இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்: சென்னை ஆடுகளம் யாருக்குச் சாதகம்? இரு அணிகளின் வியூகம் என்ன?

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய கேப்டன் சூர்யகுமாரும், இங்கிலாந்து கேப்டன் பட்லரும்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் வலிமையான இந்திய சுழற்பந்துவீச்சை எவ்வாறு இங்கிலாந்து பேட்டர்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் ஸ்வரஸ்யமே அடங்கியுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர்கள் இந்தியாவின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 132 ரன்களில் சுருண்டனர்.

அதிலும் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சை எவ்வாறு ஆடுவது என்பதே இங்கிலாந்து பேட்டர்களுக்கு குழப்பமாக இருந்தது. கண்களைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வுடன் வருணின் பந்துவீச்சை எதிர்கொண்டு விக்கெட்டை இழந்தனர்.

இந்தியா முன்னிலை

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த தொடரை சமன் செய்ய சென்னை ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

கொல்கத்தா ஆடுகளத்தைவிட சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், பேட்டர்களுக்கும் சொர்க்கபுரி. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட கருப்பு மண் ஆடுகளத்தில் வருண், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பிஸ்னாய் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடுவது சுலபலமல்ல.

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பேட்டிங்கில் சொதப்பிய இங்கிலாந்து

முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஜாஸ் பட்லர்(68) தவிர வேறு யாரும் நிலைத்து ஆடவில்லை. பில்சால்ட், பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டோன், பெத்தெல் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சேர்ந்து 53 ரன்கள்தான் சேர்த்தனர், இந்திய அணி வழங்கிய உதிரிகள் 11 ரன்களைச் சேர்த்தே 132 ரன்கள் எனும் கவுரவமான ஸ்கோரை இங்கிலாந்து எட்டியது.

இதன் மூலம் இங்கிலாந்து பேட்டர்கள் வலிமையான சுழற்பந்துவீச்சுக்கு எவ்வாறு திணறுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

“தேஜாவு”- நிலையில் இங்கிலாந்து

இந்திய அணியின் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து முதல் ஆட்டத்தில் 12 ஓவர்களில் 67 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை நினைவுபடுத்தியிருக்கும்.

பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா,அக்ஸர் படேல் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது இங்கிலாந்து தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேபோன்று கடந்த கொல்கத்தா ஆட்டத்தில் வருண், அக்ஸர், பிஸ்னோய் மூவரும் இங்கிலாந்து தோல்விக்கு காரணமாகினர்.

சென்னையில் நடைபெறும் ஆட்டம் என்பதால், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு இருக்கும். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி அமர வைக்கப்பட்டு, வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்படலாம். சுழற்பந்துவீச்சுக்கு கூடுதல் பலம் சேர்க்க அபிஷேக் சர்மாவும் பந்துவீச வைக்கப்படலாம்.

ஆனால் அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் லேசான பிடிப்பு இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் அவரின் உடற்தகுதி எவ்வாறு இருக்கும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும். ஒருவேளை அபிஷேக் சர்மா களமிறங்காவிட்டால் துருவ் ஜூரெலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்ஸனுடன் தொடக்க வீரராக நிதிஷ் ரெட்டி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆக்ரோஷம், ஆவேசம்

பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலம் தலைமையில் டெஸ்ட் போட்டியை கூடுதல் ஆக்ரோஷம், ஆவேசத்துடன் இங்கிலாந்து அணி அண்மையில் அணுகி மோசமான தோல்விகளை சந்தித்தது.

மெக்கலத்தின் ஆக்ரோஷமான அணுகுமுறை டி20 போட்டிக்கு சரியாக வரும் என்று நினைத்த நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், இங்கிலாந்தின் ஆக்ரோஷமான தாக்குதல் பேட்டிங் உத்தி, இன்னும் வலிமையாக மீண்டுவருதல் என்ற பாணியை மாற்ற வேண்டாம் என்று அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக கிரிக்இன்போ இணையதள செய்தி கூறுகிறது. ஆதலால், இங்கிலாந்து அணியின் அதிரடியான பேட்டிங் இந்த போட்டியிலும் இருக்கும்.

அன்று கேப்டன், இன்று பயிற்சியாளர்

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2018-ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டி நடந்தது. அந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 182 ரன்கள் எனும் இலக்கை இந்திய அணி கடைசிப்பந்தில் சேஸ் செய்தது.

அதற்கு முன்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டி20 போட்டி நடந்துள்ளது. ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பின் 2018-ஆம் ஆண்டிலும், 7 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் சர்வதேச டி20 போட்டிநடக்கிறது.

2012-ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில ஒரு ரன்னில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

அப்போது நியூசிலாந்து அணிக்கு பிரெண்டென் மெக்கலம்தான் கேப்டனாக இருந்து, 91 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அப்போது கேப்டனாக நியூசிலாந்துக்கு வெற்றி தேடித்தந்த மெக்கலம் இன்று பயிற்சியாளராக இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுப்பாரா என்பதை பார்க்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 வேகப்பந்துவீச்சாளர்ளை களமிறக்கி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கையை சுட்டுக்கொண்டார்

இரு அணிகளின் வியூகம் என்ன?

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்துக்கு தயாராவார்கள் எனத் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் 4 வேகப்பந்துவீச்சாளர்ளை களமிறக்கி இங்கிலாந்து கேப்டன் பட்லர் கையை சுட்டுக்கொண்டார்.

ஆதலால், இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இங்கிலாந்து அணி முக்கியத்துவம் அளிக்கும். ஜேக்கப் பெத்தெலுக்கு உடற்தகுதி பிரச்சினை இருப்பதால் அவருக்குப் பதிலாக ஜேமி ஸ்மித் முதல் போட்டியில் அறிமுகமாகலாம்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்திக்கும், வாஷிங்டன் சுந்தருக்கும் சொந்த மைதானம் என்பதால், இருவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

முகமது ஷமி இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டும் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை. ஷமி தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . அவரின் உடல்நிலையை பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்கல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஷமி முழுமையான உடல்தகுதியுடன் இருந்தால் இன்றைய ஆட்டத்தில் பார்க்கலாம்.

அதேபோல இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. ஒருவேளை உடற்தகுதியை அபிஷேக் பெறவில்லை என்றால் அவருக்குப் பதிலாக துருவ் ஜூரெல் களமிறங்கலாம். சஞ்சு சாம்ஸனுடன் தொடக்க வீரராக நிதிஷ் ரெட்டி களமிறக்கப்படலாம்.

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கணுக்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அபிஷேக் சர்மா நேற்று பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை

பேட்டிங்கில் சம பலம்

பேட்டிங்கைப் பொருத்தவரை இந்திய அணிக்கு எந்த வகையிலும் சளைக்காத வகையில் இங்கிலாந்து அணியிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்டர்கள் உள்ளனர்.

பில் சால்ட், டக்கெட், லிவிங்ஸ்டோன், பட்லர், ப்ரூக் என ஆட்டத்தை திருப்பக்கூடிய வலிமையான அதிரடி பேட்டர்கள். சுழற்பந்துவீச்சு எனும் ஆயுதம் இவர்களுக்கு சிம்ம சொப்னமாக இருப்பதால்தான் அஞ்சுகிறார்கள்.

ஒருவேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகிவிட்டால், இந்தியப் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்கள் வெளுத்துவிடுவார்கள். இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் அட்கின்சனுக்குப் பதிலாக பிரைடன் கார்ஸ், பெத்தெலுக்குப் பதிலாக ஜேமி ஸ்மித் சேர்க்கப்படலாம்.

இந்திய அணியில் கடந்த ஆட்டத்தில் ஒற்றை மனிதராக அபிஷேக் சர்மா ஆட்டத்தில் வெற்றியைத் தேடித்தந்தார். கேப்டன் ஸ்கை டக்அவுட்டில் வெளியேறியது அதிர்சியானது. டி20 ஆட்டங்களில் 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை திணறடிக்கும் சூர்யகுமார் இன்றைய ஆட்டத்தில் ஜொலிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி20 திலக் வர்மா, ஹர்திக் இருவருக்கும் பேட்டிங் செய்யவும், ரன் சேர்க்கவும் போதுமான வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சாம்ஸன் அதிரடியாகத் தொடங்கி, ஏமாற்றம் அளித்தார். இந்திய அணியிலும் 8வது வீரர் வரை பேட்டிங் செய்யும் திறனுடைய வீரர்கள் இருப்பது சாதகமான அம்சம்.

இந்தியா - இங்கிலாந்து, சென்னை சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திலக்வர்மா, ஹர்திக் இருவருக்கும் பேட்டிங் செய்யவும், ரன் சேர்க்கவும் போதுமான வாய்ப்புக் கிடைக்கவில்லை

ஆடுகளம் யாருக்குச் சாதகம்?

சேப்பாக்கம் மைதானத்தில் ட்ராப்-இன் நுட்பத்தில் கருப்பு வண்டல் மண்ணால் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் என்றாலே சுழற்பந்துவீச்சுக்கு சாதகம் என்கிறது சர்வதேச கிரிக்கெட் வரலாறு.

ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் நடந்த 9 போட்டிகளில் ஆடப்பட்ட 18 இன்னிங்ஸ்களில் 74 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர்கள் 25 விக்கெட்டுகள்தான் சாய்த்தனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பாகப் ஒத்துழைத்த அளவு பேட்டர்ளுக்கும் ஆடுகளம் ஒத்துழைத்தது. அதன்படி பார்த்தால் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 175 ரன்கள்வரை சேர்க்கலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று எந்த ஆடுகளத்தை பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொருத்தே ஆட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.

சென்னையில் இரவு வேளையில் நீடிக்கும் பனியின் தாக்கம் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும். இது சேஸிங் செய்யும் அணிக்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றக் கூடும். ஆதலால் முதலில் பேட் செய்யும் அணி பெரிய ஸ்கோரை அடித்து டிபெண்ட் செய்ய முயலலாம்.

சென்னையில் நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வென்று இந்திய அணி டி20 தொடரில் முன்னிலை பெறுமா? அல்லது இங்கிலாந்து அணி வென்று தொடரை சமன் செய்யுமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். சென்னையில் நடக்கவுள்ள டி20 போட்டிக்காக போக்குவரத்து மாற்றம், ரசிகர்கள் பயணிக்க சிறப்பு ஏற்பாடுகள் போன்றவை செய்யப்பட்டுள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.