இலங்கையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாகன இறக்குமதி – விலை இரட்டிப்பாகும் என்ற அச்சம் ஏன்?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி முதல் வாகன இறக்குமதிக்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இப்போது புதிதாக ஆட்சி பீடம் ஏறிய அநுர குமார திஸாநாயக்க, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளார். வாகன இறக்குமதிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்ஜிகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கான வரி அறவீடு
வாகன இறக்குமதி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் கடந்த 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம், உற்பத்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து 10 வருடங்களுக்கு மேற்படாத வாகனங்களுக்கு 200 முதல் 300 வீதம் வரையான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், சில வாகனங்களுக்கு இயந்திர கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் வரி அறவிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பின்னணியில், வாகனங்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு
வாகன இறக்குமதிக்காக 2025ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
அவர், ”ஐந்து வருடங்களாக வாகன இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்காக தற்போதுள்ள வாகனங்களைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், 5 வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த வாகனங்களே தற்போதும் உள்ளன.
சுற்றுலாத் துறை முன்னேற்றம் அடைவதற்கும், தொழில்துறை அபிவிருத்தி அடைவதற்கும், போக்குவரத்துத் துறை முன்னேற்றம் அடைவதற்கும், பொருளாதார நிலைமைகள் வழமைக்கு வர வேண்டுமென்றால், வாகன இறக்குமதி அவசியமாகின்றது. பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல் செயற்பாட்டு செலவினங்கள் அதிகமாக இருக்கின்றன. பொருளாதார ரீதியில் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
”அந்நிய செலாவணியைப் பாதுகாத்த வண்ணம், மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குச் செல்லாத விதத்தில் வாகன இறக்குமதியைச் செய்வது மிகவும் முக்கியமானது. நாடொன்றுக்கு வாகனம் அத்தியாவசியமானது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எம்மிடம் 6 பில்லியன் அமெரிக்க டாலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. நாம் இன்னும் சரியான இடத்திற்கு வரவில்லை.
ஆறு பில்லியன் என்பதை 7 பில்லியனாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். மூன்று கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்கள் என மூன்று கட்டங்களாக இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளன” என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் சுமார் 24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக கார்கள், தற்போது 50 லட்சத்தை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்ஜிகே பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
”வாகன இறக்குமதி தொடர்பாக குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவுக்கு நாங்கள் எங்களது யோசனைகளை முன்வைத்திருந்தோம். நிதி அமைச்சு கடந்த காலங்களில் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. ஐந்து வருடங்களாக வாகனங்களை இறக்குமதி செய்யாதிருந்த நிலையில், திடீரென வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சரியான மற்றும் முறையான விதத்தில் இதை முன்னெடுக்க வேண்டும். அது தொடர்பில் நிதி அமைச்சும், இலங்கை மத்திய வங்கியும் செயற்படுகின்றன. இந்த வாகன இறக்குமதிக்கு முன்பாக ஜனாதிபதி, உரிய அதிகாரிகள் மற்றும் வாகன இறக்குமதியாளர்கள் ஒன்று கூடி கலந்துரையாடினால் நல்லது என நினைக்கின்றேன்” என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்ஜிகே குறிப்பிடுகின்றார்.
”குறைந்தபட்சம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை வரி காணப்படுகின்றது. வாகனங்களின் அடிப்படையில் அது மாற்றமடையலாம். டாலரின் பெறுமதி தற்போது 300 இலங்கை ரூபாய் என்பதனால், சிறிய ரக நேனோ அல்லது அல்டோ போன்ற கார்கள் 50 லட்ச ரூபாயைத் தாண்டும் என நினைக்கின்றேன். ஜப்பான் அல்டோ ரக காரின் விலை 65 லட்சம் வரை அதிகரிக்கக் கூடும் என நினைக்கின்றேன்.”
”ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் அல்டோ வாகனமொன்றை நாங்கள் 27 அல்லது 28 லட்சத்திற்கு விற்பனை செய்தோம். இந்தியன் அல்டோ கார் 23 அல்லது 24 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது” என அவர் கூறுகின்றார்.
வாகன விற்பனையாளர்கள் என்ன சொல்கின்றார்கள்?
புதிய வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் நிலையில், புதிய வாகனங்களை வாங்கும் கனவு என்றுமே சாதாரண ஒருவருக்கு நிஜமாகாது என இரத்தினபுரியைச் சேர்ந்த வாகன விற்பனையாளரான ஆர்.ராஜேந்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
”செலரீயோ போன்ற வாகனங்களையே இறக்குமதி செய்யவுள்ளதாக வாகன இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் சொல்கின்றார்கள். அல்டோ போன்ற வாகனங்களைக் கொண்டு வருவதில்லை என அந்த நிறுவனத்திலுள்ள அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
செலரீயோ கார் 71 லட்சத்திற்கு அதிகமான விலைக்கே விற்பனை செய்யப்படும். அப்படியென்றால், புதிய வாகனமொன்றை குறைந்த விலையில் வாங்க முடியாத சூழ்நிலையே உருவாகியுள்ளது. 17 அல்லது 18 லட்சம் ரூபாவிற்கு புதிய கார்களை கொண்டு வந்த காலம் போக, இப்போது அடிமட்டத்திலுள்ள ஒருவர் புதிய காரை வாங்க 70 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
என்னைப் பொறுத்தவரை பழைய வாகனங்களின் விலை குறையும் நிலைமை இல்லை. வாகனங்களை இறக்குமதி செய்வது வசதியானவர்களுக்காகவா என்ற கேள்வி எழுகின்றது. இப்போதுள்ள நிலைமையில் சாதாரண ஒருவரால் புதிய வாகனமொன்றை வாங்க முடியாத சூழல் ஏற்படும்” என வாகன விற்பனையாளரான ஆர்.ராஜேந்திரன் தெரிவிக்கின்றார்.
”புதிய வாகனங்கள் இல்லாமையால், வாகனங்களுக்கான சந்தை விலை தற்போது நாட்டில் இல்லை. அதனால், எந்தவொரு வாகனம் சிறந்த தரத்துடன் இருக்கின்றதோ அந்த வாகனத்தின் உரிமையாளர் சொல்வதே விலையாக தற்போது காணப்படுகின்றது. முன்னர் இந்த பிரச்னை இருக்கவில்லை. அல்டோ வாகனத்தை எடுத்துக் கொண்டால், 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் 17 அல்லது 18 லட்சம் ரூபாவிற்கு இருந்தது.
புதிய வாகனங்கள் ஒரு விலை, பழைய வாகனங்கள் ஒரு விலை என்ற அடிப்படையில் இருந்தது. இப்போது அந்த நிலைமை இல்லை. இப்போது பழைய தரமான சாதாரண கார் ஒன்று சுமார் 35 லட்சமாக காணப்படுகின்றது. குறைந்தது 30 லட்சத்திற்கு அதிகமானவே விற்பனை செய்யப்படுகின்றது. புதிய அல்டோ கார் ஒன்று 50 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில், பழைய அல்டோ காரின் விலை அதே 30 லட்சம் ரூபாவில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். புதிய வாகனங்களை வாங்கும் கனவு என்றுமே சாமானியருக்கு நிஜமாகாது” என அவர் கூறுகின்றார்.
மக்கள் கூறுவது என்ன?
புதிய கார்களை இறக்குமதி செய்யும் போது, பழைய கார்களின் விலை குறைவடையும் என எதிர்பார்ப்புடன் பழைய காரொன்றை வாங்க எண்ணிய தனது எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பேராதனை பகுதியைச் சேர்ந்த எம்.சிவா பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.
”நாங்கள் ஆட்டோ ஒன்றை வாங்குவதற்கு பதிலாக கார் ஒன்றை வாங்கும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆட்டோ ஒன்று 12 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். ஜப்பான் அல்டோ கார் ஒன்று 30 லட்சம் ரூபாவிற்கு வந்தால், பழைய அல்டோ காரை 20 லட்சம் ரூபாவிற்கு குறைவாக வாங்க எதிர்பார்த்திருந்தேன். இந்தியன் அல்டோ காராக இருந்தால் ஒரு 15 லட்சம் ரூபாவிற்கு வாங்கலாம் என எதிர்பார்த்தேன். இந்த கனவை நிறைவேற்றும் பொறுப்பு, வந்திருக்கும் அரசாங்கத்திடம் தான் இருக்கின்றது.
கார் ஒன்றை வாங்க வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன். அந்த எதிர்பார்ப்பு இல்லாது போகும் விதமாக தான் இருக்கின்றது. கொண்டு வரப் போகின்ற புதிய கார் 50 லட்சத்தை தாண்டும் என சொல்கின்றார்கள். காரை வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.” என சிவா தெரிவித்தார்.
மத்திய தர குடும்பங்கள் வாகனங்களை வாங்கும் நிலையில் உள்ளதா?
நாடு மீண்டும் பொருளாதார பின்னடைவுக்கு செல்லாத விதத்தில் படிப்படியாக வாகன இறக்குமதியை வழமை நிலைக்கு கொண்டு வர வேண்டும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார்.
”அனைவரும் புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்புவார்கள். தமது வருமானத்திற்கு ஏற்ற விதத்தில் வாகனங்களை வாங்கக் கூடியவர்கள் வாகனங்களை வாங்குவார்கள். ஒரு பில்லியன் டாலருக்கு பதிலாக இரண்டு பில்லியன் டாலருக்கு வாகனங்களை இறக்குமதி செய்கின்றோம் என நினைத்தால், இறக்குமதிக்காக கேள்வி அதிகரித்து, பணவீக்கம் அதிகரித்து, வாகன விலைகளும் பாரியளவில் அதிகரிக்கக் கூடும். அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாத நிலைமை மீண்டும் ஏற்பட்டால், என்ன நேரும்?
கடந்த 2022ம் ஆண்டு நாம் அவதானித்தோம். வாகனம் இருந்தாலும், அதற்கு நிரப்புவதற்கு பெட்ரோல் இருக்கவில்லை. தற்போது அனைவரும் வாகனங்களை வாங்க முயற்சித்தால், பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடும். அனைவருக்கும் வாகனம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். அதனால், படிப்படியாக வாகன இறக்குமதியை மேற்கொண்டு பாதிப்பு இல்லாத விதத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்” என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிக்கின்றார்.
புதிய வாகனங்களின் விலை அதிகரித்து காணப்படும் – ஜனாதிபதி
இரண்டாம் நிலை வாகன சந்தையினால் ஏற்படுகின்ற பிரச்னைகளை தவிர்த்துக் கொள்ளும் வகையில், முதல்கட்டமாக புதிய வாகனங்களின் விலை சற்று அதிகரித்து காணப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, உள்ளூர் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
”2018-ஆம் ஆண்டு நாங்கள் 1.95 பில்லியன் டாலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளோம். 2019-ஆம் ஆண்டு சுமார் 1.4 பில்லியன் டாலர் பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளோம். நாங்கள் 1 முதல் 2 பில்லியன் டாலருக்கு இடைப்பட்ட விதத்திலேயே வாகனங்களை இறக்குமதி செய்துள்ளோம். இப்போது ஐந்து வருடங்களின் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளோம்.
வலுவான டாலர் கையிருப்பில் வைத்துக்கொண்டு நாங்கள் வாகன இறக்குமதியை செய்யவில்லை. பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக வாகன சந்தையை திறக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதனை செய்கின்றோம். அப்படியென்றால், எமது கையிருப்பிலுள்ள அந்நிய செலாவணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. வாகனங்களினால் மீண்டும் வீழும் நிலைக்கு செல்ல கூடாது. மிகவும் அவதானத்துடன் வாகன சந்தையை திறக்க வேண்டும்.”
”விலைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது, டாலர் சுமார் 190 ரூபா பெறுமதியில் இருந்த சந்தர்ப்பத்தில் கொண்டு வந்த வாகனங்களே தற்போது இருக்கின்றன. தற்போது டாலரின் பெறுமதி 300 ரூபாவை அண்மித்துள்ளது. அப்படியென்றால், சுமார் 40 வீத டாலர் பெறுமதி அதிகரிப்பு காணப்படுகின்றது. அதேபோன்று 18 வீத வாட் வரி உள்ளடங்குகின்றது. வாகன சந்தையில் இரண்டாம் நிலை சந்தையொன்று உள்ளது. இரண்டாம் நிலை சந்தையிலிருந்து பலர் லீசிங் முறையில் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர்.
புதிய வாகனங்களுக்கும், இரண்டாம் நிலை வாகனங்களுக்கும் இடையில் ஒரே விலை வீதம் காணப்படும் பட்சத்தில், மீண்டும் ஒரு பிரச்னை உருவாகும். அப்படியென்றால், புதிதாக இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களை இரண்டாம் நிலை சந்தையை விட அதிக விலையில் வைக்க வேண்டும். இரண்டாம் நிலை வாகன சந்தை பிரச்னைக்கு உள்ளாகுமாக இருந்தால், லீசிங் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் பிரச்னைக்கு உள்ளாகும்.
அதனால், முதல் கட்டமாக வாகனங்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படும். அதன் பின்னர் சந்தை நிலைமையை கருத்திற் கொண்டு அவதானம் செலுத்த முடியும். ஒரு வகையில் எச்சரிக்கையான தீர்மானம் இது. பல கோணங்களில் சிந்தித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு