“பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, ஆனால்…” – சீமான் காட்டம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமுதாயத்துக்கு விடிவு பிறக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாதக-விலிருந்து விலகி, திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் நாங்கள்தான் வளர்க்க வேண்டியிருக்கிறது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ரத்த உறவு என்று யாரும் கிடையாது. லட்சிய உறவு மட்டுமே உண்டு. நாங்களும் பிரபாகரனுக்கு உறவுதான். அவரது உறவினர் என்று கூறும் கார்த்திக் மனோகர் விமர்சிப்பதற்கு எல்லாம் நான் பதில் அளிக்க வேண்டியதில்லை. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் பதில் சொல்வார்கள்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது, மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. சுரங்கத்துக்கு ஏலம் விடும்போது திமுக மவுனமாக இருந்தது ஏன்? பெரியார் பேசியது என்ன என்று ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேச வேண்டும். பெரியாரைப் பற்றிப் பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். மாறாக காந்தி படத்தை வைத்து வாக்கு சேகரிக்க கூடாது.
பெரியாரை திராவிடக் குறியீடாக நிறுத்துகிறார்கள். நான் பிரபாகரனை தமிழ் தேசிய எழுச்சியின் அடையாளமாகப் பார்க்கிறேன். புலிகள் தமிழ் ஈழத்தைதான் கேட்டார்கள் திராவிட ஈழத்தைக் கேட்கவில்லை. பெரியார் மட்டும்தான் போராடினார் என்பது சரியல்ல, பெரியாரும் போராடினார் என்பதுதான் சரி.
பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பதுதான் எனது கோட்பாடு. அதேபோல இந்தி ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, தமிழ் வாழ்க என்பதுதான் என் கோட்பாடு. இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால்தான், தமிழ் சமுதாயத்துக்கு விடிவு பிறக்கும். இவர் அவர் கூறினார்.