- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி நிருபர்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் வசிக்கும் ரமேஷ் பாகேலுடைய தந்தையின் உடல் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
பூர்வீக கிராமம், வீடு மற்றும் நிலம் இருந்தும், ரமேஷ் பாகேலால் தனது தந்தை சுபாஷ் பாகேலின் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியவில்லை.
தான் ஒரு கிறிஸ்தவர் என்பதால், சொந்த கிராமமான சிந்த்வாரா கிராம மக்கள் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்கவில்லை என்று ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கிராமம் சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள தர்பா தாலுகாவில் உள்ளது.
இந்த விவகாரத்தில், கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் தற்போது வரை உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டுள்ளார் ரமேஷ்.
ஜனவரி 20ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்தது.
”ஒரு நபர் தனது தந்தையை அடக்கம் செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று அந்த நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, ஜனவரி 17ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு அந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”கிராமப் பஞ்சாயத்து, மாநில அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.
அதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் மீது உச்சநீதிமன்றமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
“சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படும் என்று கூறி, உயர்நீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை எடுத்தது குறித்து நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம்” என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் பதில் என்ன?
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பஸ்தர் காவல்துறை அதிகாரி ஷலப் சின்ஹா, “கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்துள்ளன. பல முறை, உள்ளூர் மக்கள் அடக்கம் செய்த பிறகு இறந்த உடலை வெளியே எடுக்க முயன்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பெரும்பாலான நேரங்களில் கிராமத்தில் உள்ளவர்கள் தங்களுக்குள் ஒத்துழைத்து செயல்படுகின்றனர். ஆனால், உள்ளூர் எதிர்ப்புக்குப் பிறகும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்யும்போது, புதைகுழியிலிருந்து சடலங்களை வெளியே எடுக்க எதிர் தரப்பு முயற்சி செய்வது பல நேரங்களில் நடந்துள்ளது. இதுதவிர, வன்முறைச் சூழல்களும் உருவாகியுள்ளன. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு இணக்கமான தீர்வைக் காண முயற்சிக்கிறோம்” என்றார்.
‘கிறிஸ்தவராக இருப்பது குற்றமா?’
பிபிசியிடம் பேசிய 42 வயதான ரமேஷ் பாகேல், ஜனவரி 7 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் தனது தந்தை இறந்ததாக கூறினார்.
”அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தது. தினமும் காலையிலேயே அப்பா எழுந்துவிடுவார். அன்றைய தினம் ஏழு மணி வரை அப்பா எழுந்திருக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அம்மா அவரை எழுப்பச் சென்றார். அப்போது தான் அவர் உயிரோடு இல்லை என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. நாங்கள் திகைத்து விட்டோம். பிறகு இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, கிராமத் தலைவரின் கணவரும், மேலும், இரு நபர்களும் திடீரென வீட்டுக்குள் நுழைந்தனர்” என்று அச்சம்பவத்தை விவரிக்கிறார்.
தழுதழுத்த குரலில் ரமேஷ் அச்சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
“பெரிய மலை இடிந்து விழுந்தது போன்ற உணர்வு அது. தந்தை இறந்த சோகத்தை சமாளிக்கும்போது, கூடுதலாக இன்னொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நான் ஒரு கிறிஸ்தவர் என்பதால் எனது தந்தையை அங்கு அடக்கம் செய்ய முடியாது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். நான் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கிராம மக்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை” என்று கனத்த குரலில் ரமேஷ் கூறினார்.
கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுகுறித்து சிந்த்வாரா கிராமத் தலைவரின் கணவர் மங்டு பிபிசியிடம் பேசினார். ஓராண்டுக்கு முன்பு, இறந்த உடல்களை அடக்கம் செய்ய கிறிஸ்தவ பழங்குடியினரை அனுமதிக்கக் கூடாது என்று கிராமத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
“ஓராண்டுக்கு முன்பு, பழங்குடியின மக்கள் மற்றும் இந்து சமுதாய மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தனர்.
இதற்கு முன்பு, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கிறிஸ்தவ பழங்குடியின மக்கள் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் இப்போது அதற்கும் அனுமதி இல்லை” என்று குறிப்பிடுகிறார்.
கிராமவாசிகளின் இந்த முடிவுக்கான காரணத்தை நாங்கள் கேட்டபோது, ”கிறிஸ்தவப் பழங்குடியின குடும்பங்கள் கிராம மக்களுடன் பேசுவதை நிறுத்திவிட்டன. எனவே, எங்களுடன் வாழ முடியாத, எங்கள் திருவிழாக்களில் பங்கேற்க முடியாதவர்களை கிராம மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதனால் பழங்குடி சமூக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்” என மங்டு கூறினார்.
மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ள குடும்பத்தில் மூத்தவரான ரமேஷ் கூறுகையில், “இதுகுறித்து நாங்களும் காவல்துறையிடம் புகார் செய்தோம். பலன் இல்லாததால், கடந்த 8ம் தேதி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை அணுகினோம்” என்று நடந்தவற்றை விளக்கினார்.
உயர்நீதிமன்றம் என்ன சொன்னது?
ரமேஷின் வழக்கறிஞரும், உள்ளூர் சமூக ஆர்வலருமான டிகிரி பிரசாத் சௌகான் கூறுகையில், “இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களின்படி தங்கள் சொந்த கிராமங்களில் தங்கள் உடல்களை தகனம் செய்வதற்கான உரிமையை வழங்க சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தை நாங்கள் அணுகியுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே கிறிஸ்தவ சமூகத்தினருக்கான கல்லறை அருகே இருப்பதாலும், மேலும் பொது அமைதியின்மை மற்றும் விரோதம் ஏற்படும் என்பதாலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பு வழங்குவது சரியானதாக இருக்காது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கூறியது.
கண்ணியமான இறுதி ஊர்வலத்திற்கான உரிமை
முன்னதாக, ஏப்ரல் 2024ம் ஆண்டில், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டேயின் அமர்வு இதேபோன்ற வழக்கில் தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தீர்ப்பில், “இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான உரிமை உள்ளது என்பது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்ட சட்டமாகும். உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது கண்ணியத்துடன் கூடிய அர்த்தமுள்ள வாழ்க்கையை குறிக்கிறது. ஒரு நபரின் மரணம் வரை அவருக்கு அந்த உரிமை உள்ளது, மேலும் ஒரு கண்ணியமான இறுதிச் சடங்குக்கான உரிமையும், இறக்கும் வரை வாழ்வதற்கான உரிமையும் அதில் அடங்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே அமர்வுக்கு வந்த வழக்கும் இதே போன்றது தான்.
ஜக்தல்பூரின் சிந்த்பஹர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவர் உயிரிழந்த நிலையில், அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது இறுதிச் சடங்குகளை கிராம மக்கள் அந்த கிராமத்தில் செய்ய மறுத்துவிட்டனர்.
அதுகுறித்து வழக்குப் பதியப்பட்டது.
அப்போது, நீதிபதி ராகேஷ் மோகன் பாண்டே தனது தீர்ப்பின் முதல் வரியில் ராமாயண வசனத்தை மேற்கோள் காட்டி, “உலகில் நண்பர்கள், பணம், தானியங்கள் போன்றவை மிகவும் மதிக்கப்படுகின்றன. ஆனால் தாயும் தாய் நாடும் சொர்க்கத்தை விட உயர்ந்தது.” என்று தீர்ப்பில் எழுதினார்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, ஈஸ்வரின் உடல் இறுதியாக அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பழங்குடி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஐந்தாவது அட்டவணை பஸ்தர் விவகாரத்துக்கும் பொருந்தும். இதன் காரணமாக, கிராமத்தின் முக்கிய முடிவுகள் கிராம பஞ்சாயத்தின் படி எடுக்கப்படுகின்றன.
கிராமப் பஞ்சாயத்து எடுத்த முடிவு
சில மாதங்களுக்கு முன்பு , சிந்த்வாரா கிராமப் பஞ்சாயத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
இத் தீர்மானத்தில், “கிராமத்தின் மரபு, விதிகள் மற்றும் கொள்கையின்படி, கிராம எல்லைக்குள் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும். இந்த மரபுகள், பழக்கவழக்கங்கள் அல்லது கலாசாரத்திலிருந்து விலகிய அல்லது கைவிடப்பட்ட குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை இந்த இடங்களில் அடக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு மேலாகியும் தனது தந்தையை அடக்கம் செய்ய நிலம் கிடைக்காத போராட்டத்தை குறிப்பிட்டுப் பேசிய ரமேஷ், “பஸ்தரில் இறக்கும் நக்சலைட்டுகள் மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் நக்சலைட்டுகள் கூட இல்லை. நக்சலைட்டை விட, கிறிஸ்தவனாக இருப்பது குற்றமா?” என வருத்ததுடன் கேட்கிறார் ரமேஷ்.
அரசுத் தரப்பும் ரமேஷின் பதிலும்
சத்தீஸ்கர் அரசு, உச்சநீதிமன்றத்திற்கு அளித்த முதல் பதிலில், சிந்த்வாரா கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,450 என்று தெரிவித்துள்ளது. இவர்களில் 6,000 பேர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 450 பேர் மஹரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும், கிராமத்தில் சுமார் 100 பேர் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், “சிந்த்வாரா கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்ய பாரம்பரிய கிராம பஞ்சாயத்தால் ஒதுக்கப்பட்ட மயானம் உள்ளது. இந்த கிராம மயானத்தில் பழங்குடியினரை அடக்கம் செய்ய தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரை அடக்கம் செய்யவும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்யவும் / தகனம் செய்யவும் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று அரசு தனது பதிலில் கூறியுள்ளது.
மேலும், “மனுதாரரின் (ரமேஷ் பாகேல்) தாத்தா லகேஷ்வர் பாகேலின் இறுதிச் சடங்குகள் இந்து முறைப்படியும், அவரது அத்தை சாந்தி பாகேலின் இறுதிச் சடங்குகள் மஹரா சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படியும் செய்யப்பட்டன” என விவரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரமேஷ் பாகேல் அரசாங்கத்தின் இந்தக் கருத்தோடு உடன்படவில்லை. அவர் கூறும்போது, ”எங்கள் குடும்பத்தில் தாத்தா தான் முதலில் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அப்பா, மாமா, அத்தை மதம் மாறினார்கள். நாங்கள் மூன்று தலைமுறையாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறோம். தாத்தா மற்றும் அத்தையின் இறுதிச் சடங்குகள் கிறிஸ்துவ மதத்தின்படி நடந்தன” என்று தனது தரப்பு வாதத்தை முன்வைக்கிறார்.
பழங்குடியினருக்கு இடையே நடக்கும் மோதல்
கிறிஸ்தவப் பழங்குடியின மக்களில், தனது உறவினர்களின் உடலை அடக்கம் செய்ய தனது சொந்த கிராமத்தில் நிலம் கிடைக்காமல் தவிப்பது ரமேஷ் பாகேல் மட்டுமல்ல.
டிசம்பர் 30, 2024 அன்று, பஸ்தர் மாவட்டத்தில் உள்ள படே போடல் கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ பெண் இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்வதில் தகராறு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, கிராமத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால், கிராமத் தலைவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில், 5 கிறிஸ்தவ பழங்குடியினரை போலீசார் தாக்குதல் பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
”அரசியல் காரணங்களால் இதுபோன்ற வழக்குகள் இப்போது அதிகம் காணப்படுகின்றன” என்று
சர்வ ஆதிவாசி சமாஜ் அமைப்பின் பஸ்தர் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தாக்கூர் கூறினார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பழங்குடி சமூகம் மற்றும் கிறிஸ்தவ பழங்குடி சமூகம் ஆகிய இரு சமூகத்தினரும் தூண்டப்பட்டு மோதல் நடப்பதை நீங்கள் பார்க்கலாம்.
எங்கள் பழங்குடியின கிராமங்களில் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிப்பது எங்களின் வழக்கம்.
ஆனால், இப்போது அப்படி நடப்பதில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருபுறம் பழங்குடியின சமூகங்கள் இறந்த உடலை அடக்கம் செய்யக்கூடாது அல்லது மதமாற்றம் செய்வது குறித்து ஒருதலைபட்சமான முடிவை எடுத்தாலும், மறுபுறம் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பிரச்னை குறித்து உட்கார்ந்து பேச விரும்புவதில்லை” என்று கூறுகிறார்.
பழங்குடியினர் இந்துக்களா அல்லது கிறிஸ்தவர்களா என்ற கேள்வியுடன் இந்தப் பிரச்னை இணைக்கப்பட்டுள்ளது என்று விகாஸ் திவாரி விளக்குகிறார்.
“கிறிஸ்தவ மிஷனரிகள் முதலில் பஸ்தருக்கு வந்தபோது, பழங்குடியினர் பலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். பழங்குடியினரை இந்துக்களாகக் கருதும் இந்துத்துவா அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக, இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது காணப்படுகின்றன” என்கிறார் விகாஸ் திவாரி.
முன்னதாக பிப்ரவரி 2024 இல், ஜக்தல்பூரை ஒட்டியுள்ள நவகுடா கிராமத்தைச் சேர்ந்த துளசி நாக் என்ற 25 வயது தொழிலாளி கேரளாவில் மின்சாரம் தாக்கி இறந்தார்.
ஆனால், அவரது உடல் கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவர் கிறிஸ்தவர் என்பதால் கிராமத்தில் தகனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
காவல்துறையினர் இச்சம்பவத்தில் தலையிட்ட போதும், ஐந்து நாட்களாக இறந்தவரின் உடல் அப்படியே கிடந்தது. இறுதியில் துளசி நாகின் இறுதிச் சடங்குகளை அவரது கிராமத்தில் செய்ய முடியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2023 இல், பஸ்தர் மாவட்டத்தில் நாராயண்பூரில் உள்ள தேவாலயம் தாக்கப்படுவதற்கு முன்பு, கிறிஸ்தவ பழங்குடியினர் பல கிராமங்களில் புறக்கணிக்கப்பட்டனர்.
அப்போது, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில், பஸ்தர், நாராயண்பூர், கான்கேர், கோண்டகான், தண்டேவாடா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இதுபோன்ற பல சமயங்களில், கிறிஸ்தவ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை வேறு எங்காவது எடுத்துச் சென்று புதைக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு