அநீதிக்கு எதிராக போராட்ட உணர்வோடு செயற்பட்டவர் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஐ.எம்.இல்யாஸ் அவர்கள், அநீதிக்கு எதிராக துணிச்சலோடும் போராட்ட உணர்வோடும் செயற்பட்ட ஒருவர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ், ருக்மன் சேனாநாயக்க, ரெஜினால்ட் பெரேரா, சிறினால் டி மெல் ஆகியோர் தொடர்பில் இன்று (24) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில்,
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருக்மன் சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் உருவாக்கத்துக்கு பாடுபட்டவர்களின் பரம்பரையைச் சார்ந்த ஒருவர். நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1972இல் இருந்து பாராளுமன்றத்தில் பல வருடங்கள் பணியாற்றியவர்.
நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர். பல அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருந்து, ஒரு சிறந்த நிர்வாகத் திறமையோடு அவ் அமைச்சுக்களை செயற்படுத்திக் காட்டியவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.