கொரோனா ‘சீன ஆய்வகத்திலிருந்து’ பரவியதற்கான வாய்ப்புகள் அதிகம் – அமெரிக்க உளவு முகமையான சிஐஏ கூறுவது என்ன?
- எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச்
- பதவி, வாஷிங்டனிலிருந்து
-
அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ சனிக்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வு முடிவின்படி, கொரோனா பெருந்தொற்று விலங்குகளிலிருந்து அல்லாமல் சீன ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டிருக்கதான் “வாய்ப்புகள் அதிகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன் முடிவுகள் குறித்து தங்களுக்கு “அதிக நம்பிக்கை” இல்லை என உளவு முகமை தெரிவித்துள்ளது.
“ஏற்கனவே உள்ள தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்றுக்கு இயற்கையான காரணத்தைவிட ‘ஆய்வு ரீதியாக உருவாகியிருப்பதற்கான’ சாத்தியக்கூறுகள்தான் அதிகம்” என, சிஐஏ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
டொனால்ட் டிரம்பால் நியமிக்கப்பட்டு, கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் எடுத்த முதல் முடிவு, இந்த மதிப்பாய்வை வெளியிடுவதுதான்.
இவர், முந்தைய டிரம்ப் ஆட்சியில் தேசிய உளவு முகமையின் இயக்குநராக பணியாற்றினார். அப்போது, சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியது எனும் வாதத்தை அவர் ஆதரித்துவந்தார்.
இந்த ஆய்வகத்திலிருந்து 40 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தில்தான் ஹூனான் இறைச்சி சந்தை உள்ளது. இந்த சந்தையிலிருந்துதான் கொரோனா பெருந்தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்தது.
பிரெயிட்பார்ட் நியூஸ் ஊடகத்துக்கு ஜான் ரட்கிளிஃப் வெள்ளிக்கிழமை அளித்திருந்த பேட்டியில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று எங்கிருந்து தொடங்கியது எனும் விவகாரத்தில் சார்பற்ற நிலைப்பாட்டை சிஐஏ கைவிட்டு, “நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
“பல வழிகளில் சீனாவிலிருந்து வரும் தாக்குதல்கள் குறித்து நான் அதிகம் பேசிவருகிறேன், இது, பல லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஏன் தங்கள் உயிரை இழந்தனர் என்பதுடன் தொடர்புடையது. கோவிட் எங்கிருந்து தொடங்கியது எனும் மதிப்பாய்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளாமல் சிஐஏ வெறுமனே அமர்ந்து வேடிக்கை பார்த்தது ஏன்?” என அவர் தெரிவித்தார்.
“இதுதான் என்னுடைய முதல் நாள் வேலை.”
ஆனால், இந்த மதிப்பாய்வு டிரம்ப் ஆட்சியின் புதிய உளவு முகமையால் மேற்கொள்ளப்பட்டது அல்ல என்றும், அதற்கு முந்தையை ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களில் கூறியுள்ளனர். இந்த மதிப்பாய்வு, முந்தைய பைடன் நிர்வாகத்தின் கடைசி வாரங்களில் உத்தரவிடப்பட்டு, திங்கட்கிழமை டிரம்ப் பதவியேற்பதற்கு முன்பாக முடிக்கப்பட்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவுகள் மீது “அதிக நம்பிக்கை இல்லை” என சிஐஏ கூறியுள்ளது, அதாவது இது முடிவுறாமலும், முரணாகவும், குறைபாடுகளுடனும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கான காரணம் என்ன என்பதில் ஒருமித்த கருத்து இல்லை.
இந்த வைரஸ், விலங்கிலிருந்து “இயற்கையாகவே பரவியிருக்கலாம்” என்றும், விஞ்ஞானிகள் அல்லது ஆய்வகங்களுக்கு இதில் பங்கு இல்லை என்ற கருத்தை சிலர் ஆதரிக்கின்றனர்.
ஆய்வகத்திலிருந்து இது பரவியிருக்கலாம் எனும் அனுமானம் குறித்து பல விஞ்ஞானிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர், அவர்களுள் பலரும் இதற்கு வலுவான ஆதாரம் இல்லை என கூறிவருகின்றனர். இது அமெரிக்காவின் “அரசியல் சூழ்ச்சி” என சீனா கடந்த காலத்தில் இந்த கூற்றை நிராகரித்துள்ளது.
இந்த அனுமானம், சில உளவு அமைப்புகளால் மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
கடந்த 2023-ம் ஆண்டில், அமெரிக்காவின் புலன் விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐ-யின் இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, தங்களின் அமைப்பு மேற்கொண்ட மதிப்பாய்வில்தான் “கொரோனா பெருந்தொற்று ஆய்வகத்திலிருந்து பரவியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பது” தெரியவந்ததாக ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு