குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? ஓர் அலசல்
- எழுதியவர், By Luis Barrucho
- பதவி, BBC World Service
டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற முதல் நாளில், குடிபெயர்ந்தோரின் வருகையை “படையெடுப்பு” என்று குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவித்த டிரம்ப், அப்பகுதியைப் “பாதுகாக்க” ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பிறந்த எவரும் இயல்பாக அமெரிக்க குடியுரிமை பெற உதவும், “பிறப்பால் கிடைக்கும் குடியுரிமையை” முடிவுக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆவணமற்று குடியேறும் மக்களுக்கு எதிராக, பெருமளவிலான நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் அதிபர் டிரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உலகளவில் அதிகப்படியான குடியேறிய மக்கள் உள்ள அமெரிக்காவில், குடியேறிய மக்கள் வெளியேற்றப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்? குடியேறிகளே இல்லாத அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பதை விவரிக்கின்றது இக்கட்டுரை.
மக்கள் தொகை
குடிபெயரும் மக்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவின் மக்கள்தொகை குறையத் தொடங்கும்.
அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 47.8 மில்லியனை எட்டியது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 14.3 சதவீதம் ஆகும். இந்தப் பட்டியலில், மெக்சிகோ 10.6 மில்லியன் மக்கள் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2.8 மில்லியனாகவும், சீனா 2.5 மில்லியனாகவும் உள்ளது.
ஒருபுறம், குடிபெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தாலும், பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை குறைந்து வருகிறது.
1930 களில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு, 2010 மற்றும் 2020க்கு இடையில் அமெரிக்காவின் மக்கள் தொகை குறைந்தது. பொருளாதார மந்த நிலையின் போது, பிறப்பு விகிதம் எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகக் கூறுவதானால், வயதானவர்களின் மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற பல நாடுகள் எதிர்கொள்ளும் அதே சவால்களை அமெரிக்காவும் எதிர்கொள்கிறது.
அதாவது, வயதான மக்கள் மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் போன்ற சவால்கள் அமெரிக்காவின் முன்னுள்ளது குறிப்படத்தக்கது.
அமெரிக்க அரசாங்கத்தின் கணிப்புகளின் படி, 2040-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அமெரிக்கா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரிக்கும் என அறியப்படுகின்றது.
இதன் விளைவாக, கிராமப்புறப் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய குடியேற்றத்தை அதிகரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று, சில பொருளாதார நிபுணர்கள் மற்றும் குடியேற்றத்திற்கு ஆதரவாக உள்ள குழுக்கள் வாதிடுகின்றனர்.
பொருளாதார தாக்கம்
குடியேறிகள் இல்லாவிட்டால், அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் தரேக் ஹாசன் தெரிவித்தார்.
அதுகுறித்து விளக்கிய அவர், “குடியேறியவர்கள் அனைவரும் அகற்றப்பட்டால், ஒரு நபரின் சராசரி வருமானம் 5 முதல் 10 சதவீதம் வரை குறையும். அதைத் தொடர்ந்து, தனி நபர் வளமும் குறையும்.
அது மட்டுமின்றி, உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவதால், நாட்டுடைய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவு (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மிகவும் குறைவாக இருக்கும்” என்று குறிப்பிடுகிறார்.
குடியேற்றம் “புதுமையை அதிகரிக்கிறது, அதனால் ஒரு துறையில் மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த திறனும் மேம்படுகிறது” என்றும் ஹாசன் கூறுகிறார்.
குடியேறிகள் பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் வயதுடையவர்களாக உள்ளனர். அமெரிக்க மக்கள்தொகையில், குடியேறியவர்களின் மக்கள்தொகை 14 சதவீதமாக உள்ளது.
31 மில்லியன் பணியாளர்கள், அதாவது 19 சதவீத மக்கள் குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, பூர்வீக குடிமக்களை விட குடியேறிய மக்கள் அதிகமான தொழிற்துறைகளில் ஈடுபடுவதால், அவர்களின் பங்கேற்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று அரசு நிறுவனமான தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசுடைய பட்ஜெட் அலுவலக கணிப்புகளின் படி, 2022 மற்றும் 2034 க்கு இடையில் அமெரிக்காவில் குடிபெயரும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களில் 91 சதவீத மக்கள் 55 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது வயதுவந்த ஒட்டுமொத்த மக்களில் 62 சதவீத மக்கள் மட்டுமே 55 வயதுக்கு குறைவாக இருப்பார்கள்.
குறிப்பாக, விவசாயம் போன்ற பொருளாதாரத்தில் முக்கியமான சில துறைகள், குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.
அமெரிக்கத் தொழிலாளர் துறையின் தேசிய விவசாயத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பின்படி, விவசாயத்தில் ஈடுபடும் 70 சதவீத தொழிலாளர்கள் குடியேறிகள் என அறியப்படுகின்றது. அவர்களில் பலர் ஆவணமற்றவர்கள்.
“குடியேறிய தொழிலாளர்கள் இல்லாவிட்டால், பல பண்ணை உரிமையாளர்கள் போதுமான தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள் என்று அமெரிக்க குடியேற்ற கவுன்சிலின் (AIC) ஆராய்ச்சி இயக்குநர் நான் வூ விளக்குகிறார். இதனால் பயிர்களை வளர்ப்பதிலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை அறுவடை செய்வதிலும், குறிப்பாக பருவ காலங்களில் நுகர்வோர் விற்பனைக்கு பங்களிப்பதிலும் பாதிப்பு ஏற்படலாம் ” என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக இருக்கும் குடியேறிகளின் வருகையால் உள்ளூர் மக்களுக்கான ஊதியம் குறைகிறது என்பது குடியேற்றத்தை விமர்சிப்பவர்களால் பொதுவாக முன்வைக்கப்படும் ஒரு வாதம் ஆகும்.
2014 இல் ஆண்டு டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், குடியேற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறித்த 27 ஆய்வுகளை மதிப்பாய்வு செய்தது. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்களின் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை, குடியேற்றம் ஏற்படுத்தாது என்று அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
வரி
வரியின் மீதான தாக்கம் என்ன?
ஏஐசியின் பகுப்பாய்வின்படி, குடிபெயர்ந்த குடும்பங்கள் 2022-ஆம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட ஒட்டுமொத்த வரியில் ஆறில் ஒரு பங்கை அளித்துள்ளன. அதாவது, ஒட்டுமொத்த வரியில் குடிபெயர்ந்த குடும்பங்கள் கிட்டத்தட்ட 580 பில்லியன் டாலர் அளவுக்கு பங்களித்துள்ளன.
சட்டப்பூர்வமாக குடியேறிய மக்கள் மட்டும் வரி செலுத்துவதில்லை என்று ஏஐசி அமைப்பைச் சேர்ந்த வூ குறிப்பிடுகிறார்.
பியூ ஆராய்ச்சி மைய சிந்தனைக் குழுவின் பகுப்பாய்வின் படி, தோராயமாக 11 மில்லியன் பேர் ஆவணமற்று குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர்.
ஒட்டுமொத்த குடிபெயர்ந்த மக்கள் தொகையில் சுமார் 23 சதவீதமாக அவர்களின் எண்ணிக்கை உள்ளது.
மெக்ஸிகோவில் இருந்து சுமார் நான்கு மில்லியன் மக்கள் குடிபெயர்ந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், 2022 ஆம் ஆண்டில் பெடரல், மாநில மற்றும் உள்ளூர் வரிகளில் ஆவணமற்று குடியேறிய மக்கள் கிட்டத்தட்ட 100பில்லியன் டாலர் வரி செலுத்தியுள்ளனர் என அறியப்படுகின்றது.
குடியேற்றத்தின் பொருளாதார தாக்கம் தேசிய அளவில் சாதகமாக இருந்தாலும், சில மாநிலங்களில், குறிப்பாக குறுகிய காலத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பொருளாதாரக் கொள்கை நிறுவனத்தின், குடியேற்ற சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி இயக்குனராக பணிபுரியும் டேனியல் கோஸ்டா கூறுகிறார்.
ஒரு சமீபத்திய ஆய்வில், அவரும் அவரது குழுவினரும் குறைந்த ஊதியம் பெறும் குடிபெயரும் மக்கள் அதிக அளவில் வருவதை எடுத்துக்காட்டுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் “குறுகிய காலத்தில் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் பலன்களுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்”என்று அந்த குடிபெயரும் மக்கள் குறித்து அந்த ஆய்வில் விவரிக்கின்றார் டேனியல் கோஸ்டா.
அந்த காரணத்திற்காக, கூட்டாட்சியில் இருந்து மாநில அளவிலான நிதியை அதிக அளவில் மறுபகிர்வு செய்ய வேண்டும் என்று அவரும் அவரது குழுவும் வாதிடுகின்றனர். அதனால் அதிக அளவு மக்கள் குடியேற்றம் உள்ள பகுதிகளில் எந்த சவால்கள் எழுந்தாலும் அதற்கு பதிலளிக்க அதிக பணம் கொடுக்க பரிந்துரைக்கிறார்கள்.
அமெரிக்காவில் பிறந்தவர்களின் மக்கள் தொகை பெருகும் போது என்ன நிகழுமோ அதேபோன்று, குடிபெயர்ந்தவர்களிடமிருந்து சமூகங்கள் மீது எழும் அழுத்தமும் இருக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னணி குடியேற்ற நிபுணரும் பொருளாதார நிபுணருமான பேராசிரியர் ஜியோவானி பெரி குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி, “போதுமான புதிய வீடுகள் கட்டப்படவில்லை என்றால், குடியேறிய மக்களுக்கு, சேவைகள் மற்றும் வீடுகள் கிடைப்பது கடினமாகலாம் என்று அவர் கூறுகிறார். இந்த பிரச்னைகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை குறை கூறுவதும் எளிதாகிவிடும் என்று சுட்டிக்காட்டுகின்றார்”.
புதுமை மற்றும் தொழில் துறை
குடிபெயர்ந்தவர்களில் கணிசமான பகுதியினர் அல்லது அவர்களது குழந்தைகள் முன்னணி தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களில் 45 சதவீத நிறுவனங்கள், குடியேறிகள் அல்லது அவர்களது குழந்தைகளால் தொடங்கப்பட்டவை என பார்ச்சூன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அமெரிக்க தொடக்க நிலை நிறுவனங்களில், 55 சதவீதத்திற்கு மேல் குடியேறிகளால் தொடங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் குடிபெயர்ந்தோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆரம்பத்தில் பலர் சர்வதேச மாணவர்களாக அமெரிக்காவிற்கு வந்தனர்.
2022-2023 கல்வியாண்டில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 40 பில்லியன் டாலர் பங்களித்துள்ளனர் என்று சர்வதேச கல்வியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கருத்து
அமெரிக்கப் பொருளாதாரத்தில் குடிபெயர்ந்த மக்களின் பங்கு ஒருபுறம் இருந்தபோதிலும், 2024-ஆம் ஆண்டு ஜூலை நடைபெற்ற காலாப் கருத்துக் கணிப்பில் 55 சதவீத அமெரிக்கர்கள் குடியேற்றத்தை மட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.
குறிப்பாக மெக்சிகோ எல்லையில் சட்ட விரோதமாக நடக்கும் இடம்பெயர்வு மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்து பரந்தளவில் உள்ளது.
சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் “எல்லையில் குழப்பம்” என்று குடியேற்றத்தை அடிக்கடி சித்தரிப்பதாக பேராசிரியர் பெரி சுட்டிக்காட்டுகிறார். இது சட்டவிரோத நுழைவு கதைகளை வலியுறுத்துவதால், குடியேற்றம் ஏற்படுத்தும் பரந்த தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என்று விளக்குகிறார்.
“சட்ட விரோத குடியேற்றம் பற்றி குறிப்பிடுகையில், “வெள்ளம்” ஏற்பட்டதாக விவரிக்கப்படுகிறது. அதனை மக்கள் அடிக்கடி கேள்விப்படுகிறார்கள். இப்படியான விளக்கங்களால், அதிகப்படியான அளவில் குடியேற்றம் நிகழ்கிறது என்றும் அது தீங்கானது என்றும் மக்கள் நினைக்கிறார்கள். பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை சரிவை நிவர்த்தி செய்வதில் குடிபெயர்ந்தோர் வகிக்கும் முக்கிய பங்கு கவனிக்கப்படுவதில்லை” என்றும் அவர் விளக்குகின்றார்.
அதைத் தொடர்ந்து,”குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளாக, குடியேற்றம் அதிகமாக உள்ளது. இதனால் புதிதாக குடியேறுபவர்களை ஒருங்கிணைக்கும் சமூகத் திறன் குறையலாம்” என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தரேக் ஹாசன் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, பொருளாதார, சமூக மற்றும் கலாசாரக் கட்டமைப்புகளில், குடியேற்றம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், மக்கள் வசதியாக இல்லாத அம்சங்கள் இருக்கலாம்.”என்றும் இதன் கோணங்களை விவரிக்கின்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு