விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் கருண் நாயர் இந்திய அணியில் இடம் பெறாதது ஏன்?

கருண் நாயர், கிரிக்கெட், சாம்பியன்ஸ் ட்ராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருண் நாயர்
  • எழுதியவர், குர்ரம் ஹபீப்
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக

விஜய் ஹசாரே டிராஃபி போட்டிகளில் சிறப்பாக விளையாடியும்கூட, கருண் நாயரின் பெயர் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.

கருண் நாயரின் சிறப்பான ஆட்டம், சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளுக்காக வீரர்களை தேர்வு செய்யும் பிசிசிஐ தேர்வுக்குழுவின் கண்களில் தாமதமாகவே பட்டது.

அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் இந்த தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளை, சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்தும் தொடராக தேர்வுக் குழு கருதுகிறது. எனவே, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களே சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் பங்கேற்பார்கள்.

வலது கை பேட்ஸ்மேனான கருண் நாயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான 9 போட்டிகளில் 779 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரின் ரன் சராசரியாக 389.5-ஆக உள்ளது. அடுத்தடுத்து ஐந்து ஆட்டங்களில் சதம் அடித்து அசத்தினார் கருண் நாயர்.

விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டிக்கு விதர்பாவை அழைத்துச்சென்றதில் அவர் அடித்த அரைசதம் முக்கிய பங்கு வகித்தது. இருப்பினும், இறுதிப் போட்டியில் விதர்பா, கர்நாடகா அணியிடம் தோல்வியை சந்தித்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

கருண் நாயருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை?

விஜய் ஹசாரே போட்டிகளுக்குப் பிறகு கருண் நாயரின் ஆட்டத்தைப் பார்த்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருண் நாயரை வாழ்த்தினார்.

“7 ஆட்டங்களில் 5 சதங்களுடன் 752 ரன்கள் எடுப்பது அசாதாரணமானது. எதேர்ச்சையாக இவை நிகழ்வதில்லை. முழு கவனம் மற்றும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி இதுபோன்று சிறப்பாக விளையாடவும்.” என இறுதிப் போட்டிக்கு முன்பு, எக்ஸ் தளத்தில் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார்.

ஆனால் சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகள் மட்டுமே உள்ளன. எனவே, இப்போது கருணுக்கு வாய்ப்பு அளிப்பதோ அல்லது 2023 உலக கோப்பைக்குப் பிறகு குறைவான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய வீரர்கள் தயாராக இந்த போட்டிகள் களமாக பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்கு வாய்ப்பை மறுப்பதும் ஆபத்தானதாக முடியலாம்.

இதில் இருக்கும் பிரச்னை குறித்து அஜித் அகர்கர் குறிப்பிட்டார்.

“700 ரன்களுக்கும் மேல் சராசரியைக்கொண்ட ஒரு பேட்ஸ்மேனை நிராகரிப்பது கடினமான செயல். அவருடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இது குறித்து நாங்கள் அவரிடம் பேசினோம். இந்த நேரத்தில் அவரை அணிக்குள் சேர்ப்பது கடினமானது. தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் சராசரி வயது 30 முதல் 35 ஆக உள்ளது,” என்று குறிப்பிட்டார் அஜித்.

“இது போன்று சிறப்பாக விளையாடிய வீரர்களை கவனத்தில் எடுத்துக்கொள்வோம். அணியில் இடம்பெற்றுள்ள ஏதேனும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டால், கருண் நாயரை இணைப்பது குறித்து யோசிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஏற்கெனவே, இந்த அணியில் கருண் நாயருக்கு இடம் இல்லை என்று கூறியிருந்தார்.

தொலைக்காட்சி நிகழ்வில் பேசிய கவாஸ்கர், “தேர்வுக்குழுவால் கருணை எங்கே விளையாட வைக்க இயலும்? அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் அல்லது ஷ்ரேயஸ் அணியில் இடம்பெறலாம். ஆனால் ராகுல் இரண்டாம் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக களம் இறங்குவார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். அந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா பல ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை. ஷ்ரேயஸும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் தான் கருணுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

கருண் நாயர், கிரிக்கெட், சாம்பியன்ஸ் ட்ராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விஜய் ஹசாரே கோப்பைக்கான 9 போட்டிகளில் 779 ரன்கள் எடுத்து அசத்தினார்

வயது ஒரு பிரச்னையா?

கருணின் வயது 33. உண்மையில் இது கூட ஒரு பிரச்னையாக இருக்கலாம். ஒரு அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் அதிக அளவில் இருக்கக் கூடாது. ரோஹித் ஷர்மாவின் வயது 37. விராட் கோலியின் வயது 36.

இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகிப்பவர்கள் மற்றும் தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் ஆதரவை கருண் நாயர் பெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறுகிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சுரீந்தர் கண்ணா.

மேற்கொண்டு பேசிய அவர், “மெதுவாக இயங்கும் பலரை நீங்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட வைக்க இயலாது. ஷர்மாவின் வயது 37, கோலியின் வயது 36, ஷமியின் வயது 34. ஷமி மீண்டும் விளையாட வருகிறார். அவர் பந்துவீச்சாளர். காயம் அடைந்த அவர் குணமாகி மீண்டும் விளையாட வருகிறார். ஷமி தொடர்ச்சியாக விளையாடுவார் என்று என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று கேள்வி எழுப்புகிறார்.

“நாயரின் வயது 33. அவர் பேட்டிங் செய்து வருகிறார். அவருடைய சராசரி ரன் 389.5 ஆக உள்ளது. இத்தகைய ஆட்டக்காரர்கள் இந்திய அணி பங்கேற்கும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முழுமையான உரிமைகளைக் கொண்டவர்கள். உண்மையில், 2016-17 ஆண்டு காலத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்துவர்கள்தான் இன்றும் தேர்வுக் குழுவில் உள்ளனர்,” என்றும் குறிப்பிட்டார்.

கருண் நாயர், கிரிக்கெட், சாம்பியன்ஸ் ட்ராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உண்மையில், 2016-17 ஆண்டு காலத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க மறுத்துவர்கள் தான் இன்றும் தேர்வுக் குழுவில் உள்ளனர்

நாயர் கூறுவது என்ன?

இந்திய அணியில் இடம்பெறாமல் இருப்பது குறித்து கருண் நாயர் அதிக கவனம் செலுத்தவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர் நிறைய நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

ரஞ்சி கோப்பையிலும் கருண் சிறப்பாக விளையாடினார் என்றால், ஐ.பி.எல் முடிந்து வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான வீரர்களை தேர்வு செய்ய நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அவரை நிராகரிக்க இயலாது.

“நான் முடிவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்பதில் தான் என்னுடைய கவனம் உள்ளது,” என்று நாயர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் (உள்ளுர்) போட்டிகளில் நாயர் பங்கேற்றார். அவரின் விளையாட்டு, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கலாம்.

தற்போது ராஜஸ்தானில் ரஞ்சி டிராஃபி போட்டியில் விளையாட தயாராகி வருகிறார் கருண் நாயர்.

“கடந்த 12 – 16 மாதங்களாக நான் நன்றாக விளையாடி வருகிறேன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து தான் அது ஆரம்பமானது. அப்போது இருந்து அனைத்தையும் நான் எளிதாக அணுகுகிறேன். விளையாடும் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு அணிக்காக எப்படி விளையாடலாம் என்று முடிவெடுக்கிறேன்,” என்று கூறினார் அவர்.

“இதை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதுதான் முக்கியம். முன்னணியில் நின்று, போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிபெற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.” என அவர் கூறினார்.

கருண் நாயர், கிரிக்கெட், சாம்பியன்ஸ் ட்ராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2016-ஆம் ஆண்டு தன்னுடைய அதிரடி ஆட்டத்தைத் துவங்கினார் கருண் நாயர்

நாயரின் ஆரம்ப காலம் எப்படி இருந்தது?

கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னுடைய அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார் கருண் நாயர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் அன்று பெரும் அனுபவம் பெற்ற வீரரும் இல்லை. அது அவரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி.

இரண்டு ஒரு நாள் போட்டிகள், 6 டெஸ்ட் போட்டிகளில் அதன் பிறகு பங்கேற்றார். இறுதியாக 2017-ஆம் ஆண்டின் முற்பாதியில் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அதன் பிறகு, கருண் நாயர் இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டது. கர்நாடகாவுக்காக பல ஆண்டுகள் விளையாடினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விதர்பா அணியில் விளையாடி வருகிறார்.

ரஞ்சி கோப்பையில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இல்லை. ஜனவரி 2023-க்கு முன்பு அவர் ரஞ்சி போட்டிகளில் வெறும் 289 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருடைய அன்றைய சராசரி ரன் 48.17-ஆக இருந்தது.

ஆனால் சமீபத்தில் அவர் ஆடிய ஆட்டங்கள் அவருக்கு வலுவை சேர்க்கும். மீதம் உள்ள இரண்டு தொடர்களிலும் அவர் சிறப்பாக ஆடினால், பிறகு இந்திய அணியில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும்.

கருண் நாயரின் திறமையான ஆட்டத்தால், அவருடைய அணி குரூப் ‘பி’-யில் முதலிடத்தில் உள்ளது.

கருண் நாயர் தன் வயது குறித்துக் கவலை அடையவில்லை. அவர் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறித்தும் கவலை அடையவில்லை என்பது போல் தான் இருக்கிறது.

“ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது குறித்து மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். நான் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டத்தை, உடல் திறனை மேம்படுத்த முயற்சி செய்கிறேன்,” என்று கூறுகிறார் நாயர்.

“வயது வெறும் எண்தான். நீங்கள் உங்களை சிறப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும். விளையாட்டு வீரரால் மட்டுமே அவரின் ‘ஃபிட்னஸை’ சரியாக பார்த்துக்கொள்ள இயலும்” என்றும் அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு