எய்ட்ஸ், காச நோய்: உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி ஹிந்தி, பெங்களூரு

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி அன்று பதவியேற்றார். அதன் பிறகு பல முக்கியமான முடிவைகளையும், உத்தரவுகளையும் வெளியிட்டார். இதில் அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் என்ற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், உலக சுகாதார நிறுவனம் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது, அந்த அமைப்பு வழங்கி வந்த தரமான பணிகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 1948 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அதன் சேவைகளால் மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறது.

இத்தகைய முடிவால் பொது சுகாதாரத்தில் காச நோய், எய்ட்ஸ், மற்றும் இதர நோய் தொற்றுகளை கண்காணிக்கவும், பெருந்தொற்றுக்கு தயார் நிலையில் இந்தியா தன்னை வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சுகாதார துறையில் நிபுணர்களாக உள்ள மருத்துவர் ஶ்ரீநாத் ரெட்டி உள்ளிட்ட பலரும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சீனாவுக்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் என்று கூறுகின்றனர். ரெட்டி பொது சுகாதார நிறுவனத்தின் (Public Health Foundation) தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. 2022-23 காலகட்டங்களில் அமெரிக்கா இந்த அமைப்பின் பணிகளுக்காக 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது. தற்போது நிலவும் சூழலை பயன்படுத்தி சீனா இங்கே தன்னுடைய பங்களிப்பை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆனால் சீனாவின் பங்களிப்பு குறித்து சந்தேகிப்பதாக தெரிவிக்கிறார் மருத்துவர் எஸ்.எஸ். லால். அவர் சர்வதேச சுகாதார அமைப்பின் ஆசியா – பசுபிக் பிராந்தியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.

“அமெரிக்காவைப் போன்று சீனா தகவல்களை பகிராது,” என்ற கவலையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர் ராமன் கங்காகேத்கர், “நிதி தொடர்பாக பெரிய தாக்கம் இந்த முடிவால் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை சரி செய்ய தனி நபர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்,” என்று பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

“அமெரிக்காவையும் பாதிக்கும்”

மருத்துவர்கள் ரெட்டியும், லாலும் இந்த முடிவால் அமெரிக்காவும் பாதிப்பை சந்திக்கும் என்ற ஒருமித்த கருத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மருத்துவர் ரெட்டி, “ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும், ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் உலகில் இத்தகைய முடிவுகள் மற்ற நாடுகளை மட்டுமின்றி அமெரிக்காவையும் பாதிக்கும்,” என்று தெரிவிக்கிறார்.

“உலக சுகாதார அமைப்பு தன்னுடைய மிகப்பெரிய பங்களிப்பாளரை இழக்கிறது. மற்ற நாடுகள் தற்போது தங்களின் பங்களிப்பையும், அறிவியல் கூட்டமைப்பையும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன,” என்று தெரிவித்தார் அவர்.

மருத்துவர் லால் பேசும் போது, “அமெரிக்காவும் இதனால் பாதிக்கப்படும். ஏனென்றால் அமெரிக்காவும் இத்தனை காலமாக இந்த அமைப்பால் பயன் பெற்றது. நோய்த்தொற்றின் மூலத்தை கண்டறிந்து அதன் பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பின் உதவியை பெற்றது அமெரிக்கா. காச நோயாகட்டும் எபோலாவாகட்டும், வைரஸ்களும் பாக்டீரியாக்களும் எந்த நாட்டில் நுழையும் என்பது அவற்றிற்கு தெரியாது,” என்று குறிப்பிட்டார்.

“சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சுய சார்பு போன்றவை புதிய இலக்கு மற்றும் புதிய செயலாக்கத்தை நோக்கி நகரும்,” என்று ரெட்டி கூறுகிறார்.

அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவு குறித்து வருத்தம் தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, “ஒரு நோய் தொற்றின் ஆரம்பத்தை கண்டறிந்து, தங்களின் அமைப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. ஒரு வலிமையான சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தி, சுகாதார அவசர நிலை ஏற்படுவதை தடுத்தும், பாதுகாப்பு வழங்கியும் வருகிறது,” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஒரு நோய் தொற்று ஏற்படும் போது மற்றவர்கள் செல்ல இயலாத இடத்திற்கும் உலக சுகாதார அமைப்பு செல்கிறது என்றும் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா அதிக அளவில் நிதி வழங்கிய நாடாக திகழ்கிறது

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் பணிகள்

கொரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளை உலக சுகாதார நிறுவனம் சரியாக நிர்வகிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் தீவிர அரசியல் ஆதிக்கம் செலுத்தின என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்காவிடம் இருந்து அதிக நிதியைப் பெற்றதாகவும் இது ஒரு அநீதி என்றும் குறிப்பிட்டது அமெரிக்கா. சீனா போன்ற பெரிய நாடுகளைக் காட்டிலும் அதிகமாக அமெரிக்கா நிதி வழங்கியுள்ளது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின் படி அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பில் இருந்து 12 மாதங்களில் விலகிவிடும். அதன் பணிகளுக்கு நிதி வழங்குவதையும் அமெரிக்கா நிறுத்தும்.

1999-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு இந்தியாவுக்குள் வந்தது. அந்த ஆண்டு தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30% மக்களுக்கு மட்டுமே இந்தியாவால் சிகிச்சை வழங்க முடிந்தது என்பது அந்த ஆண்டில் தான் கண்டறியப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பை தொடர்ந்து, சில காலத்தில் இந்தியா அந்த திட்டத்திற்கு முழுமையான பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

உலக சுகாதார அமைப்பு, 194 நாடுகளிலும் நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் முடிவை அடிப்படையாக கொண்டு நெறிமுறைகளை வழங்குகிறது. இது உலகம் முழுவதும் இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

“காசநோயோ, எச்.ஐ.வியோ, சர்வதேச அளவில் இருக்கும் கொள்கைகள் தான் கேரளாவிலும், தமிழ் நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் நிதியைக் காட்டிலும் தொழில் நுட்ப ரீதியாக இந்தியா அதிக சவால்களை சந்திக்கலாம்,” என்று மருத்துவர் லால் தெரிவித்தார்.

“அரசு அமைப்பு எப்போதுமே உதவாது. அதனால் தான் இங்கு அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை பார்க்க ஒரு வெளி அமைப்பு தேவைப்படுகிறது,” என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கும் போது (கோப்பு புகைப்படம்)

“பாதிப்பை துல்லியமாக கணக்கிட இயலாது”

உலக அளவில் செயல்படுவதால் உலக சுகாதார அமைப்பு பெறும் நன்மைகளால் உலக நாடுகளும் பயன் அடைந்தன.

நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா பாதிப்பை சந்திக்கும். ஆனால் மற்ற ஏழை நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் என்று கூறுகிறார் மருத்துவர் லால்.

“தற்போது இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய இரண்டும் அமெரிக்காவின் இந்த முடிவைத் தொடர்ந்து பெரிய அறிவிப்பை வெளியிடுகின்றனவா என்பதை பார்க்க வேண்டும். இது சீனாவுக்கு ஒரு நல்வாய்ப்பாக உள்ளது,” என்று மருத்துவர் ரெட்டி தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா பாதிப்பை சந்திக்கும். ஆனால் மற்ற ஏழை நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும்

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகியதால் இந்தியாவுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பை இப்போது துல்லியமாக கூற இயலாது. நிதி தொடர்பாக இறுதியாக வெளியிடப்படும் அறிவிப்பின் போது தான் இந்தியாவுக்கு வழங்க இருக்கும் நிதி குறித்து தெரிய வரும். அதன் மூலம் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள இயலும்.

இது தொடர்பாக சில கேள்விகளை கேட்டு உலக சுகாதார அமைப்பை அணுகியது பிபிசி ஹிந்தி. உலக சுகாதார அமைப்பிடம் இருந்து பதில் வரும் போது இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.