on Saturday, January 25, 2025
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், முதலாவது தொகுதி நாட்டை வந்தடையவுள்ளது
நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது
இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உப்பை தொழிற்றுறையினருக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.