும் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.
வெற்றி யார் கைகளில் வேண்டுமானாலும் தவழலாம் என்ற சூழல் கடைசி ஓவர் வரை இருந்தது, ஆனால், திலக் வர்மா அடித்த பவுண்டரி அவரின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக மாறியது.
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தொடர்ந்து 10-வது டி20 போட்டிகளில் வெற்றியை 2வதுமுறையாக இந்திய அணி பெற்றுள்ளது.
3-வது வீரராகக் களமிறங்கி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று, 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அந்த நேரத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன்(26)இணைந்து, 38 ரன்கள் பார்ட்னர்ஷிப், அர்ஷ்தீப் சிங்குடனும், ரவி பிஸ்னாயுடனும் சேர்ந்து தலா 20 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திலக் வர்மா அணியை கரை சேர்த்தார். குறிப்பாக ரவி பிஸ்னாய் கடைசி இரு ஓவர்களில் அடித்த இரு பவுண்டரிகள் ஆட்டத்தில் இந்திய ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பதற்றத்தையும், அழுத்தத்தையும் 90 சதவீதம் குறைத்தது.
குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னாய் ஆகியோருடன் கடைசி நேரத்தில் திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்து சேர்த்த ரன்கள்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியை இங்கிலாந்து கரங்களில் இருந்து பறித்தது.
இங்கிலாந்து அணி கைமேல் கிடைத்த வெற்றியை கோட்டைவிட்டது என்றுதான் சொல்ல முடியும். 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்த நிலையில், சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை கேப்டன் பட்லர் பயன்படுத்தாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
சுழற்பந்துவீச்சு தாக்குதல்
இந்திய அணி இந்த ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் என 14 ஓவர்களை சுழற்பந்தாக வீசி 118 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.
இங்கிலாந்து பேட்டர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள் எனத் தெரிந்து அவர்களுக்கு 4 முனைத் தாக்குதலையும் சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி கொடுத்தது. ஆனாலும், ரன் சேர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி கடைசி நேரத்தில் நடுவரிசை பேட்டர்களின் பின்ச்ஹிட் ஆட்டத்தால் 165 ரன்களைச் சேர்த்தது. கடந்த போட்டியிலாவது ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்திருந்தார், இந்த ஆட்டத்தில் அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தது என்று கூறமுடியாது, அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர்களை நன்கு பவுன்ஸ் செய்யவும், பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வரவும் உதவியது. இந்த மைதானத்தில் வேகத்தைக் குறைத்து வீசியிருந்தால் நிச்சயம் இந்திய பேட்டர்கள் விளையாட சிரமமாக இருந்திருக்கும். ஆனால் அதிவேகத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசி ரன்களைத்தான் வாரிக் கொடுத்தனர்.
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களையும், மார்க்உட் 3 ஓவர்களில் 28 ரன்களையும், ஓவர்டன் 2 ஓவர்ளில் 20 ரன்கள் என வாரி வழங்கினர். ஆனால் அதில் ரஷித் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே வழங்கி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
வாய்ப்பை தவறவிட்டதா இந்திய அணி?
இந்த ஆட்டத்திலும் அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியைப் போன்று புதிய பந்தில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். இந்த முறை பில் சால்ட்டுக்கு பவுன்ஸரை வீசிய நிலையில் ஹூக் ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார்.
வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவர் முதல் பந்திலேயே டக்கெட் விக்கெட்டை இழந்தார்.
வருண் சக்ரவர்த்தி பந்தை முதல்முறையாக கிரிக்கெட்டில் எதிர்கொண்ட ஹேரி புரூக், க்ளீன் போல்டாகி வெளியேறினார். அக்ஸர் படேல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டோன் விக்கெட்டை வீழ்த்தினர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை முடிக்கும்நிலைக்கு கொண்டு வந்தனர்.
இங்கிலாந்து அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் கிடைத்த தருணத்தை இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. ஜேம் ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஓரளவுக்கு ஸ்கோர் செய்து அணியைக் காப்பாற்றினர்.
அதிலும் பிரைடன் கார்ஸ் 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார், அதேபோல, ஜேம் ஸ்மித் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவினர்.
விக்கெட்டில் கவனம் இல்லை
இந்திய அணி இந்த ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தமைக்கு பேட்டர்களின் தவறான ஷாட்களே முக்கியக் காரணம். இந்திய அணியில் திலக்வர்மா(72) ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் வாஷிங்டன் சுந்தர் சேர்த்த 26 ரன்கள்தான்.
களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்கும் பேட்டர்கள், பந்துவீச்சையும், ஆடுகளத்தின் தன்மையையும் கணிக்க தவறிவிட்டனர்.
அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும், அதிவேகமாகப் பந்துவீசிய மார்க் வுட் பந்துவீச்சை கணித்து ஆடாமல் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
சாம்ஸன் 5 ரன்னில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் வந்தவேகத்தில் 3 பவுண்டரி அடித்தாலும் கார்ஸ் பந்துவீச்சில் அந்த ஷாட் தேவையில்லாதது என்றே தோன்றியது. கடந்த போட்டியிலும் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று டக்அவுட்டில் வெளியேறினார்.
இந்த ஆட்டத்தில் முக்கியமான சேஸிங்கில் நிதானமாக பேட் செய்யாமல் தவறான ஷாட்களை ஆடினார். நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா(7), துருவ் ஜூரெல்(4) இருவரும் ஏமாற்றினர், இருவரும் ஓரளவுக்கு கைகொடுத்திருந்தால் இந்திய அணி சிரமமின்றி வெற்றி பெற்றிருக்கலாம்.
58 ரன்கள் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது, ஆனால் அடுத்த 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது.
ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர்
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அதில் ரஷித் 4 ஓவர்கள் வீசி இந்திய ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். இருப்பினும் இவர் கோட்டை விட்ட கேட்ச் வெற்றிக்கே உலைவைத்துவிட்டது. வாஷிங்டன் சுந்தர் அடித்த கேட்சை ரஷித் தவறவிட்டதால்தான் திலக்-சுந்தர் பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தது.
மார்க் உட் வீசிய அந்த ஓவரை சரியாகப் பயன்படுத்திய சுந்தர் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசி 18 ரன்களைச் சேர்த்து 19 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தரின் பிஞ்ச் ஹிட்டிங்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தருணமாகும்
கடைசி வரை களத்தில் நின்று சாதித்த திலக் வர்மா
கடைசி 3 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் செட்டில் பேட்டர் திலக் வர்மாவும், டெய்லெண்டர் ரவி பிஸ்னாய் இருந்தனர். கார்ஸ் வீசிய 18-வது ஓவரில் ஏதாவது விக்கெட் இழந்துவிடுவோமா என அச்சப்பட்ட நிலையில் பிஸ்னாய் அருமையான பவுண்டரி அடித்து நெருக்கடியைக் குறைத்தார். கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை லிவிங்ஸ்டோன் வீசினார். இந்த ஓவரை பிஸ்னாய், திலக் கட்டுக்கோப்பாக ஆடினர். லிவிங்ஸ்டோன் வீசிய 5வது பந்தில் பிஸ்னாய் பவுண்டரி அடிக்க பதற்றம் குறைந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஓவர்டன் வீசிய முதல் பந்தில் 2 ரன்களும், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து திலக் வர்மா வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
“பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி”
வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ” இந்த வெற்றியால் சிறிய மன நிம்மதி கிடைத்துள்ளது. 160 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தோம். நாங்கள் பந்துவீசியவிதமும் சிறப்பாக இருந்தது. கடந்த சில தொடர்களாக கூடுதலாக ஒரு பேட்டருடன் ஆட்டத்தை சந்தித்து வருகிறோம். அந்த பேட்டரும் எங்களுக்கு 3 ஓவர்கள் வரை பங்களித்துவிடுகிறார். ஆவேசமான கிரிக்கெட்டை விளையாடும் அதேநேரத்தில் இக்கட்டான நேரங்களில் வீரர்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை திருப்பிவிடுகிறார்கள்.
யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்து பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக ரவி பிஸ்னாய் அதிக பயிற்சியில் ஈடுபட்டார். பெரும்பகுதி அழுத்தத்தை களத்திலேயே குறைத்துவிடுவதால், ஓய்வு அறை மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற நாட்கள் திரும்பவராது, ஆனால், அதை தக்கவைண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இதேபோன்ற ஃபார்மில் இருந்தால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடக்கும்” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.