போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையின் நச்சுக் கழிவுகள் இந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது ஏன்?

மத்திய பிரதேசம், போபால் யூனியன் கார்பைட், தொழிற்சாலை கழிவுகள், பிதாம்பூர்

படக்குறிப்பு, பிதாம்பூருக்கு நச்சுக் கழிவுகள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது
  • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
  • பதவி, பிபிசி ஹிந்தி

ஷிவ்நாராயண் தசனா, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி வியாபாரி. அவரது கிராமத்தில் அதிகளவில் காவல்துறையினர் குவிவது இதுவே முதல்முறை.

60 வயதான தசனா, ஆட்டோமொபைல் மற்றும் மருந்து தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற தொழில் நகரமான பிதாம்பூரில் உள்ள தாராபூரில் வசிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்த கிராமத்துக்கு 337 டன் நச்சுக் கழிவுகள் நிரம்பிய கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டன.

உலகின் மிக மோசமான தொழிற்சாலை பேரழிவுகளில் ஒன்றை சந்தித்த ஒரு பகுதியிலிருந்து, அழிக்கப்படுவதற்காக அந்த கழிவுகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த 1984ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்குக் காரணமாக இருந்த விஷவாயு விபத்து நடந்த இடமான போபால் நகரின் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் (தற்போது செயல்பாட்டில் இல்லை) இருந்து கொண்டுவரப்பட்ட இந்த கழிவுகள் உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் வீடுகளுக்கு அருகில் வைத்து இதை அழிப்பது, தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவைகூட ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

ஜனவரி 3ஆம் தேதி, கிராமத்துக்குக் கழிவுகள் கொண்டுவரப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு போராட்டங்கள் வெடித்தன, அதைத் தொடர்ந்து கல்வீச்சு மற்றும் தீக்குளிப்பு முயற்சிகள் என நிலைமை மோசமானது.

இதனால், கழிவுகளை அழிக்கும் நிலையத்துக்கு அருகில் கடுமையான காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கழிவுகள் எவ்வாறு அழிக்கப்படும்?

போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து காவல்துறை 100 பேர் மீது ஏழு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஆனால் இப்பகுதியின் மக்கள், தங்களது சிறிய அளவிலான சமூக கூட்டங்களில் மாசுபாடு குறித்து தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றனர்.

போபால் தொழிற்சாலையிலிருந்து அகற்றப்பட்ட நச்சுக் கழிவுகளில், ஐந்து வகையான அபாயகரமான பொருட்கள் இருந்தன. அதில், பூச்சிக்கொல்லி கசடு மற்றும் அதன் உற்பத்தி செயல்முறையிலிருந்து எஞ்சிய ‘நிரந்தர ரசாயனங்கள்’ போன்றவையும் அடங்கும்.

இந்த ரசாயனங்கள் அவற்றின் நச்சுப் பண்புகளை காலவரையறை இன்றி தக்கவைத்துக்கொள்வதால், அவை அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

போபாலில் பல்லாண்டுகளாக, இந்த ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் ஊடுருவி, தொழிற்சாலையைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு சுகாதார ஆபத்தை உருவாக்கியுள்ளன.

ஆனால், ‘பிதாம்பூரில் வைத்து இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்துவது, சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்தும்’ என்ற மக்களின் அச்சத்தை அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.

மக்களை அமைதிப்படுத்த, மூத்த அதிகாரி ஸ்வதந்திர குமார் சிங், இந்த நடைமுறையை படிப்படியாக விவரித்தார்.

“அபாயகரமான கழிவுகள் 1,200 செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்கப்படும், முதலில் 90 கிலோ எடையிலான சோதனை தொகுதிகள் இவ்வாறு அழிக்கப்படும். நச்சுத்தன்மை அளவு பாதுகாப்பானதாக இருந்தால், மூன்று மாதங்களில் 270 கிலோ தொகுதிகள் எரிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

“நான்கு அடுக்கு வடிகட்டுதல் முறை புகையைச் சுத்திகரிக்கும். இது நச்சுகள் காற்றில் நுழைவதைத் தடுக்கும் மற்றும் எரியூட்டும் செயல்முறையின் எச்சங்கள், ‘இரண்டு அடுக்கு படலத்தில் சீல் வைக்கப்படும்’. பிறகு மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க அவை, ஒரு பிரத்யேக நிலப்பரப்பில் புதைக்கப்படும்” என்று சிங் விளக்கினார்.

விரைவான தொழில்மயமாக்கலின் காரணமாக பிதாம்பூரின் நிலமும் நீரும் ஏற்கனவே மாசுபட்டுள்ளன

படக்குறிப்பு, விரைவான தொழில்மயமாக்கலின் காரணமாக பிதாம்பூரின் நிலமும் நீரும் ஏற்கனவே மாசுபட்டுள்ளன

“நாங்கள் 100 ‘மூத்த பயிற்சியாளர்களுக்கு’ பயிற்சி அளித்துள்ளோம். அப்புறப்படுத்தும் செயல்முறையை விளக்குவதற்கும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு கூட்டத்தொடர்களை நடத்துகிறோம்,” என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்க் மிஸ்ரா கூறினார்.

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “கழிவுகளை அழிக்கும் செயல்முறை மிகவும் பாதுகாப்பானது மற்றும் அவசியமானது” என்று கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரே இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த செயல்முறை குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

சுபாஷ். சி. பாண்டே போன்ற சிலர் முறையாக கழிவுகளை அழிப்பது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறார்கள். சியாமளா மணி போன்ற மற்றவர்கள், கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழிகளை நாட வேண்டும் என கோருகிறார்கள். எரிப்பதன் மூலம், அதிகளவு கசடுகள் எஞ்சும் மற்றும் பாதரசம், டையாக்ஸின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சுகள் வெளியிடப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார்.

பிதாம்பூரில் வைத்து கழிவுகளை அழிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

படக்குறிப்பு, பிதாம்பூரில் வைத்து கழிவுகளை அழிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

‘கழிவு மட்டுமல்ல விஷமும் கூட’

சியாமளா மணி ‘பயோரெமீடியேஷன்’ (Bioremediation) எனும் செயல்முறையை பரிந்துரைக்கிறார். இது கழிவுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அழிக்க நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் ஒரு முறை.

இது மிகவும் பயனுள்ள மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்று சியாமளா அறிவுறுத்துகிறார்.

ஆனால் இப்பகுதி மக்கள் இதுகுறித்து சந்தேகத்துடன் உள்ளனர்.

“இது கழிவு மட்டுமல்ல, விஷமும் கூட” என்று தாராபூர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகளின் தாயான காயத்ரி திவாரி கூறுகிறார்.

“சுத்தமான காற்றை சுவாசிக்கவோ, சுத்தமான தண்ணீரைக் குடிக்கவோ முடியாவிட்டால், வாழ்வின் அர்த்தம்தான் என்ன?” என அவர் கேள்வியெழுப்புகிறார்.

பிதாம்பூர் மக்களுக்கு, மாசுபாடு என்பது புறக்கணிக்க முடியாத பிரச்னையாக உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் தற்போதைய சுகாதார பிரச்னைகளை தங்களின் சந்தேகங்களுக்குக் காரணமாக மேற்கோள் காட்டுகின்றனர்.

1980களில் இப்பகுதியில் ஏற்பட்ட விரைவான தொழில்துறை வளர்ச்சி, அபாயகரமான கழிவுகள் குவிவது, பாதரசம், ஆர்சனிக் மற்றும் சல்ஃபேட்டுகள் கொண்ட மாசுபட்ட நீர் மற்றும் மண்ணுக்கு வழிவகுத்தது.

கடந்த 2017இல், மத்திய அரசின் ‘மாசு கட்டுப்பாட்டு பணியகம்’ இப்பகுதியில் கடுமையான மாசுபாடு நிலவுவதை சுட்டிக்காட்டியது.

அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான விதிகளை பல நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும், அதை மண்ணிலோ அல்லது நீர்நிலைகளிலோ கொட்டுவதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீர் மாசுபாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிதாம்பூர் மக்களுக்கு, நீர் மாசுபாடு என்பது புறக்கணிக்க முடியாத பிரச்னையாக உள்ளது (சித்தரிப்புப் படம்)

கடந்த 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகள், இங்குள்ள தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகரித்திருப்பதைக் காட்டின. கழிவுகளை அப்புறப்படுத்தும் கட்டமைப்பில் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் இருப்பதாக குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நிலைக்கு அதுவே காரணம் எனக் கூறுகிறார்கள்.

ஆனால் அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.

“எங்கள் வீடுகளின் குடிநீர் வடிகட்டிகள் (Filter) இரண்டு மாதங்கள் கூட நீடிப்பதில்லை. தோல் நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் இப்போது பொதுவான பிரச்னைகளாக மாறிவிட்டன. இங்கு நிலவும் மாசுபாடு வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது”, என்று சிராகன் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான பங்கஜ் படேல், தனது நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சுட்டிக்காட்டி கூறுகிறார்.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி ஸ்ரீனிவாஸ் திவேதி இந்தப் புகார்களை நிராகரித்து, ‘தொழில்துறை புரட்சிக்கு முந்தைய நிலைமைகளை பிதாம்பூரில் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது’ என்று கூறினார்.

‘மக்களை திசைதிருப்பும் செயல்’

இதற்கிடையில், பிதாம்பூரில் இருந்து கிட்டத்தட்ட 230 கி.மீ (143 மைல்) தொலைவில் உள்ள போபாலில், இந்த கழிவுகளை அழிக்கும் செயல்முறை என்பது மிகப்பெரிய பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்பக்கூடிய ஒன்று என சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.

போபால் விபத்து நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட, அபாயகரமான கழிவுகள் மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்தன. அவை சுற்றுப்புறத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்தின.

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 2010ஆம் ஆண்டு அறிக்கையின்படி, யூனியன் கார்பைடு தொழிற்சாலை தளத்தில் 11 லட்சம் டன்களுக்கும் அதிகமான நச்சு கலந்த மண் உள்ளது.

“போபாலில் உள்ள மிகப்பெரிய பிரச்னையை புறக்கணித்துவிட்டு, 337 மெட்ரிக் டன் கழிவுகளை அப்புறப்படுத்துவதாக அரசாங்கம் ஒரு நாடகத்தை நடத்துகிறது” என்று முன்னணி சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறினார்.

“பல ஆண்டுகளாக இந்த மாசுபாடு மோசமடைந்துள்ளது, இருப்பினும் அதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை” என்று மற்றொரு ஆர்வலரான ரச்னா திங்க்ரா கூறினார்.

போபால் விபத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போபால் விபத்து நடந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட, அபாயகரமான கழிவுகள் மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்தன

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே 3,500 பேர் இறந்ததாகவும், 15,000க்கும் அதிகமானோர் அதற்குப் பிறகு இறந்ததாகவும் அரசாங்க கணக்குகள் கூறுகின்றன.

ஆனால், பலி எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் விஷத்தின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“பிதாம்பூர் மாசுபாட்டின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால், மக்களின் அச்சம் நியாயமானதுதான்” என்று ஜெயராமன் கூறினார்.

“நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே கழிவுகளை கையாள்வதாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், போபாலின் யதார்த்த நிலை பிதாம்பூர் மக்களிடையேயான அவநம்பிக்கையைக் கூட்டுகிறது. அவர்கள் இப்போது கழிவுகளை அழிப்பதை எதிர்த்து மீண்டும் தெருக்களில் இறங்கிப் போராட தயாராக உள்ளனர்.

காய்கறி விற்பனையாளர் ஷிவ்நாராயண் தசனா, “இந்த பிரச்னை கழிவுகளுக்கு அப்பாற்பட்டது” என்கிறார்.

“இது உயிர் வாழ்வதைப் பற்றியது. எங்களுடைய மற்றும் எங்கள் குழந்தைகளுடைய உயிரைப் பற்றிய விஷயம்” என்று அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு