திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை ஆதீனம் செல்ல திடீர் தடை – இன்றைய முக்கிய செய்திகள்

டாப்5 செய்திகள், இன்றைய முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள்

படக்குறிப்பு, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்

எச்சரிக்கை: இதில் இடம் பெறும் சில செய்திகள், தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

இன்றைய (26/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, மதுரை ஆதீனம் செல்வதற்கு போலீஸார் தடை விதித்ததாக இந்து தமிழ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக சனிக்கிழமை மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் செல்லவிருந்தார். அவர் மலை மீது சென்று வழிபாடு செய்ய போலீஸார் தடை விதித்தனர். இதனால் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பயணத்தை ரத்து செய்தார்.

இது குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாற்று சமயத்தினர் தகராறு செய்து விடுவர் என போலீஸார் அச்சப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. காசி விஸ்வநாதர் கோயிலில் பூஜையும், பள்ளிவாசலில் தொழுகையும் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும், அவரவர் மத வழிபாட்டை தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து முன்னணியினரும் பேரணி நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும், 400 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நெல்லையில் தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இறந்த தாயின் உடலை சைக்கிளில் வைத்து 15 கி.மீ தள்ளி வந்த மகனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியின் படி, களக்காடு அருகே வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த ஜெபமாலை, சிவகாமி தம்பதியினருக்கு ஏசுபாலன் உள்ளிட்ட 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஏசுபாலனுக்கு மன நலப் பிரச்னைகள் இருந்ததால் தன்னுடைய தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

திடீரென சிவகாமிக்கு உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரை சைக்கிளில் வைத்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அவருக்கு அங்கே சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த 23-ஆம் தேதி அன்று சிவகாமி அந்த மருத்துவமனையில் இருந்து திடீரென காணாமல் போனார்.

அன்று இரவு ஏசுபாலன் தன்னுடைய தாயார் சிவகாமியின் உடலை சைக்கிளில் கயிற்றால் கட்டி மூன்றடைப்பு மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து தாயாருக்கு டீ வாங்கித் தர அவரை அழைத்து வந்ததாகவும், ஆனால் அவரால் டீ குடிக்க இயலவில்லை என்பதால் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

காவல்துறையினர் சிவகாமியின் உடலை பரிசோதனை செய்த போது அவர் இறந்து போனது தெரிய வந்தது. அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். மேலும் இது குறித்து ஏசுபாலனிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தந்தி செய்தி குறிப்பிடுகிறது.

இன்றைய முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Dailythanthi e-paper

படக்குறிப்பு, சைக்கிளில் சிவகாமியின் உடலை கயிற்றால் கட்டி 15 கி.மீ தள்ளி வந்துள்ளார் ஏசுபாலன்

ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இன்றைய தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் தாக்குதலில் தொடர்புடையவர் தஹாவூர் ராணா. கனடா குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ராணா மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக தெரிவிக்கிறது தினமணி நாளிதழின் செய்தி.

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தான் – அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் இவர். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சலிஸ் சிறையில் உள்ளார். அவரை நாடுகடத்த ஜோ பைடனின் ஆட்சி காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாகாண நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக மேல் முறையீடு செய்து தோல்வி அடைந்தார் ராணா.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அவரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கனடா குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ராணா மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக கருதப்படுகிறது

திருப்பூரில் வங்கதேசத்தினர் பலர் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 36 பேர் கைது செய்யப்பட்டதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

அதன்படி, கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தி, உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தினர் பலர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகரில் 15 பேர், வேலம்பாளையம் காவல்எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 பேர், தெற்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 பேர், நல்லூர் காவல் நிலையப் பகுதியில் பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஒரே மாதத்தில் திருப்பூரில் 83 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானியின் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானிக்கவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

இன்றைய முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ” மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை கடந்த அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்வதற்கு எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய மீளாய்வு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மாத்திரமே அரசாங்கம் எடுத்துள்ளது. அதனைவிடுத்து வேறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீளாய்வுக்குழு அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மீளாய்வின் பின்னர் அந்த அறிக்கைக்கமைய எவ்வாறான திருத்தங்களை மேற்கொள்வது என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும்.” என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.