வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் – இந்தியா சொன்னது என்ன?
வங்கதேசம், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடையே சந்திப்புகள் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இதனிடையே, அண்டைப் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் மீது கண் வைத்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தேவைப்பட்டால் ‘உரிய’நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-இன் பகுப்பாய்வுக்கான இயக்குநர் ஜெனரலாக இருக்கும் மேஜர் ஜெனரல் ஷாகித் அமிர் அஃப்சர் உள்ளிட்ட சில அதிகாரிகள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
முன்னதாக பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் டாக்காவுக்கு சென்றிருந்தனர். வங்கதேச ராணுவ அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்திய வெளியுறவுத் துறையின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
இந்திய வெளியுறவுத் துறை கூறியது என்ன?
“இந்தியாவிலும் இந்தப் பிராந்தியத்திலும், நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகள் மீதும் ஒரு கண் வைத்துள்ளோம், தேவைப்பட்டால் அரசு ‘பொருத்தமான’ நடவடிக்கைகளை எடுக்கும்,” என ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
அதேவேளையில், வங்கதேசத்துடன் நட்புறவைத் தொடர வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஜனநாயகமான, முற்போக்கான அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் வங்கதேச மக்கள் மேலும் வளமடைவதை உறுதி செய்யும் வகையில் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் ஜெய்ஸ்வால்.
இந்திய- வங்கதேச எல்லையில் இந்தியா கம்பிகள் கொண்டு வேலி அமைத்து வருகிறது. இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இந்தப் பணி நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
“எல்லையில் வேலி அமைப்பது குறித்து நமக்கும் வங்கதேசத்துக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன. எல்லையில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க அங்கு வேலி அமைப்பது முக்கியம்.”
” ஒப்பந்தங்களை நேர்மறையான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடு செயல்படுத்த வங்கதேசம் எங்களோடு இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம். அதன் மூலம் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் கடத்தப்படுவது போன்ற எல்லையில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டு, குற்றங்களற்ற எல்லையை உருவாக்கும் எங்கள் எண்ணத்தைச் சாத்தியப்படுத்தலாம்” என்று விளக்கமளித்தார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் மற்றும் பிற அதிகாரிகள் வங்கதேசத்துக்கு சென்றது குறித்து நிபுணர்கள் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தோ- பசிபிக் விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வாளரான பேராசியர் டெரெக் ஜேல் கிராஸ்மேன், இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்தார்.
“வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே உறவுகள் மோசமடைந்து வரும் சூழலில் இது நடந்துள்ளது. உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் தலைவர் டாக்காவுக்கு சென்றிருப்பது பல பத்தாண்டுகளில் இதுவே முதல்முறை.”
அதேநேரம், எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் செய்தி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல்.
“அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட ஐஎஸ்ஐ அமைப்புடைய தலைவரின் பயணம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு செய்தி. வங்கதேசத்தில் இருக்கிற இடைக்கால அரசு நமக்கு மேலும் தொல்லைகளை உருவாக்குகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதை முகமது யூனுஸ் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் எழுதியுள்ளார்.
“வங்கதேசத்தின் இடைக்கால அரசு விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவதற்கு முன்பாக இந்தியா வங்கதேசத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியா வங்கதேசம் இடையே இறுக்கம் அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அதன் பின்னர் ஷேக் ஹசீனா பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அப்போதிருந்து இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவுகள் கணிசமாக மோசமடைந்துள்ளன.
கடந்த சில மாதங்களில், இரு நாடுகளின் அரசுகளும் ஒருவருக்கொருவர் ‘நட்புடன்’ நடந்து கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.
உண்மையில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருந்தபோதெல்லாம், பாகிஸ்தான் உடனான வங்கதேசத்தின் உறவுகள் இறுக்கமாகவே இருந்துள்ளன.
அதேநேரம், கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி வங்கதேசத்தில் அதிகாரத்தில் இருக்கும்போது பாகிஸ்தானுடன் உறவுகள் சுமூகமாக இருந்திருக்கின்றன.
இருதரப்பு உறவுகள் எப்படி மேம்படுத்தப்படலாம்?
இந்தியா-வங்கதேச உறவுகள் தொடர்பான நிபுணர்கள் அரசியல், அரசாங்க விவகாரங்களைக் கடந்து, பொருளாதார மற்றும் வணிக ஒத்துழைப்பே இந்தியா, வங்கதேசத்தை மேலும் நெருக்கமாக்கும் என்கின்றனர்.
டெல்லியை சேர்ந்த சிந்தனைக்குழுவான ஆர்.ஐ.எஸ்-இல் பணியாற்றும் பொருளாதார நிபுணர் பிரபிர் டே வங்கதேசத்துடனான வர்த்தக உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார்
“இருபது கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேச சந்தையை இந்தியா விட்டுவிடாது, அவ்வாறு விட்டுவிடுவது சரியான முடிவல்ல,” என பிபிசி பங்களாவிடம் டாக்டர் டே தெரிவித்தார்.
“அதேபோல், தினசரி அத்தியாவசிய தேவைகள் மற்றும் கனரக உபகரணங்களுக்கு இந்தியாவைவிட சிறந்த ஆதாரத்தை வங்கதேசத்தால் கண்டுபிடிக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.
இந்தப் பொருளாதார நிதர்சனம் இரு நாடுகளையும் நெருக்கமாக வைத்திருக்கும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு