அண்ணா நகர் போக்சோ வழக்கு: ’15 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை அவள், இப்படியொரு நிலையா?’ – கலங்கும் தாய்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இதில் இடம் பெறும் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆடியோ வெளியானது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை மாற்றி அமைத்து வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடியோ விவகாரத்தில், காவல் இணை ஆணையர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறுகிறார்.
இந்த வழக்கில், போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வந்து விசாரிப்பதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறுகிறார் சிறுமியின் தாய்.
இவ்வழக்கில் என்ன நடக்கிறது? சிறுமியின் தாய் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
சென்னை அண்ணா நகரில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார்.
சதீஷ் என்ற நபர் தான் இதற்குக் காரணம் என புகார் மனுவில் சிறுமியின் தாய் குற்றம் சுமத்தியிருந்தார். சதீஷ் குடிநீர் கேன்களை விநியோகம் செய்யும் பணியை செய்து வந்தார்.
“சதீஷுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. அதனால் அவர் மீது தொடக்கத்தில் மகளிர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை” என பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார் சிறுமியின் தாய்.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது, அண்ணா நகர் மகளிர் காவல்நிலையத்தில் வைத்து சிறுமியின் பெற்றோர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தங்களை பெண் போலீஸார் தாக்கியது தொடர்பாக சிறுமியின் தாய் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி பேசும் ஆடியோவும் வெளியானது.
இதையடுத்து, இவ்விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய துவங்கியது. குற்றம் சுமத்தப்பட்ட சதீஷை போக்சோ பிரிவுகளில் போலீஸ் கைது செய்தது.
சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
கடந்த செப்டம்பரில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் ஆடியோ வெளியானது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறுமியின் வாக்குமூலத்தை தனது மொபைல் போனில் ஆய்வாளர் ராஜி பதிவு செய்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், போலீஸார் மீது சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதால் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது. அதேநேரம், மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் சென்னை பெருநகர் காவல் இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர், ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் வாரம்தோறும் வழக்கு தொடர்பான விவரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன?
கடந்த 21-ஆம் தேதி, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், “வழக்கில் கைதாகியுள்ள இன்ஸ்பெக்டர் ராஜி, அதிமுக பிரமுகர் சுதாகர் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது வரைவு குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது” எனக் கூறினார்.
சிறுமியின் பெற்றோரை தாக்கியதற்காக இன்ஸ்பெக்டர் ராஜியும், சதீஷிக்கு உதவியதற்காக சுதாகரும் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் ராஜி மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு மாநகர காவல் ஆணையரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ராஜ் திலக் தெரிவித்தார்.
சிறுமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிறுமி அளித்த வாக்குமூலம் பொதுவெளியில் வெளியானது குறித்து எந்த விசாரணையும் நடக்கவில்லை. அரசிடம் இருந்து போதிய இழப்பீடும் கிடைக்கவில்லை” எனக் கூறினார்.
இதையடுத்து, “சிறுமியின் வாக்குமூலம் வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்ட ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இழப்பீடு கேட்டு சிறுமியின் தாய் தனியாக மனுத் தாக்கல் செய்யுமாறு கூறினர்.
ஆடியோ விவகாரம் – புதிய குழு அமைப்பு
இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த சரோஜ்குமார் தாக்கூர், வேறு பணிக்கு மாற்றலாகி சென்றுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, வெள்ளி அன்று புதிய குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஆடியோ வெளியான புகாரை சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் பக்கேர்லா செபாஸ் கல்யாண் விசாரிக்க உள்ளதாகக் கூறும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஒருவர், “அவருக்கு உதவியாக சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர்கள் சாந்திதேவி, பிரவீன்குமார் ஆகியோர் செயல்பட உள்ளனர்” என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழுவின் நோக்கம் என்பது போக்சோ வழக்கை மட்டும் விசாரிப்பது தான். அந்தவகையில் அவர்களின் பணி முடிந்துவிட்டது.
சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய சரோஜ் தாக்கூர் ஐ.பி.எஸ், வேறு பணிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார். மற்ற இரண்டு பெண் துணை ஆணையர்களும் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வருகின்றனர். எனவே, புதிதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
சிறுமியின் தாய் சொல்வது என்ன?
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை, நீதிமன்றத்தின் கண்காணிப்பு என வழக்கின் போக்கு நல்லமுறையில் சென்று கொண்டிருந்தாலும் தான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறுகிறார் சிறுமியின் தாய்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “என் குழந்தையைப் போல வேறு யாருக்கும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதால் தான் அந்த நபர் மீது புகார் கொடுத்தேன். ஏற்கெனவே குடியிருந்த வீட்டில் வசிக்க முடியாததால் வேறு வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்துவிட்டோம்.
தற்போது அதிகாரிகளின் விசாரணை நேர்மையாக நடந்து வருகிறது. ஆனால், அவர்கள் விசாரணைக்காக வீட்டுக்கு வந்து செல்வதால், அருகில் வசிப்போர் எங்களைப் பார்க்கும் பார்வை மாறிவிட்டது” எனக் கூறுகிறார்.
போலீஸ் விசாரணையால் தற்போது வசிக்கும் வீட்டைக் காலி செய்துவிட சொல்வார்களோ என தான் அச்சப்படுவதாகக் கூறிய சிறுமியின் தாய், “இந்த சம்பவத்தால் என் மகளின் படிப்பு தடைபட்டுவிட்டது. இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். அவளும் பள்ளிக்குப் போவதில்லை” என்றார்.
தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி விசாரணையின்போது என் மகள் வெளிப்படையாக கூறிவிட்டதால், பள்ளிக்கு போகும்போது அவளுக்கு எதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் வெளியில் அனுப்பாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“அரசிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வந்தது. ஆனால், இந்தப் பணம் எனக்குப் பெரிதல்ல. நானும் என் கணவரும் காவல்நிலையத்தில் அடி வாங்கினோம். புகார் கொடுத்த நாளில் இருந்து நிறைய அவமானங்களை எதிர்கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுவிடலாமா என யோசித்து வருவதாகக் கூறிய அவர், “திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தையே இல்லை. அதன்பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அவளுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதை இன்றளவும் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்றபடியே கண்கலங்கினார்.
“தனக்கு நேர்ந்த துயரத்தில் இருந்து மனரீதியாக இயல்பு நிலைக்கு என் மகள் திரும்பிவிட்டாள். ஆனால், அருகில் உள்ளவர்கள் அதை நினைவூட்டிப் பேசுவதுதான் வேதனையைக் கொடுக்கிறது” எனக் கூறுகிறார் சிறுமியின் தாய்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.