நடிகையிடம் அத்துமீறல்: பாலகிருஷ்ணா! கொஞ்சம் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள்!
- எழுதியவர், பிபிசி தெலுங்கு சேவை
- பதவி,
நடிகர் பாலகிருஷ்ணா தனது சக நட்சத்திரமான ஊர்வசி ராவ்டெலாவிடம் நடந்துகொண்ட விதத்தை பலரும் பார்த்திருப்பார்கள்.
“அண்மையில் ‘டாகு மகாராஜ்’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அங்கே ‘டபிடி டபிடி’ பாடலுக்கு ஊர்வசி ராவ்டெலாவுடன் இணைந்து பாலகிருஷ்ணா நடனமாடினார். அங்கே அவர் இறுதியில் ஒரு செயலைச் செய்தார். அதை இங்கே விளக்க நான் விரும்பவில்லை. அந்த காட்சியையும் உங்களுக்கு காட்ட நான் விரும்பவில்லை. அது ஆபாசமானது” என பெண்ணிய செயல்பாட்டாளர்கள் பலர் கோபத்தில் உள்ளனர்.
இதுபோன்ற ஆட்சேபகரமான நடவடிக்கைகள் பாலகிருஷ்ணாவுக்கு புதிதல்ல. தரக்குறைவான பேச்சுகள் மற்றும் பெண்களிடம் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் பலமுறை செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
“இது மானக்கேடானது. பொதுவெளியில் இதுபோன்ற செய்கைகள் பெண்ணின் கண்ணியத்தை குலைப்பவை. இது சட்டப்படி குற்றமுமாகும். அதுமட்டுமல்ல, இது முதல் முறை சம்பவம் அல்ல, ராதிக ஆப்தேவுக்கு பிறகு இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பழைய பிரபுத்துவ முறையின் ஆண்களின் ஆணவத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இது பெண்கள் குறித்து எவ்விதமான சமிக்ஞைகளை பெண்களை நோக்கி அனுப்புகிறது என்பது குறித்து திரைத்துறை சிந்திக்க வேண்டும்,” என்கிறார் பூமிகா பத்திரிகை மற்றும் பூமிகா கலெக்டிவ் அமைப்பின் செயல்பாட்டாளர் கொண்டவீட்டி சத்தியவதி.
இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணாவை தொடர்பு கொள்ள ‘பிபிசி தெலுங்கு’ பிரிவு முயற்சி பெற்கொண்டது. அவருடைய மக்கள் தொடர்பு குழுவை தொடர்பு கொள்ளவும் முயற்சி மேற்கொண்டது. இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை. அவர் பதில் சொன்னால், அதை இந்த செய்தியில் சேர்ப்போம்.
தெலுங்கு சினிமாவில் வேரூன்றி இருக்கும் தந்தைவழி சமுதாய மனப்பான்மை மற்றும் பணமும் அதிகாரமும் படைத்தவர்கள் பெண்களை சிறுமைப்படுத்துவதின் அடையாளமாக இருப்பதாக பாலகிருஷ்ணா மீது அடிக்கடி விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.
சில குடும்பங்களிலிருந்து வரும் கதாநாயகர்கள் என்ன செய்தாலும் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்ற போக்கு தெலுங்கு சினிமாவில் உள்ளது.
ஆதிக்க மனப்பான்மை
அவரது திரைப்படங்களில் ஒரு கண் சிமிட்டலில் ரயிலே நிற்பதைப் போல, நிஜ வாழ்விலும் பல விந்தையான சம்பவங்களை காண முடியும்.
அவரது வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் கூட, பொதுவெளியில் நடந்த சம்பவங்கள் பல உள்ளன.
அவர் ஒரு ரசிகரை அடித்தால், அடிபட்ட நபரே மைக் முன்னே வந்து, நமது கதாநாயகனால் அடிபடுவது நல்லது என சொல்வார்.
கதாநாயகி தள்ளப்பட்டால்…”அது அன்பால் தள்ளியது, அவருடன் எனக்கு நல்லுறவு உள்ளது. நான் அவரை மதிக்கிறேன்,’என்பார் சக நடிகரான அஞ்சலி.
பெண்கள் குறித்து மேடையில் பேசும் போது, தாங்கள் அரவணைக்கப்பட்டு முத்தமிடப்பட வேண்டும் என்று பகிரங்கமாக கூறுகிறார் அன்னா.
இது திரைப்படத் துறையில் புரையோடிப் போயிருக்கின்ற மேலாதிக்க போக்கை காட்டுகிறது. சில கதாநாயகிகள், பொது வெளியில் சிறுமைப்படுத்தப்பட்டாலும், தங்களுக்கு பிரச்னையில்லை என சொல்வதோ அல்லது அமைதியாக இருப்பதோ திரைத்துறையில் நிலவும் மேலாதிக்க மனப்பான்மையைத்தான் பிரதிபலிக்கிறது. வாய்ப்புகளை இழக்க நேரிடுமோ, டிரோல் செய்யப்படுவோம், சந்தேகம், அவமதிப்பு உள்ளிட்ட மேலும் பல அச்சங்கள் காரணம்!
திரைத்துறையில் உள்ள பெண்கள் சுரண்டப்படுவதும், அவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதும் புதிதல்ல. தங்களுக்கு நேர்வதை பெரும்பாலும் பெண்கள் ஏன் அமைதியாக சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மலையாள திரைத்துறையை ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை விளக்குகிறது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அது பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
இதற்கு பாலிவுட்டும் விலக்கல்ல. எல்லா இடங்களிலும் சக்தி வாய்ந்த ஆண் திரைத்துறை பிரபலங்களால் குறிப்பிட்ட அளவு பாகுபாடு காட்டப்படும் மக்கள் இருக்கிறார்கள். திரைத்துறையில் ஒரு பிடி கிடைத்துவிட்ட ஒரு சில கதாநாயகர்களின் ஆதிக்கம் மிகவும் கொச்சையான் முறையில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஹேமா கமிட்டியை போன்ற தெலுங்கு திரையுலகிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களின் அறிக்கைகள் என்ன ஆனதென்று தெரியவில்லை. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், பாலகிருஷ்ணா போன்றவர்கள் தங்கள் சக-நடிகர்களிடம் இவ்விதம் நடந்துகொண்டிருக்க முடியுமா? பெண்களுக்கு எதிரான சுரண்டல் மற்றும் பாகுபாட்டிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக திரும்பத் திரும்ப கூறும் தெலுங்கு திரைத்துறை, அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொல்லமுடியுமா? ‘நாம் நமது சிறந்ததை செய்ய வேண்டும், நாம் நமது சிறந்ததை தரக்கூடாது’ என பாலகிருஷ்ணா சொன்னபோது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
‘குழுவின் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவேண்டும்’
“இது திரையில் கண்டதைப் போல் இருக்கலாம், ஆனால் நிஜ வாழ்வில் இதுபோன்ற அநாகரிக நடவடிக்கைகள் பாலியல துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வருகின்றன. இது அவருக்குப் புதிதல்ல. தெலுங்கு திரையுலகில் சகஜமாகிவிட்ட இதுபோன்ற அநாகரிக செயல்பாடுகள், மொத்த பணியிடச் சூழலையே நச்சாக்குகின்றன. பெண்களை இதுபோல் நடத்துவது சரிதான் என மற்றவர்களையும் அது நினைக்க தூண்டுகிறது.” என்கிறார் பெண்ணிய செயல்பாட்டாளர் சுனிதா.
“பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான ‘விசாகபட்டினம்’ நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. மலையாள திரையுலகில் ஆண்களின் ஆதிக்கத்தையும் அங்குள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளிப்படுத்திவிட்டது. நடிகைகள் எவ்வாறெல்லாம் சுரண்டலுக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை அது விவரித்துள்ளது. அது பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. தெலங்கானா அரசும் ஒரு குழுவை அமைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குழுவின் அறிக்கையை தெலங்கானா அரசு இந்நேரத்திற்கு வெளியிட்டிருக்க வெண்டும். தெலுங் கு திரையுலகம் அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்,” என்றார் சுனிதா.
தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுவில் அவரும் ஒரு உறுப்பினர்.
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட கதாநாயகன் பாலகிருஷ்ணா. ஆந்திரா சட்டப்பேரவையில் அவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட. பலரும் பிரபலங்களை பின்பற்றுவதுடன் அவர்களது செயல்பாடுகளையும் அவ்விதமே செய்வதுண்டு.
பாலகிருஷ்ணாவுக்கு எதிரான விமர்சனங்கள் பிரபலங்களின் சமுதாய பொறுப்பு குறித்த விவாதத்தின் ஒரு பகுதிதான். பொழுதுபோக்குத் துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பெரிய பிரச்னையை இது தொட்டுச் செல்கிறது.
‘இது உங்கள் குடும்பத்தில் நடந்தால்’
மன்னிப்பு போன்ற ஏதோ ஒன்றை பாலகிருஷ்ணா சில நேரங்களில் சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர் அதை தட்டிக்கழித்து விடுவார்.
“அவர்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் யாராவது இந்த அநாகரிக செயலை செய்திருந்தால் அவர்கள் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். வேறு இடங்களிலிருந்து வந்து இங்கு திரைத்துறையில் பணிபுரியும் பல பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதுடன் அவர்களால் வெளியே சொல்ல முடியாத நிலை இருக்கலாம். சில சமயங்களில், அந்த நபருக்கு அவர்கள் வெளிப்படையாக மரியாதை காட்ட வேண்டிய சூழல்கள் ஏற்படலாம். வெறுக்கத்தக்க டிரோலிங் உள்பட் பல்வேறு சிரமங்கள் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த ஹேமா கமிட்டி அறிக்கையும் இந்த சூழ்நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. அப்படியே அவர்கள் பேசினாலும், அவர்களது தொழில்முறை வாய்ப்புகளை முடக்க செல்வாக்குள்ள குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். இந்த ஆணாதிக்க சூழலை மாற்ற வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்,” என்கிறார் பெண்ணிய செயல்பாட்டாளும் சமூக விமர்சகருமான சஜயா.
#மீடூ இயக்கம் ஹாலிவுட்டை அதிரச் செய்தது. ஹேமா கமிட்டி அறிக்கையும் சில விவாதங்களை தூண்டியது. ஆனால் அதன் பின்னர் எல்லம் பழையபடியே தொடர்கின்றன.
இந்த எல்லா முயற்சிகளும் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தை அசைக்கத் தவறிவிட்டன. கட்டற்ற ஆதிக்கத்தை செலுத்துவோரின் அநாகரிக செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு