தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாங்குளம் மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஆடுகளை வளர்த்து வருகின்றார். அவரது ஆடொன்றினை அயல் வீட்டாரின் வளர்ப்பு நாய் கடித்ததில் , ஆடு காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் , இன்றைய தினம் இரு தரப்பினரும் இணக்க சபைக்கு சென்ற நிலையில் அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாய் வளர்த்த குடும்பத்தினர் வறுமை நிலையில் உள்ளதால் , உயிரிழந்த ஆட்டுக்கு நஷ்டஈடு கொடுக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.
ஆடு வளர்த்த பெண் , நஷ்டஈடு தர முடியவில்லை எனில் , அவர்களின் நாயை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர். அதற்கு நாய் வளர்த்த குடும்பத்தினர் , நாயை அவர்களுக்கு கொடுக்க சம்மதித்தனர். அதனை அடுத்து இரு தரப்பினரின் பிரச்சனை இணக்க சபையில் தீர்த்துக்கொண்டதாக கூறி சென்றனர்.
அந்நிலையில் , ஆட்டினை வாங்கி சென்ற பெண் , அந்த நாயை மரமொன்றில் தூக்கிலிட்டு படுகொலை செய்துள்ளார். நாயை தூக்கிட்டு படுகொலை செய்ததுடன் , அதனை புகைப்படமாக எடுத்து , நாயை வளர்த்த குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தமது நாயை வாங்கி சென்று தூக்கிட்டு படுகொலை செய்த சம்பவத்திற்கு, குறித்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வரும் நிலையில் , நாயை தூக்கிட்டு படுபயங்கரமாக படுகொலை செய்த பெண்ணிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
அதேவேளை , ஆட்டுக்கு பதிலாக நாயை வழங்கி வைத்த சம்பவம் தொடர்பில் இணக்க சபையினர் மீதும் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.