காஸா: போர் நிறுத்தத்திற்கு பிறகும் வீடு திரும்பும் பாலத்தீனர்களை இஸ்ரேல் தடுப்பது ஏன்?
- எழுதியவர், ருஷ்டி அபுவலாஃப்
- பதவி, பிபிசி
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், வடக்கு காஸா கரையில் அமைந்துள்ள தங்களின் வீடுகளுக்கு செல்ல மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அனால், ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறுகிறது எனக்கூறி, வீடு திரும்பும் மக்களுக்கு இஸ்ரேஸ் அனுமதி மறுத்து வருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய நான்கு ராணுவ வீராங்கனைகளை ஹமாஸ் விடுதலை செய்தது. அதே நேரத்தில், இஸ்ரேலின் சிறையில் இருந்து 200 பாலத்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹமாஸால் பணயக் கைதியாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலை சேர்ந்த அர்பெல் யெஹுத் விடுவிக்கப்படவில்லை எனக்கூறி இந்த பிரச்னை எழுந்துள்ளது. ராணுவத்தினர் அல்லாத, பணயக்கைதிகளை அடுத்தடுத்து விடுவிக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.
யெஹுத் உயிருடன் இருப்பதாகவும், அடுத்த வாரம் விடுவிக்கப்படுவார் என்றும் ஹமாஸ் கூறியுள்ள நிலையில், இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக காஸாவில் இருந்து சில துருப்புகளை பின்வாங்கும் திட்டத்தை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளது. இஸ்ரேஸ் படைகள் பின்வாங்கப்பட்டிருந்தால், பாலத்தீனர்கள் வடக்கே தங்களது வீடுகளுக்கு சென்றிருக்க முடியும்.
மத்திய காஸாவில் இருந்து வீடு செல்ல கூட்டம் கூட்டமாக நகர்ந்த பாலத்தீனர்கள் அல்-ரஷித் சாலையில் ஒன்றுகூடினர். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் பாலத்தீன ஊடகம் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டது. அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் துப்பாக்கிச் சத்தம் தெளிவாக கேட்கிறது. பிபிசி வெரிஃபை சுயாதீனமாக அந்த காணொளியை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட இறப்பு மற்றும் காயம் தொடர்பான தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
“மத்திய காஸாவில் தங்களின் ராணுவத்திற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தோன்றிய ஒரு சிலர், ஒன்று சேர்ந்ததற்கு எதிராகவே துப்பாக்கிச்சூடு நடத்தினோம்,” என்று இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும். “இங்கே யாரையும் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. அவர்கள் விலகி இருக்க அறிவுறுத்தும் பொருட்டே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை மீண்டும் உறுதி செய்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது
காத்திருக்கும் மக்கள்
சனிக்கிழமை அன்று வடக்கு காஸாவில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு செல்ல காத்துக்கொண்டிருந்த நபர்களில் முகமது எமாத் அல்-தினும் ஒருவர்.
“எனக்கு தெரியும் என்னுடைய வீடு சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்று. ஆனால், அந்த இடிபாடுகளின் மீது நான் கூடாரத்தை எழுப்பி அதில் தங்குவேன்,” என்று பிபிசியிடம் அலைபேசியில் பேசிய எமாத் கூறினார்.
“நான் முடி திருத்தும் பணியை செய்கிறேன். என்னுடைய பணியை நான் தொடர வேண்டும். தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளான என்னுடைய சலூனை மீட்பது எப்படி என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். மக்களுக்கு நிறைய கடன்பட்டுள்ளேன். என்னுடைய குழந்தைகளுக்காக எதையும் வாங்கக்கூட இயலாத நிலையில் நான் உள்ளேன்,” என்று கூறினார்.
“ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை உடனே முடிவுக்கு வர வேண்டும். மக்களை வட காஸாவுக்குள் அனுமதிக்க வேண்டும். எங்களின் உற்றார்களையும் உறவினர்களையும் பார்த்து 15 மாதங்கள் ஆகிறது,” என்று கூறினார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலத்தீனர்களை நெட்ஜரிம் காரிடரின் வடக்கே செல்ல அனுமதிக்க வேண்டும். 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நிலப்பரப்பை இஸ்ரேல் கட்டுப்படுத்துகிறது. இது வடக்கு காஸாவை, காஸாவின் இதர பகுதிகளில் இருந்து பிரிக்கிறது.
அங்கே சனிக்கிழமை பகலில் தன்னுடைய இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் கழுதை வண்டியில் வந்தார் லுப்னா நாசர். 11 மாதங்களாக அவர்களை பிரிந்து வாழும் லுப்னாவின் கணவர் சுல்தானை சந்திக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார் அவர். தன்னுடைய வீட்டுக்கு செல்ல காத்துக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“இஸ்ரேலிய சோதனைச்சாவடி அருகே நான் இருப்பேன். நானும் என்னுடைய பெண் குழந்தைகளும் என்னுடைய கணவரை காணும் தருணத்துக்காக காத்துகொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.
ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை அவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கும் வகையில், கத்தார் மற்றும் எகிப்து நாடுகளை சேர்ந்த மத்தியஸ்தர்கள் தங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அர்பெல் உயிருடன் தான் உள்ளார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஹமாஸ் சமர்ப்பிக்க வேண்டும் என்று இஸ்ரேல் மத்தியஸ்தர்களிடம் கேட்டுள்ளது. ஹமாஸ் ஆதாரங்களை எகிப்திய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
ஹமாஸ் தற்போது விடுதலை செய்த நான்கு ராணுவ வீராங்கனைகளும் அக்டோபர் 2023-ல் நடைபெற்ற தாக்குதலின்போது பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த பெண்கள் சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு ஏற்பட்டு வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று காஸா மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் கட்டட இடிபாடுகளும், அழிவும் அவர்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளது.
இருப்பினும், அவர்கள் தங்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, தங்களின் வீடுகளை மீள் உருவாக்கம் செய்ய, குடும்ப உறுப்பினர்களை சந்திக்க, அவர்களுடன் சேர்ந்து வாழ கனவு கண்டுகொண்டு தான் இருக்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு